18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி தீர்ப்பை விமர்சித்தவர்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என காவல்துறை விளக்கமளிக்க நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் ஹேமந்த்குமார் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் விஜய பீஷ்மர் என்பவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். அவரது மருத்துவமனைக்குள் நுழைந்த சிலர் தாங்கள் வழக்கறிஞர்கள் என்று கூறி அவரை தாக்கியதாகவும், மருத்துவமனையில் உள்ள பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள், கிருபாகரன், பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, விஜய் பீஷ்மர் வாடகை பாக்கி வைத்திருந்தால்தான் தகராறு ஏற்பட்டதாகவும், தற்போது வாடகை பாக்கியை தர ஒப்புக்கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர். மேலும், வாடகை தகராறுகள் குறித்து எத்தனை வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது என ஜூன் 25 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு முடிந்த பிறகு, அரசு வழக்கறிஞர்களிடம் இந்த நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே இது தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதுவரை அவர்கள் உரிய முறையில் செயல்படவில்லை நீதிபதி கிருபாகரன் குற்றம் சாட்டினார். பொதுமக்களிடமிருந்து புகார்கள் வரும்பொழுது காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்வதில்லை என்றும், அவசியமான சமயங்களில் தானாக முன்வந்து கூட வழக்குகளை பதிவு செய்வதில்லை என குற்றம் சாட்டினார்.
வழக்கமாக நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பது உரிமைதான் என்றாலும், அந்த தீர்ப்பை எழுதிய நீதிபதியை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார். ஏனெனில் சமீபத்தில் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்த தலைமை நீதிபதிக்கு எதிராக விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாகவும், அதன் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். முதலமைச்சர், அமைச்சர் அல்லது அரசுக்கு எதிராக இதுபோன்ற விமர்சனங்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, நீதித்துறைக்கு எதிரான கருத்துக்களை தானாக முன்வந்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக தொடர்பாக அரசின் விளக்கத்தை ஜூன் 25ஆம் தேதி தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.