/indian-express-tamil/media/media_files/2025/05/22/S8bLzF0CL431cT8zzEjX.jpg)
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் (ED) சோதனை நடத்தியது தொடர்பான வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் சூடுபிடித்தது. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்து வருகிறார். டாஸ்மாக் நிறுவனத்தில் சுமார் ரூபாய் 1,000 கோடி வரை ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், கடந்த மார்ச் மாதம் சென்னை, விழுப்புரம் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
தமிழக அரசின் குற்றச்சாட்டுகள்:
விசாரணையின் தொடக்கத்தில் தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் பின்வருமாறு:
டாஸ்மாக் ஒரு அரசு நிறுவனம். அதில் அதிகாரி யாரேனும் தவறு செய்திருந்தால், அமலாக்கத்துறை தனிப்பட்ட முறையில் அவரிடம் மட்டுமே விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அதை விடுத்து, அரசு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அத்துமீறிச் சோதனை செய்து கோப்புகளைப் பறிமுதல் செய்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு (Federalism) எதிரானது.
எந்த ஒரு வழிமுறையையும் பின்பற்றாமல், அமலாக்கத்துறையினர் முக்கிய அலுவலகத்தில் சோதனை நடத்தி, கணிப் பொறிகள், லேப்டாப்கள் மற்றும் முக்கியமான தரவுகளை எடுத்துச் சென்றது அதிர்ச்சி அளிக்கிறது. வழக்குப்பதிவு செய்தாலே எந்த அரசு நிறுவனத்திலும் சோதனை செய்ய முடியும் என்று அமலாக்கத்துறையின் அதிகாரம் வரம்பு மீறப்பட்டிருக்கிறது. சிபிஐ கூட மாநில அரசிடம் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் நிலையில், அமலாக்கத்துறை அடாவடியுடன் நடந்து கொள்கிறது.
இரவு 1 மணி வரை பெண்களைக்கூட வெளியே செல்ல அனுமதிக்காமல் அமலாக்கத் துறையினர் அடாவடி செய்திருக்கிறார்கள். தனிப்பட்ட நபர்களின் அலைபேசிகளை வாங்கி, அதில் உள்ள அனைத்துத் தரவுகளையும் நவீன உபகரணங்களில் மாற்றியுள்ளனர். இதற்கெல்லாம் யார் அதிகாரம் கொடுத்தது? என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
தலைமை நீதிபதியின் கேள்விகள்:
தமிழக அரசின் வாதங்களுக்குப் பதிலளிக்கும் முன்பே, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமலாக்கத்துறையிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
"உங்களுக்கு சந்தேகம் இருந்தாலே எந்த அரசு நிறுவனத்திலும் உள்ளே நுழைந்து சோதனை செய்து ஆவணங்களை எடுத்துச் செல்வீர்களா? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? டாஸ்மாக் விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாகத் தமிழக அரசே கூட வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், திடீரென அமலாக்கத்துறை ஏன் இந்த விஷயத்தில் மூக்கை நுழைத்தது? என தலைமை நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர்.
அமலாக்கத்துறையின் பதில் வாதம்:
தலைமை நீதிபதியின் கேள்விகள் மற்றும் தமிழக அரசின் குற்றச்சாட்டுகளுக்கு அமலாக்கத்துறை தரப்பில் முன்வைக்கப்பட்ட விளக்கங்கள் பின்வருமாறு:
டாஸ்மாக் விவகாரங்களில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருக்கிறது. அதனால் தான் பண மோசடி (Money Laundering) கோணத்தில் நாங்கள் விசாரணையைத் தொடங்கினோம். எங்கள் விசாரணையில் ஒரு பகுதிதான் நடத்தப்பட்ட சோதனை. 38 வழக்குகளை முறையாக விசாரிக்காமல் தமிழ்நாடு அரசு மூடி இருக்கிறது. மேலும் பல்லாயிரம் கோடி ரூபாய் பண மோசடி நடந்திருக்கிறது. அதனால் தான் நாங்கள் இதில் தலையிட்டோம்.
டாஸ்மாக் அலுவலகத்தின் மண்டல ரீதியிலான அதிகாரிகள் ஏராளமான அளவில் லஞ்சம் பெற்று பணியாளர்களை நியமிப்பது போன்ற முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். எம்ஆர்பியை விட அதிக கட்டணம் வசூலிப்பது, அனுமதிக்கப்படாத வெளிநாட்டு மதுபானங்களை விற்பது என அனைத்து முறைகேடுகளிலும் லஞ்சப் பணம் மேல் மட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்குத் தொடர்ந்து பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இரவில் பெண்களைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அமலாக்கத்துறை மறுப்பு தெரிவித்தது. விசாரணை முடிந்ததற்குப் பிறகு, குறிப்பிட்ட நேரத்தில், பெண் அதிகாரிகள் உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற உறுதியான தகவல் கிடைக்கப்பெற்ற அதிகாரிகளின் கணிப்பொறி மற்றும் அலைபேசிகள் மட்டும் தான் ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து அதிகாரிகளுடையதும் செய்யப்படவில்லை என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் பதில்: 6 ஆண்டுகளாக அமலாக்கத்துறை ஈடுபட்டிருக்கும் வழக்கின் விசாரணைகளை நாங்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று தலைமை நீதிபதி பதில் தெரிவித்தார். மேலும் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகத் தனது வாதங்களை வைக்க வேண்டி இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்ததைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணை மதியம் 2:30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.