தமிழகத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக் நீட் தேர்வு குறித்துதான். மாநில பாட்டத்திட்டத்தில் படித்து 1176 மதிப்பெண் பெற்ற அரியலூர் மாணவி, நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போனதால் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரிம் கோர்ட் வரையில் சென்று வழக்குத் தொடர்ந்தும், மருத்துவம் படிக்க முடியாமல் போனதால், மனம் வெறுத்து கடந்த 1ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. கடந்த ஐந்து நாட்களாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், ஆட்சியாளர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து வந்தார். தமிழக அரசு சார்பாக நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சுப்ரிம் கோர்ட், நீட் தேர்வுக்கு தடை விதித்தது. மத்தியில் பிஜேபி ஆட்சி அமைந்ததும், மீண்டும் நீட் தேர்வு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டது. அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடும் ஆட்சேபனையை தெரிவித்தார்.
பாளையங்கோட்டையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்திலும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்ததோடு, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு இல்லாமலேயே மருத்துவ கல்லூரி அட்மிஷன் நடைபெறும் என்று உறுதி அளித்திருந்தார்.
ஆனால், அவர் மறைந்த பின்னர் அதிமுக அரசு நீட் தேர்வை ஆதரித்து கையெழுத்துப் போட்டனர். பல்வேறு கால கட்டங்களில் ஜெயலலிதா நீட் தேர்வுக்கு எதிராக பேசிய பேச்சுக்களின் தொகுப்பை வீடியோவில் காணலாம்.