தமிழகத்தில் 50க்கும் மேலான இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கடந்த 7 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு எங்கு, எப்படி நடந்தது? தற்போது தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன், என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி உள்துறை மற்றும் டி.ஜி.பி-யிடம் மனு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால், அனுமதி அளிக்க அரசுக்கு உத்தரவிடும்படி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள்: கோவை கார் உடைப்பு வழக்கில் திடீர் திருப்பம்: இந்து முன்னணி பிரமுகர் உள்பட 2 பேர் கைது
மனுவில், மற்ற மாநிலங்களில், ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் அனுமதி வழங்கப்படுவது இல்லை. ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தவே காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. அனுமதி மறுக்க அதிகாரம் இல்லை, என கூறப்பட்டது.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இந்தநிலையில், தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்தினால் கலவரம் ஏற்படலாம் என்று பல தலைவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
சுருக்கமாக ஆர்.எஸ்.எஸ் என்று அழைக்கப்படும் ராஷ்ட்ரீய சுயம்சேவாக் சங்கம் என்பது இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலது சாரி இந்து அமைப்பு ஆகும். ஆர்.எஸ்.எஸ் இயக்கமானது வட இந்தியா முழுவதும் செழித்து வளர்ந்துள்ள நிலையில், தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பெரிதாக வளரவில்லை.
கடந்த 7 ஆண்டுகள் நிலவரம்
ஆனாலும் கடந்த காலங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புகள் நடந்து கொண்டுதான் இருந்தன. கடந்த 2016 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு அம்பேத்கர் மற்றும் ராஜராஜசோழன் பிறந்த நாள் அன்று நாகர்கோவிலில் நடந்தது. முழு காக்கி பேண்ட் அணிந்து 100க்கும் குறைவானவர்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு அவர்களுக்கு மிகவும் சிறப்பாக வாய்ந்ததாக இருந்தது. காரணம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் அந்த அணிவகுப்பு நடந்தது. ஜனவரி மாதம் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் பேசிய அப்போதைய தமிழகத் தலைவர் ஆனந்த் வெங்கட், 16 ஆண்டுகளாக சென்னையில் எங்கள் அணிவகுப்பை நடத்த முடியாமல் தடுத்தனர் என்று ஜெயலலிதா மற்றும் கருணாநிதியை சாடி பேசியிருந்தார்.
இந்தநிகழ்ச்சியில் அப்போது தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று இருந்தார். பின்னர் அதே ஆண்டில் அக்டோபரில் மதுரையிலும், நவம்பரில் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடந்தது.
அதன்பின்னர் 2018 ஜனவரி மாதத்தில் சென்னை, ஈரோடு, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடந்தது. இதில் சென்னை அணிவகுப்பில் மட்டும் 5000க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டதாக ஆர்.எஸ்.எஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த அணிவகுப்பில் பெரியாரை கடுமையாக விமர்சித்ததோடு, தமிழ்நாட்டை ஆன்மீக பூமி என்றும் பெரியாரின் மண் இல்லை என்றும் கூறப்பட்டது.
2019 ஆம் ஆண்டில் நீலகிரி மாவட்டத்தில் சுமார் 400 பேர் கலந்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த 400 பேருக்கு 250 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். பின்னர் புதுக்கோட்டையில் நடந்த அணிவகுப்பு, போலீசாருடன் வாக்குவாதம் உள்ளிட்ட பல சிக்கல்களுடன் நடந்து முடிந்தது.
அதன்பின்னர் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது 2022 ஆம் ஆண்டில், கொரோனா தொற்று கட்டுபடுத்தப்பட்ட நிலையிலும், மற்ற ஊர்வலங்கள், ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி கோரப்பட்டது. தமிழக அரசு முடிவு எடுக்க காலதாமதம் ஆன நிலையில், கோரிக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்குச் சென்று, தற்போது நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
கடந்த 7 ஆண்டுகளில் நடந்த அணிவகுப்புகளில் பெரியதாக மோதல்களோ அல்லது கலவரமோ நடைபெற்றதாக தெரியவில்லை. ஆனால் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பில் தமிழக அரசியல் தலைவர்களான பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் மீது எதிர்மறையான விமர்சனங்கள் வைக்கக்கூடும் என்பதால், பல கட்சித் தலைவர்கள் அணிவகுப்பு நடக்க கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil