ச.கோசல்ராம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம் என்று அறிவித்திருக்கிறார். ஆனல் அவரின் அரசியல் பிரவேசம் 1994ம் ஆண்டே ஆரம்பமாகிவிட்டது என்பது பலருக்குத் தெரியாது.
1994ம் ஆண்டு சென்னை தரமணியில் 87 ஏக்கரில் 21 கோடி செல்வில் திரைப்பட நகரம் திறக்கப்பட்டது. அதற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்கப்பட்டது. அந்த விழாவிற்கு ரஜினிகாந்த் செல்லவில்லை. சென்னையில் இருந்து அவர் நிகழ்ச்சியை புறகணித்தார்.
இது குறித்து பிரபல வார இதழுக்கு அழித்தப் பேட்டியில், ‘’அந்த திட்டம் எதுக்குண்ணே எனக்குப் புரியலை. ஏற்கனவே இங்க நிறைய ஸ்டுடியோ இருக்கு. அதுலேயெல்லாம் வேலையே இல்லை. அப்படி இருக்கும் போது புதுசா இது மாதிரி எதுக்கு? இரண்டாவது, இது மாதிரியான ஒர் அமைப்புக்கு திரையுலக ஜாம்பாவான்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி இவங்க பேரை வச்சிருக்கலாம். ஓ.கே... அவங்க கட்டினாங்க. அவங்க பேரை வச்சுக்கிட்டாங்க. நோ ப்ராப்ளம். ஆனா சிவாஜி சாரை வைச்சுத் துவக்கியிருக்கலாமே. எப்ப அவரை ஹானர் பண்ணல்லயோ, என்னால ஒத்துக்க முடியலை...’’ என்று கூறியிருந்தார்.
பத்திரிகை வாயிலாக மட்டுமல்ல... நேருக்கு நேராகவும் அவர் சொன்னார். 22.4.95ல் சிவாஜிக்கு செவாலியே விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. அந்த விழாவில் பேசிய ரஜினி, ‘’தரமணியில் திரைப்பட நகர் தொடக்க விழாவில் சிவாஜி சாருக்கு உரிய மரியாதை கொடுகப்படவில்லை. அவரை மேடையில் ஏற்ற வில்லை. அவருக்கு ஜெயலலிதா உரிய மரியாதை கொடுத்திருக்க வேண்டும் என்று நான் உட்பட எல்லோருகே நினைத்தோம். ஆனால் இங்கு ஒரு விழா அதற்காக நடத்தி காட்டிவிட்டார்.’’ என்றார்.
இந்த பேச்சின் எதிரொலியாகத்தான் பாட்ஷா பட விழாவில் ரஜினியின் பேச்சிற்கு ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார் எனபதை ரஜினியே பின்னர் துக்ளக் பத்திரிகையில் விவரித்து இருக்கிறார்.
‘’செவாலியே விழா முடிந்தது. அதன் பிறகு முதல்வர் தரப்பில் இருந்து எனக்கு ஒரு செய்தி வந்தது. செவாலியே விழா முடிந்து திரும்பிய முதல்வர், ருத்திரதாண்டவமே ஆடினார் என்பது தான் அந்த செய்தி.
வீட்டுக்கு திரும்பின சிஎம் நாற்காலியை எட்டி உதைச்சு, ‘அந்த ஆளை நான் அழிக்காம விட்றதில்லை’ன்னு சொல்லி பெரிசா சத்தம் போட்டாங்க என்பது எனக்கு வந்த செய்தி. இது எவ்வளவு தூரம் உண்மை என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உண்மை என்று நம்பக் கூடிய மற்றொரு செய்தியும் கிட்டியது. மிகவும் நம்பகத் தகுந்தவர்களிடம் இருந்து வந்தால் அது உண்மை என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. அது இதுதான். ‘’அடுத்தவாட்டி இந்த ஆளு என்னைப் பற்றி பேசட்டும்! அதுக்கப்புறம் நான் பார்த்துக்கிறேன்’’ என்று முதல்வர் அன்று சொல்லியிருக்கிறார்.
அதன் பின்னர் 14.7.95ல் ரஜினி பாட்ஷா பட விழாவில் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசினார். தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை கட்டுப்படுத்தாவிட்டால் நாடே சுடுகாடாகிவிடும் என்று. அதன் பின்னர் அப்போது அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனை அமைச்சரவையில் இருந்து நீக்கினார், ஜெயலலிதா. அடுத்தடுத்த நிகழ்வுகளில் ரஜினியை மையப்படுத்தியே 96 தேர்தல் நடந்தது.
அன்று ஆரம்பித்த அரசியல், இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ளார், ரஜினிகாந்த்.