ரெட் அலர்ட் என்றால் என்ன ? கேரளாவில் மழை பெய்ய ஆரம்பித்த காலத்தில் இருந்தே மஞ்சள் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் மற்றும் ரெட் அலர்ட் என விதவிதமான வித்தியசமான வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருக்கிறோம். மழை பெய்தால் சரி... அது என்ன ரெட் அலர்ட்? எல்லோருக்கும் இந்த கேள்வி வெகுநாட்களாக இருந்து வருகிறது. “வானிலை அறிக்கை வாசிப்பது” என்று கேட்டுக் கொண்டிருந்த நமக்கு இந்த அலர்ட்கள் என்ற வார்த்தைகளே பயத்தை விளைவிக்கிறது.
ரெட் அலர்ட் என்றால் என்ன ?
வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு அறிவிக்கும் எச்சரிக்கைகள் தான் இந்த அலர்ட்கள். நான்கு வித்தியசமான அலர்ட்கள் நான்கு விதமான காலநிலைகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. அவைகள் பொதுவாக பச்சை எச்சரிக்கை (Green Alert), மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert), அம்பர் அல்லது ஆரஞ்ச் எச்சரிக்கை (Amber Alert), மற்றும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) ஆகும்.
பச்சை எச்சரிக்கை (Green Alert) : பொதுவாக மழை பெய்யும் அறிகுறி வானில் தென்பட்டாலே இந்த எச்சரிக்கை விடப்படும். இதனால் மக்கள் யாரும் பயப்பட வேண்டிய தேவை இல்லை.
மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) : வானிலை மிகவும் மோசமாக இருப்பதை தெரிவிப்பதே இந்த மஞ்சள் எச்சரிக்கை ஆகும். இது போன்ற நேரங்களில் மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைத்துக் கொள்வது நல்லது.
அம்பர் எச்சரிக்கை (Amber Alert) : பொருட்சேதம் அல்லது உயிர்ச் சேதம் ஏற்படுத்தும் அளவிற்கு வானிலை மோசமாக இருக்கும் பட்சத்தில் வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையைத் தரும். இது போன்ற நேரங்களில் மக்கள் பயணங்களை தவிர்ப்பது நலம்.
சிவப்பு எச்சரிக்கை (Red Alert) : மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையிலும், அடிப்படை தேவைகளை அடைய முடியாத நிலை ஏற்படும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போதே இந்த எச்சரிக்கை அளிக்கப்படும். போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படும் வகையில் மழை பெய்யும் போது தான் இது போன்ற எச்சரிக்கைகள் விடப்படும்.
கேரளாவில் ஆகஸ்ட் 12ம் தேதி அங்கிருக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. வருகின்ற 7ம் தேதி தமிழகம் மற்றும் கேரள மாவட்டங்களில் பலத்த மழை இருக்கும் என்று கணித்த வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை கொடுத்துள்ளது. மேலும் படிக்க தமிழகத்திலும் ரெட் அலர்ட்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.