சேகர் ரெட்டிக்கு எந்த அரசியல்வாதிகளோடோ, அரசு அதிகாரிகளோடோ தொடர்பு இல்லை என்று திடீரென அறிவித்துள்ளார். இதன் பின்னணி என்ன என்பது அரசியல் வட்டாரங்களில் ஹாட்டாக விவாதிக்கப்படுகிறது.
ஜெயல்லிதா உயிருடன் இருந்த போது, முக்கியமான பிரமுகராக வலம் வந்தவர், சேகர் ரெட்டி. கடந்த ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பின்னர் அவரை சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்தது. ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ள, அவர் சார்பாக வழக்கறிஞர் மூலம் இன்று காலை பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
’’சேகர் ரெட்டியோ மற்றும் அவர் சார்ந்த கூட்டு நிறுவனமோ தமிழகத்தில் மண்ல் குவாரி உரிமமோ அல்லது குத்தகையோ இதுவரை பெற்றது இல்லை. எங்கள் கட்சிக்காரர் சார்ந்த நிறுவனம் நூற்று கணக்கான லாரிகள் மற்றும் கனரக இயந்திரங்களை சொந்தமாக வைத்து சுரங்கம் மற்றும் கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு வாடகைக்கு விடும் தொழில் மட்டுமே செய்து வருகிறார்கள். அவர் சார்ந்த நிறுவனங்கள் மேற்படி தொழில் செய்வதற்கான அட்வான்ஸ் சேவைவரி ரூ. 30 கோடி செலுத்தியுள்ளனர்.
சேகர் ரெட்டியின் அலுவலகம் மற்றும் வீடுகளில் உள்பட பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவர் வீட்டில் இருந்து பழைய ரூ.12லட்சம் மட்டுமே கண்டறியப்பட்டது. மற்ற அனைத்தும் பழைய மற்றும் புதிய ரூபாய் அவரின் நிறுவனமான எஸ்.ஆர்.எஸ் மைனிங் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் கண்டறியப்பட்டவை. இந்த பணம் சட்டரீதியான தொழில் மூலம் ஈட்டியதாகும். இதற்காக ரூ.31 கோடி அட்வான்ஸ் வருமான வரி செலுத்தப்படுள்ளது.
உண்மை இவ்வாறு இருக்க, கடந்த ஒரு வருடமாக எங்கள் கட்சிக்காரர் சேகர் ரெட்டி பற்றி, சிலர் தனிப்பட்ட முறையில் சில அரசியல்வாதிகளுடனும் அரசு அதிகாரிகளுடனும் வர்த்தக தொடர்பு இருப்பதாக உண்மைக்கு புறம்பாக அவதூறு செய்திகளை தங்களின் சுய விளம்பரத்திற்காக பரப்பி வருகிறார்கள். இனி இது போன்ற பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டாம்.
சேகர் ரெட்டி பற்றியும் அவரது நிறுவனம் பற்றியும் பொய்யான தகவல்களை பரப்பும் நபர்கள், நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அந்த விளம்பரத்தில் சொல்லப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடந்த போது, அவர் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற குற்றசாட்டு எழுந்தது. இந்த ரெய்டைத் தொடர்ந்து, தலைமை செயலாளராக இருந்த ராம் மோகன்ராவ் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடத்தப்பட்டது.
சமீபத்தில் இந்த குற்றச்சாட்டை டிடிவி.தினகரன் பொது மேடையில் பேசினார். அப்போது, எனக்கும் சேகர் ரெட்டிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த முன்னாள் மேயர் சைதை துரைசாமி, சேகர் ரெட்டிக்கும் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் தொடர்பு இருந்தது. ஸ்டாலினின் மகன் உதயநிதியின் சினிமா கம்பெனியான ரெட் ஜெயிண்ட் கம்பெனிக்கும் சேகர் ரெட்டிக்கும் இடையே பண பரிவர்த்தனை இருந்தது என்று குற்றம்சாட்டினார். இது குறித்து ஸ்டாலினோ, உதயநிதியோ இதுவரை எந்த பதிலும் சொன்னதில்லை.
இந்நிலையில் திடீரென சேகர் ரெட்டியிடம் இருந்து இப்படியொரு அறிக்கை வந்துள்ளது. ஓபிஎஸ் சொல்லி அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டாரா? அல்லது மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக இந்த அறிக்கையை வெளியிட்டாரா? என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரபாக விவாதிக்கப்படுகிறது.