ஆர்.கே.நகரில் என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?

ஆர்.கே. நகர் தொகுதி, தேர்தல், ஆணையத்துக்கு அக்னிப் பரீட்சையாக மாறியுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியாமல் தடுமாறுகிறது.

By: December 14, 2017, 4:55:36 PM

இரா.குமார்

ஆர்.கே. நகர் தொகுதி, தேர்தல், ஆணையத்துக்கு அக்னிப் பரீட்சையாக மாறியுள்ளது.

ஜெயலலிதா மறைந்ததால் காலியாக இருக்கும் அவருடைய ஆர்.கே. நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தீவிர தேர்தல் பிரச்சாரம் நடந்துவந்த நிலையில், ”அதிக அளவில் பணப்பட்டுவாட நடக்கிறது. இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை” என்று சொல்லி, தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையம் என்பது, தன்னாட்சி பெற்ற ஒரு அமைப்பு. தேர்தல் வந்துவிட்டால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகூட, தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கும் உத்தரவுகளுக்கும் கட்டுப்பட்டே செயல்பட வேண்டும். அந்த அளவுக்கு சர்வ வல்லமை பெற்றது தேர்தல் ஆணையம். ஒரு தொகுதியில் நடக்கும் இடைத் தேர்தல்தான் என்றாலும்கூட அதை நேர்மையாக நடத்த வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. வாக்காளர்கள் எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல் சுதந்திரமாக வாக்களிக்கக்கூடிய சூழலை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தித் தர வேண்டும். அதனால்தான், தேர்தல் ஆணையத்துக்கு, தேர்தல் அறிவிப்புக்கு பின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையே கட்டுப்படுத்தும் அளவுக்கு பெருமளவு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டால் அதில் உச்ச நீதிமன்றம்கூட தலையிடாது.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்ன என்பது ஒரு காலத்தில் மக்களுக்குத் தெரியாமல் இருந்தது. தேர்தல் ஆணையத்தின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தியதன் மூலம், தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்ன என்பதை மக்களுக்குப் புரியவைத்தவர், 1990 களின் ஆரம்பத்தில் தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷன்தான். தனது அதிகாரத்தை அவர் முழுமையாப் பயன்படுத்தியதால் மிரண்டுபோன மத்திய அரசு, மூன்று ஆணையர்களைக் கொண்டதாக தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு மாற்றியமைத்தது. அந்த அளவுக்கு அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கினார் சேஷன். அவரைத் தொடர்ந்தே, அடுத்து வந்த தேர்தல் ஆணையர்கள், தங்கள் அதிகாரத்தை அதிகம் பயன்படுத்தத் தொடங்கினர். எனினும் சேஷன் அளவுக்குத் துணிச்சலாக முழு அதிகாரத்தையும் அடுத்து வந்த தேர்தல் ஆணையர்கள் பயன்படுத்தினார்கள் என்று சொல்ல முடியாது.

சர்வ அதிகாரம் படைத்த தேர்தல் ஆணையம், ஆர்.கே. நகர் தொகுதியில் பணம் பட்டுவாடாவைக் கட்டுப்படுதத் முடியவில்லை என்று காரணம் காட்டி, தேர்தலை ரத்து செய்த செயல், ஆணையத்துக்கு ஒரு சருக்கல்தான்.

ஆர்.கே. நகரில் தேர்தலை ரத்து செய்த பிறகு, மீண்டும் தேர்தல் நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் சிந்திக்கவே இல்லை. நீதிமன்றம் வரை சென்றதன் விளைவாக இப்போது தேர்தல் நடத்தப்படுகிறது. நீதிமன்றங்களுக்கு இணையாக தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நம்பிக்கை குறைந்து வருவதைக் காண முடிகிறது.

குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளிப் போட்டது, 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்த சசிகலா அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தர மறுத்து, இரட்டை இலையை முடக்கியது. அதே ஆணையம், இபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கு 111 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை ஏற்று இரட்டை இலை சின்னத்தை இப்போது கொடுத்துள்ளது. இவையெல்லாம், தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுகிறதா என்ற சந்தேகத்தை மக்களிடம் எழுப்பியுள்ளன.

ஆர்.கே. நகர் தேர்தல் பற்றி தினம் ஒரு கருத்து நிலவுகிறது. தேர்தல் ரத்து செய்யப்படும் என்று பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி. சேகர் கூறுகிறார். திமுக வெற்றி பெறும் என்பதால், தேர்தலை நிறுத்த ஆளுங்கட்சியான அதிமுகவும் பாஜகவும் சதி செய்கின்றன என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆர்.கே. நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவும் அன்பளிப்புகள் வழங்குவது நடந்துகொண்டுதான் இருக்கிறது. பணப்பட்டுவாடா நடப்பதைத் தடுத்து நிறுத்த முடியாமல் முன்பு தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையம், இப்போது என்ன செய்யப் போகிறது என்பதுதான் இப்போதைய கேள்வி. பணப்பட்டுவாடா காரணம் காட்டி, தேர்தலை மீண்டும் ரத்து செய்யுமானால், தேர்தல் ஆணையம் செயல் திறன் அற்றதாகவே கருதப்படும். இப்படி ஒரு அவமானத்தை தேர்தல் ஆணையம் ஏற்குமா என்பது கேள்விக்குறிதான்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:What is the ec doing in rknagar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X