ஜீயராக என்ன தகுதி வேண்டும் என்பது இப்போதுதான் தெரிய வந்தது என திமுக மாநிலங்களைவை உறுப்பினரும் மகளிரணி செயலாளருமான கனிமொழி எம்பி தெவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து, கடந்த மாதம் 9ம் தேதி ஸ்ரீவில்லிப்புத்தூரில் ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில் ஆண்டாள் பற்றி தவறான கருத்தை தெரிவித்ததாக எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினார்கள். இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம், வைரமுத்துவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார்.
இந்நிலையில் வரும் பிப்ரவரி 3ம் தேதிக்குள் வைரமுத்து, ஆண்டாள் கோயில் முன்பு வந்து வணங்கி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஜீயர், ‘‘எங்களுக்கும் பாட்டிலடிக்க தெரியும்’’ என்று சொல்லியிருந்தார். இதற்கு பல தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று காலை திமுக சார்பில் பஸ்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திமுக மகளிரணி தலைவர் கனிமொழி, வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர். கனிமொழி பேசும் போது, ‘‘இந்த ஆட்சியில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பரிணாம மாற்றங்கள் வளர்ச்சிகள் நடந்துள்ளது. இந்த மேடையில் இருக்கும் எந்த அரசியல்வாதிக்கும் கல்லடிக்க தெரியாது. நான் பிறந்ததில் இருந்து அண்ணன் வைகோ அவர்களை பார்த்து வளர்ந்து வந்துள்ளேன். அவருக்கு நிச்சயமாக சோடா பாட்டில் அடிக்கத் தெரியாது. ஆனால் ஜீயராக வேண்டுமானால், அதற்கு ஒரு டிரெய்னிங் இருக்குது என்பது எனக்கு இன்றைக்குத்தான் தெரியும். சோடா பாட்டில் அடிக்கனும், கல் அடிக்கனும்... இதையெல்லாம் தெரிந்தால்தான் ஜீயராக வர முடியும். இதுவரைக்கும் ஜாதியும் மற்ற தகுதிகளும் அடிப்படையாக இருந்தது என்று கருதினேன். இப்போதுதான் எனக்குத் தெரிகிறது ஜீயராவதுக்கு அடிப்படை தகுதி என்ன என்பது! இதுதான் இந்த ஆட்சி சாதித்திருக்கும் வளர்ச்சி.’’ என்று பேசினார்.