சரவணன் சந்திரன்
குரங்குகளைப் பற்றிச் சொல்லும்போது ஒரு கதை சொல்வார்கள். இது உண்மையா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. காட்டுயிர் சார்ந்தவர்கள் சொன்னால் திருத்திக் கொள்கிறேன். அதே சமயம் இந்த உதாரணம் மிகச் சிறந்ததும்கூட என்பதால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
அரசியல் தலைகளை குரங்கு என்று சொல்கிறாயா என்று கேட்கலாம். எல்லோருமே அங்கே இருந்துதானே கிளம்பி வந்திருக்கிறோம் என்பதால் மன்னித்துக் கொள்ளுங்கள். குரங்கு கதைக்கு வரலாம். கூண்டிற்குள் மாம்பழமோ ஏதோ ஒரு பழமோ வைத்து குரங்குகளுக்குப் பொறி வைப்பார்கள். அந்தக் குரங்கு, கூண்டின் கம்பி இடைவெளிக்குள் கையை நுழைத்து பழத்தை பற்றி விடும். ஆனால் வெளியே எடுக்க முடியாது. பழத்தைத் தூர எறிந்து விட்டு மீண்டும் கையை விடுவித்துக் கொள்ளலாம். ஆனால் அப்படிச் செய்யத் தெரியாது குரங்கிற்கு.
அது பழத்தையும் விடாமல், கையையும் வெளியே எடுக்காமல் மாட்டிக் கொள்ளும். விகடனில் ஹாசிப்ஹான் கருத்துப் படத்தைப் பார்த்துவிட்டே இந்தக் குரங்கு உதாரணத்தைச் சொல்கிறேன். அடிவாங்கினால் இரண்டு பேரும் சேர்ந்து வாங்கலாம் என்கிற நல்லெண்ணம்தான். வேறென்ன? பழத்திலிருந்து கையை எடுக்கிற புத்தி வாய்க்காத நிலையில் அவை படும் பாட்டைச் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன?
பழமும் குரங்கும் என்கிற பழைய கதையை விடுங்கள். ஒருமுறை நண்பர் ஒருத்தர் தாய்லாந்தில் எடுக்கப்பட்ட சில வீடியோக்களை காண்பித்தார். அதில் குரங்குகளைப் பல்வேறு வேலைகளுக்குப் பழக்கப்படுத்தி இருந்தனர். கிட்டத்தட்ட சில மணி நேரங்கள் ஓடிய வீடியோ அது. உட்கார்ந்து பார்த்ததில் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிந்தது. சொல்லிக் கொடுத்த வேலையைத் தவிர வேறு ஒரு சின்ன அசைவைக்கூட பயிற்றுவிக்கப்பட்ட அந்தக் குரங்குகள் காண்பிக்கவில்லை. சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதைப் போல, முகத்தை எங்கேயோ தூக்கி வைத்துக் கொண்டு தனக்குக் கொடுக்கப்பட்ட/பயிற்றுவிக்கப்பட்ட வேலையை மட்டும் இயந்திரத்தனமாகச் செய்து கொண்டிருந்தன அந்தக் குரங்குகள்.
அதேநிலைதான் தமிழக அரசியலிலும் நடந்தேறிக்கொண்டிருக்கிறது. தனியாய் நின்று கம்பு சுற்றி வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றத் திராணியில்லாத நிலையில் ஓபிஎஸ் அணி இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆரம்பத்திலிருந்தே மத்திய அரசு என்கிற கேடயத்தோடு அந்தத் தரப்பு களத்தில் நிற்கிறது. கௌரவர்கள் போல சசிகலா அணியினர் ஒன்றாக அணிவகுத்திருக்கிறார்கள். இவர்கள் பாண்டவர்களாகத் தங்களைக் கருதிக் கொண்டு தர்மயுத்தம், அதர்ம யுத்தம் என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் பாரதியார் பாடல்களில் இருந்து தர்மம் மறுபடியும் வெல்லும் என்கிற வரிகளை மட்டும் நீக்கி விட்டால் நல்லது என்று தோன்றுகிறது. இவர்களின் தர்மமெல்லாம் பல்லிளிக்கிறது. கடந்த வாரம் முழுக்க தமிழகத்தின் பல ஊர்களில் பயணம் செய்த போது மக்களிடம், தர்மயுத்தத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டால், அது கேப்டன் நடித்த படமா என்று நக்கலாகக் கேட்கிறார்கள்.
மக்களுக்குத் தெளிவாக எல்லாம் தெரிந்திருக்கிறது. நமக்கு நல்லது எதுவும் நடக்காது என்பது மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. இந்த ஆட்டை சீக்கிரம் கலைந்து விடும் என்பதும் புரிந்திருக்கிறது. தினகரன் உட்பட எத்தனை பேரைத் தூக்கி உள்ளே போட்டாலும் சசிகலா வகையறாக்கள் எதிரிக்கு இருபது கண்ணும் போகணும் என கண்டிப்பாகச் செயல்படுவார்கள் என்பது தெரிந்த கதைதான். அவ்வளவு பெரிய குடும்பத்தில் தோண்டத் தோண்ட ஆட்கள் வந்துகொண்டே இருப்பார்கள்.
ஏற்கனவே அவர்கள் எல்லோருக்கும் வணக்கம் வைத்துப் பழகியவர்கள்தான் இந்த அதிமுக அழகன்கள். ஜெயலலிதாவிற்குப் போடுவதற்கு நிகரான கும்பிடை சசிகலா குடும்பத்தின் கடைக்குட்டிக்கும் போடுவார்கள். மறைமுகமாகவாவது போட்டு விடுவார்கள் என்பதையும் பார்க்கத்தானே போகிறீர்கள். அப்புறம் இன்னொரு கோணத்தில் கேட்கிறேன். தினகரனை அழைத்து நீ வேண்டாம்ப்பா என்று சொன்னால், உடனடியாக சரியென்று சொல்லி விடுவது ஒரு தலைவனுக்கு அழகா? அவருக்கே, நாம் செய்வது தர்மமில்லாத வேலை என்று புரிகிறது. அதனால்தான் பம்முகிறார்.
கைவிலங்கை வாசலுக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, என்னப்பா சமாச்சாரம் என்று கேட்டால், நான்கூட பல்டி அடித்து விடுவேன். பல்டி அடித்தாலும் விடமாட்டோம் என மத்திய அரசு தெளிவாக இருக்கிறது. ராஜாக்களையும், ராணிகளையும் வெட்டிவிட்டு வெறும் சிப்பாய்களை வைத்தே ஆட்டத்தை முடித்துவிடத் துடிக்கிறது அக்கட்சி. அதனடிப்படையில்தான் எடப்பாடியார் ஒரு படி மேலே போய் காரிலிருந்த சைரனை அவரே அகற்றிக் கொண்டிருக்கிறார். சொன்னால் ரெண்டு நிமிஷத்தில் ஆட்கள் அகற்றித் தந்துவிடுவார்கள். ஆனால் அண்ணன் அகற்றியதன் வழியாக கையில் தலை வைத்துக் கும்பிட்டதை மறுபடியும் செய்து காட்டியிருக்கிறார்.
இந்த எபிசோடில் தினகரன் மறுபடி மறுபடி சொல்வது, எதற்காகவோ பயந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை. உண்மைதான் ஓபிஎஸ், ஈபிஎஸ் என எல்லா தலைகளையும் மறைமுகமாக மிரட்டுவதன் வழியாக தோதான ஆட்சியை உருவாக்க பாஜக முயல்கிறது. இதற்கு ஓபிஎஸ் துணை போகிறார். சரிக்குச் சரியாக மோதுவதுதான் பந்தயம். ஆனால் ஒரு தரப்பை ஆதரித்து இன்னொரு தரப்பை மிரட்டுவது சரிக்கு சமமான பந்தயம் இல்லை. ஆனால் எல்லா அரசியல் கட்சிகளும் இதைச் செய்திருக்கின்றன என்பதால் இதைப் பெரிய விஷயமாகக் கருத முடியாது.
ஆனால் இன்னொன்றை உரக்கச் சொல்ல முடியும். இவர்கள் அரசியல் செய்து பழக்கப்படாதவர்கள். ஆடு ராமா என்றால் ஆடிப் பழக்கப்பட்டவர்கள். பாடு ராமா என்றால் படுத்தே விடுவார்கள். நுணுக்கமான அரசியலை இதுவரை அவர்களின் தலைமை செய்ய விட்டதே இல்லை. ஒருசிலர் செய்திருக்கலாம். இப்போது எல்லோருடைய கைவிலங்குகளும் அறுக்கப்பட்டிருக்கின்றன. அதே சமயம் குழப்பங்களும் சந்தேகங்களும் அலங்கரிக்கிற சபையாக அது இருக்கிறது.
இவர்களுக்கு கம்பிக்குள் கையை விட்டு பழத்தில் கைவைக்க மட்டுமே தெரியும். கையை உதறி பழத்தை விடுவித்து விட்டு, சுதந்திரமாக காட்டுக்குள் ஓடத் தெரியாது. அப்படி ஓட அவர்கள் பழக்குவிக்கவும் படவில்லை. மாட்டிக் கொள்வார்கள் சிக்கிரமே. அது தெரியாமல் நான்கு வருடங்களை இவர்களை வைத்து ஓட்டி விடலாம் என்று நினைப்பது பகல் கனவே. அதே சமயம் மடியில் தானாகவே வந்து விழுந்து விடும் என்று நினைத்துக் கொண்டு கடற்கரையில் இன்னொரு தரப்பு காற்று வாங்குவதைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.