சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்தாலும் வலுவான எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட அதிமுக இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. அதிமுகவின் தோல்விக்கு காரணம் பூசல் கீழ்மட்டத்தில் இல்லை, மேல் மட்டத்தில் இருக்கிறது என்று அதிர்ச்சி காரணம் வெளிப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகளில் ஒன்றான அதிமுக ஐந்து மாதங்களுக்கு முன்புதான் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவி ஆட்சியை இழந்தது. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சி என்று தக்கவைத்துக் கொண்டாலும் இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது. மாவட்ட கவுன்சிலர்கள் 138 இடங்களில் திமுக கூட்டணி 137 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் குறிப்பாக திமுக மட்டும் 126 இடங்களிலும் காங்கிரஸ் 8 இடங்களிலும் விசிக 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 1 இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியில் முடிவு அறிவிக்கப்பட்ட மொத்தம் 1356 இடங்களில் திமுக 937 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 33, விசிக 27, சிபிஐ - 3, சிபிஎம் - 4, மதிமுக - 16 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், அதிமுக 199 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து தனித்து போட்டியிட்ட பாமக 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மாநிலத்தில் வலுவான கட்சி கட்டமைப்புகளைக் கொண்டவை திமுகவும் அதிமுகவும் என்பதை தேசியக் கட்சிகளே அறிந்த ஒன்று. அதனால்தான், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, மக்கள் செல்வாக்கு மிக்க மக்கள் கவர்ச்சி கொண்ட தலைவர்கள் யாரும் இல்லாமலே அதிமுக சட்டமன்றத் தேர்தலில் 66 இடங்களில் வெற்றி பெற்றது. 10 ஆண்டு ஆட்சிக்கு பிறகும், பலமான எதிர்க்கட்சியாக நிற்க முடிந்தது. ஆனால், இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அடைந்திருக்கும் தோல்வி என்பது அக்கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் திமுகவை விட 3 சதவீதம் வாக்குகளையே குறைவாக பெற்ற அதிமுக, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்திருக்கிறது என்றால், மேலோட்டமாக பார்க்கிறபோது, கட்சியில் அடிமட்டத்தில் ஏற்பட்ட பூசலே காரணம் என்பதாக தோன்றும். ஆனால், அதிமுகவின் தோல்விக்கு மேல்மட்டத்தில் ஏற்பட்ட பூசலே காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, அதிமுக பொன்விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவித்த நிலையில், ஊரக தேர்தலில் அதிமுகவின் மோசமான தோல்வி வந்துள்ளது. நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றத் தவறியது என்ற அதிமுகவின் பிரச்சாரம் மக்களை ஈர்க்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
இருப்பினும், திமுக தனது பிரச்சாரத்தின் மூலம் 200 தேர்தல் வாக்குறுதிகளை குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றியது - கோவிட் தொற்றுநோய் கையாளப்பட்ட விதத்தில் இருந்து மாநில நிதி குறித்த வெள்ளை அறிக்கை வரை முந்தைய அதிமுக ஆட்சியை குற்றம் சாட்டியுள்ளது.
அதிமுக கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதிமுக இந்த பின்னடைவில் இருந்து மீள, அதிமுகவின் இரட்டை தலைமை ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்கள் கருத்து வேறுபாடுகளை களைந்து, கட்சித் தலைமையகத்திற்கு தவறாமல் சென்று தொண்டர்களைச் சந்திக்க வேண்டும். அதிமுகவில், குழு போட்டிகள் இப்போது மேல் மட்டத்தில்தான் உள்ளது. அடித்தளத்தில் இல்லை. வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலாவது கட்சி தனது செயல்திறனை மேம்படுத்தும் வகையில் அது உடனடியாக செய்யப்பட வேண்டும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், ஏழு மாவட்டங்களில் அதிமுகவின் தோல்வி இந்த மாவட்டங்களில் சட்டமன்ற தேர்தலில் அதன் மோசமான தோல்வியின் தொடர்ச்சியாக வெளிப்பட்டிருக்கிரது. சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, அதிமுக தலைவர்கள் அறிக்கைகளை வெளியிடுவதில் திருப்தி அடைந்துள்ளதாகவும், கட்சி மீண்டும் வெற்றி பெறும் என்ற எண்ணத்தை பொதுமக்களிடையே உருவாக்கத் தவறியதாகவும், கட்சித் தலைவர்கள் மாறுபட்ட கருத்துகளை பேசியதாகவும் அரசியல் நோக்கர்கள் மாற்றுப் பார்வையை முன்வைக்கின்றனர்.
அதிமுக தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்கள், இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வைத்து அதிமுகவை குறைத்து மதிப்பிடத் தேவையில்லை. உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது பெரிய விஷயம் அல்ல. எம்.ஜி.ஆர் காலத்தில்கூட உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது, பின்னர் அடுத்த தேர்தலில் பெரிய வெற்றியை பதிவு செய்தது. எனவே, இந்த தோல்வி கட்சியை பாதிக்காது என்று கூறுகிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.