விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், அம்பேத்கர் நினைவு நாள் அன்று இந்து கோவில்கள் குறித்து பேசியவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 6-ஆம் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய திருமாவளவன், “ராமர் பிறந்த இடத்திற்கு சான்று கேட்க முடியுமா? முடியாது. ஏனென்றால் ராமர் பிறந்திருந்தால்தானே கேட்க முடியும். அதுவொரு இதிகாச கதாபாத்திரம். ஆனால், ராமர் பிறந்த இடம் எனக்கூறி பாபர் மசூதியை இடித்துவிட்டு அங்கு ராமர் கோவிலை கட்ட வேண்டும் என சங் பரிவாரங்கள் கூறுகின்றேன். அப்படியென்றால், இந்தியாவில் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான சிவன், பெருமாள் கோவில்கள், புத்த, சமண கோவில்களை இடித்த கட்டப்பட்டவைதான். அப்படியென்றால், அவற்றை இடித்துவிட்டு பௌத்த விகாரங்களை கட்டவேண்டும் என்பதை ஒரு வாதத்திற்காக சொல்கிறேன்”, என கூறினார்.
இந்நிலையில், திருமாவளவன் “இந்து கோவில்களை இடிக்க வேண்டும்”, என பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, அவரை கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். மேலும், திருமாவளவன் தலையை வெட்டிக்கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் பரிசு தரப்படும் என திருப்பூரைச் சேர்ந்த இந்து முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அறிவித்தார்.
இந்நிலையில், தன் பேச்சு குறித்து விளக்கமளித்த திருமாவளவன், “பௌத்த, சமண விகாரங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன என, அயோத்தி தாசர், மயிலை சீனிவெங்கடேசன் உள்ளிட்ட அறிஞர்கள் பதிவு செய்திருக்கின்றனர். அவற்றை இடித்துதான் சிவன், பெருமாள் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை இடித்துவிட்டு பௌத்த விகாரங்களை கட்ட வேண்டும் என்பதுதான் என்னுடைய வாதம். இந்து கோவில்கலை இடிப்போம் என நான் சொல்லவில்லை”, என கூறினார்.