சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இன்று இரவு பெய்ய உள்ள மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை முழுவதும் நேற்றில் இருந்து நல்ல மழை பெய்துள்ள நிலையில் இப்போது சீரான மழை அடுத்த 2 மணி நேரங்களுக்கு தொடரும் என கூறியுள்ளார்.
தென் சென்னை, ஈ.சி.ஆர் மற்றும் ஓ.எம்.ஆர் ஆகிய இடங்களில் முதலில் மழை நிற்கும் என்றும் பின்னர் மத்திய மற்றும் வடசென்னையில் மழை நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதன்பின் மீண்டும் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை பெய்யும் என்றும் பூண்டி, செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
தற்போதைக்கு, கரையோரப் பகுதிக்கு அருகாமையில் தாழ்வு பகுதி காரணமாக மழை மேகங்கள் அதிகமாக கூடி உள்ளன என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வேகமாக மேற்கு நோக்கி நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி நிலவி வரும் நிலையில் இந்த தாழ்வு மையம் தமிழ்நாடு நோக்கி வடக்கு தமிழகம் - தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனால் சென்னையில் மழை தீவிரம் அடைந்துள்ளதாகவும் சுமார் 360 கிமீ தொலைவில் இந்த புயல் சின்னம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.
காற்றழுத்த தாழ்வு காரணமாக 6 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மற்றும் புதுக்கோட்டை இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளனர்.
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“