தீபாவளி பண்டிகைக்கு, சென்னையில் பட்டாசு எப்போது வெடிக்கலாம் என்பது குறித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை காவல்துறை உத்தரவின்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் இரண்டு மணி நேரம் மட்டுமே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
ஆங்கிலத்தில் படிக்க: When are you allowed to burst crackers this Deepavali in Chennai? Check details of police advisory here
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை மாநகரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல்துறை மேற்கொண்டுள்ளது. காவல்துறையினரின் கருத்துப்படி, கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும், நெரிசலைத் தவிர்க்கவும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் 18,000 போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனங்களால் உருவாக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்து வெடிக்க வேண்டும் என போலீசார் குறிப்பிட்டுள்ளனர். காவல்துறையின் உத்தரவின்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் இரண்டு மணி நேரம் மட்டுமே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளின்படி, 125 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது. சீனாவில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது” என்று காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு போன்ற பரபரப்பான ஷாப்பிங் பகுதிகளில், வரும் நாட்களில், திருவிழாவை முன்னிட்டு, அதிகளவில் மக்கள் கூடுவார்கள் என போலீசார் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளனர்.
தி.நகர், வண்ணாரப்பேட்டை, கீழ்ப்பாக்கம், பூக்கடை ஆகிய பகுதிகளில் 17 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, கூடுதலாக 42 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பொதுமக்களின் வசதிக்காக ஐந்து தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகளும், 10 தற்காலிக உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களுக்கு அறிவிப்பதன் மூலம், திருட்டு மற்றும் குற்றச் செயல்களைத் தடுக்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் போலீசார் அறிவுறுத்தல்களை வழங்குவார்கள்.
ட்ரோன் கேமராக்கள், நான்கு சக்கர வாகனங்கள் ரோந்து/ இரு சக்கர வாகனங்கள் ரோந்து, வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் மொபைல் எக்ஸ்ரே மற்றும் பேக்கேஜ் ஸ்கேனர் வாகனங்களைப் பயன்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளையும் காவல்துறை மேற்கொண்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, செயின் பறிப்புகளை தடுக்க பெண்கள் கழுத்தைச் சுற்றி ஸ்கார்ப் அணிய அறிவுறுத்தப்படுவதாகவும், சாதாரண உடையில் மக்கள் நடமாட்டத்தை போலீசார் கண்காணிப்பார்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் கவனமாக இருக்கவும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அருகே பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்றும், பெரியவர்களின் மேற்பார்வையில் மட்டுமே குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓலைக் குடிசைகள் அல்லது வீடுகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிப்பதும், விளம்பர நோக்கத்திற்காக எந்தவொரு பட்டாசு கடை முன்பும் பட்டாசுகளை கொளுத்துவது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது.
பட்டாசு கடைகளில் புகைபோக்கிகள், மெழுகுவர்த்திகள், பெட்ரோமாக்ஸ் விளக்குகள் போன்றவற்றை கடைகளிலோ அல்லது அருகாமையிலோ பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துகள் ஏற்பட்டால், பொதுமக்கள் உடனடியாக காவல் துறை உதவி எண் 100, தீயணைப்பு துறை உதவி எண் 101, மருத்துவ அவசரநிலை 108, தேசிய உதவி எண் 112 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை மாநகர காவல்துறை குறிப்பிட்டுள்ளபடி, 2022-ம் ஆண்டில், விதிமீறலுக்காக பட்டாசு கடைகள் மீது 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் மற்றும் அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவை மீறி பட்டாசுகளை வெடித்தவர்கள் மீது 271 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வசதியாக, தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் நவம்பர் 13-ஆம் தேதி (திங்கட்கிழமை) அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. நவம்பர் 18-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக கடைபிடிக்கப்ட்டு இந்த விடுமுறை ஈடுசெய்யப்படும் என்று தமிழக அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“