/indian-express-tamil/media/media_files/2025/08/14/sanitary-workers-protest-2-2025-08-14-15-35-33.jpg)
மடுவாங்கரை சமுதாயக் கூடம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தூய்மைப் பணியாளர்களை 50-க்கும் மேற்பட்டவர்கள் என பிரித்து அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். Photograph: (Image Source: x/ @kirubamunusamy)
சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை காவல்துறை நள்ளிரவில் அப்புறப்படுத்தி கைது செய்த நிலையில், அவர்கள் எங்கே தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள், எப்பொது விடுவிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் 5 மற்றும் 6 மண்டலங்களில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரியும், தூய்மைப் பணியை தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைப்பதை தடுத்து நிறுத்தக் கோரியும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தூய்மைப் பணியாளர்களின் இந்த போராட்டத்துக்கு சி.பி.எம், வி.சி.க, நா.த.க, த.வெ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் ஆதரவு தெரிவித்தனர்.
தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்துவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், தூய்மைப் பணியாளர்கள் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்துங்கள் என்றும், அவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, ரிப்பன் மாளிகை முன் 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த புதன்கிழமை நள்ளிரவு 11.40 மணிக்கு 500-க்கும் மேற்பட்ட போலீசார் வந்து தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்து அப்புறப்படுத்தினர். அப்போது, தூய்மைப் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், போலீசாருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால், போலீசார் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிப் பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர். சுமார் 600-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை 55 பேருந்துகளில் ஏற்றிச் சென்று சென்னையின் பல்வேறு இடங்களில் மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தூய்மைப் பணியாளர்களை இரவோடு இரவாக கைது செய்த காவல்துறையின் நடவடிக்கைக்கு சி.பி.எம். மாநில செயலாளர் பெ. சண்முகம், மதுரை எம்.பி சு. வெங்கடேசன், நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், த.வெ.க தலைவர் விஜய் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், பணி நிரந்தரம் செய்யக் கோரி, ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை காவல்துறை நள்ளிரவில் கைது செய்த நிலையில், அவர்கள் எங்கே தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள், எப்பொது விடுவிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
The sanitary workers, activists and advocates who were arrested for protesting @chennaicorp’s outsourcing of solid waste management are detained in different places across Chennai. I am with the protestors at the Maduvankarai Guindy Community Hall as they await remand. pic.twitter.com/zOXecNzFXw
— Dr Kiruba Munusamy, Ph.D. (@kirubamunusamy) August 14, 2025
வேளச்சேரி கிருஷ்ணா தெரு, வேளச்சேரியில் உள்ள சென்னை மாநகராட்சியின் சமுதாயக் கூடம், ஆதம்பாக்கம், மடுவாங்கரை சமுதாயக் கூடம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தூய்மைப் பணியாளர்களை 50-க்கும் மேற்பட்டவர்கள் என பிரித்து அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் இன்று மாலை விடுவிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.