வங்கக்கடல் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை புயலாக உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை புயலாக உருவாகிறது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (மே 26) காலை புயலாகவும், நாளை இரவு தீவிர புயலாகவும் வலுப் பெறும். நாளை நள்ளிரவில் தீவிர புயலாக சாகர் தீவு - கேபுபாரா இடையே வங்கதேசம், மேற்கு வங்கத்தை ஒட்டிய கடற்கரையில் கரையை கடக்க அதிக வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு, அதை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் வடக்கு நோக்கி நகர்ந்து ரீமால் புயலாக வலுப்பெற வாய்ப்பு. ரீமால் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து நாளை காலைக்குள் வடமேற்கு, அதை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தெற்கு கேரள மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, நெல்லை, குமரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு . 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
அதே நேரம் அடுத்த 5 தினங்களுக்கு தமிழகம், புதுவையில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக் கூடும். வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் 27-ம் தேதி வரை சூறாவளிக் காற்று 120 கி.மீ வேகத்திலும், இடையிடையே 135 கி.மீ வேகத்திலும் காற்று வீசக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் உருவாவதையொட்டி தமிழக கடற்பகுதிகளில் இன்று 4.1மீ உயரம் வரை அலைகள் உயரக்கூடும் என இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடற்பகுதியில் குறிப்பாக குளச்சல் முதல் கீழக்கரை வரை மாலை 5,30 மணி முதல் இரவு 11.30 மணி வரை 4.1மீ உயரம் வரை கடல் அலை எழும்ப வாய்ப்பு. வட தமிழக கடற்கரையில் குறிப்பாப பழவேற்காடு முதல் கோயடிக்கரை வரை கடல் அலை 4மீ உயரம் வரை மேல் எழும்ப வாய்ப்பு. இந்நிலையல் தென் வங்கக்கடல், அந்தமான்- இன்று வரை மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு 26-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“