தமிழக அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை அளிக்க அழைப்பு விடுத்த நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை எப்போது வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக உள்ளாட்சி தேர்தல் 2016 ஆம் ஆண்டு நடைபெற இருந்த நிலையில், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்படவில்லை என்று திமுக தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் தேர்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் மாநில தேர்தல் ஆணையத்தை நீதிபதிகள் கடுமையாக கடிந்துகொண்டனர். பின்னர், இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் மறுவரையறைகள் செய்யப்பட்டு தனி தேர்தல் அலுவலர்களை நியமிக்க கேட்டுள்ளது.
இதனிடையே, தமிழக ஆளும் கட்சியான அதிமுக உள்ளாட்சி தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமனு அளிக்க அழைப்பு விடுத்துள்ளது. அதே போல, தமிழக உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து நவம்பர் 16 முதல் விருப்பமனு பெறப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
திமுக 2016 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பின்போது விருப்பமனு அளித்தவர்களின் பட்டியலை சிறுமாற்றங்களுடன் நவம்பர் 14 முதல் 20 வரை பரிசீலனை செய்யும் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபின், உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று கூறினார்.
இந்த நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் டிசம்பர் முதல் வாரத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிடும் என்றும் உள்ளாட்சி தேர்தல் டிசம்பவர் இறுதியில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், மாநில தேர்தல் ஆணையம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல்கட்டமாக பரிசோதனை செய்து தயார் செய்யப்பட்டு வருகிறது. அதே போல, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அமைப்புகளின் தேர்தலை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பத்து மணி நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாநில தேர்தல் ஆணையம் கிராம ஊராட்சி தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்தவும் திட்டமிட்டுள்ளது. கிராம உராட்சி உறுப்பினர் தேர்தல் வாக்குச்சீட்டு வெள்ளை மற்றும் நீல நிறத்திலும் ஊராட்சி தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கான வாக்குச்சீட்டு பச்சை நிறத்திலும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கான வாக்குச்சீட்டு மஞ்சள் நிறத்திலும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஆணையர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி நிர்வாக அலுவலர்கள், மாவட்ட ஊராட்சி செயலர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்குகளைப் பெறுவதற்கு அதிகாரம் உள்ளவர்கள்.
மக்களவைத் தேர்தலில் அமைந்த அதே அரசியல் கட்சிகளின் கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.