2வது மாடியில் துணி காயப்போட்ட போது பரிதாபம் : இடுப்பிலிருந்த குழந்தை நழுவி விழுந்து பலி

குழந்தை திடீரென அவரது இடுப்பில் இருந்து நழுவியது. அதை பிடிக்க அவர் முயலும் முன்பு, மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டது.

இரண்டாவது மாடியில் இருந்து துணிகாயப்போட்டுக் கொண்டிருந்த போது, இடுப்பில் இருந்து குழந்த நழுவி விழுந்தது. இதில் குழந்தை பரிதபமாக உயிரிழந்தது.

இந்த சோக சம்பவம் சென்னை மேற்கு மாம்பலத்தில் நேற்று நடந்தது. அதன் விபரம் வருமாறு.

சென்னை மேற்கு மாம்பலம் துக்காராம் 3வது தெருவில் வசித்து வருபவர் கண்ணன். தி.நகரில் உள்ள பாத்திரக்கடையில் வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் முத்துராஜ் என்ற மகன் இருந்தான்.

நேற்று காலை கண்ணன் வேலைக்குப் போய்விட்டார். வீட்டிலிருந்த மகேஸ்வரி வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, துணைகளை காயப்போட, இரண்டாவது மாடிக்கு வந்தார். குழந்தையை தனியாக வீட்டில் விட்டுவிட்டு வர முடியாததால், இடுப்பில் வைத்திருந்தார். சுவர் ஓரமாக துணியைக் காயப்போட்டுக் கொண்டு இருந்தார். அப்போது குழந்தை திடீரென அவரது இடுப்பில் இருந்து நழுவியது. அதை பிடிக்க அவர் முயலும் முன்பு, மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டது.

நொடிப் பொழுதில் நடந்துவிட்ட அந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த, மகேஸ்வரி துடிதுடித்துப் போனார். ‘ஐயோ… குழந்தை…’ என்று கதறியவாறே, மாடியில் இருந்து கீழே ஓடி வந்தார். அவருடைய சத்தம் கேட்டு, குடியிருப்பில் இருந்தவர்கள், ஓடி வந்து குழந்தையை தூக்கினார்கள்.

குழந்தை மூச்சு பேச்சு இல்லாமல் இருந்ததால், உடனடியாக எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

குழந்தை இறந்த செய்தி கேட்டதும், ‘பெற்ற குழந்தையை நானே கொன்றுவிட்டேனே…’ என மகேஸ்வரி கதறி அழுதது, பார்ப்பவர்களை கண் கலங்க வைத்தது.

இந்த சம்பவம் குறித்து மேற்கு மாம்பலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

×Close
×Close