ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக (எடப்பாடி பழனிசாமி அணி) தரப்பில் தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அதிமுக சார்பில் திறக்கப்பட்ட தேர்தல் பணிமனையில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது.
இதனால் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து அதிமுக விலகிவிட்டதாக என்ற ஐயப்பாடு எழுந்தது. இது தொடர்பாக பாஜக மூத்தத் தலைவர் சீனிவாசனிடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கேள்வியெழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த சீனிவாசன், “அதிமுக இரு அணிகளாக இருப்பதால் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயர் வைத்தால் ஓ.பி.எஸ் எதிர்ப்பு தெரிவிப்பார் என்று கருதி தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று வைத்திருப்பார்கள்.
கூட்டணி தொடர்பான முடிவுகளை மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவிப்பார்” என்றார்.
தொடர்ந்து, “கடந்த ஆண்டு மு.க. ஸ்டாலின் செல்வாக்கு 62 சதவீதம் என்று சொன்ன பத்திரிகை கூட அவரின் செல்வாக்கை 44 ஆக குறைத்துவிட்டது.
தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்” என்றார். தொடர்ந்து ஏன் ஆதரவு அளிப்பதில் ஏன் தாமதம் என்ற கேள்விக்கு, “நாங்கள் தாமதப்படுத்தவில்லை.
உறுதியாக 7ஆம் தேதிக்குள் அறிவித்துவிடுவோம்” என்றார். இது தாமதம் இல்லையா? என்ற கேள்விக்கு, “ஒரு அலுவலகம் 10 மணிக்கு திறக்காமல் 10.01க்கு திறந்தால்தான் தாமதம். 9 மணிக்கே வந்து ஏன் திறக்கவில்லை என்பது தாமதம் அல்ல” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/