தமிழ்நாட்டிற்கு 3 நாள் பயணமாக சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்ற தலைவர்கள் யார் யார் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு 3 நாள் பயணமாக இன்று (19.01.2024) மாலை சென்னைக்கு தனி விமானத்தில் வந்தார். தமிழக நீர்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன், தி.மு.க எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர், சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைக்க சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
சென்னை வந்த பிரதமர் மோடியை, தமிழக அரசு சார்பில் வரவேற்க வந்த துரைமுருகன், கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட தி.மு.க தலைவர்கள் மட்டுமில்லாமல், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் எம்.பி மைத்ரேயன் உள்ளிட்ட தலைவர்களும் பிரதமர் மொடியை வரவேற்க சென்னை விமான நிலையத்திற்கு வரிசை கட்டி வந்தனர்.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், முன்னாள் எம்.பி மைத்ரேயன், த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன், யாதவ மகாஜன சபை தலைவர் தேவநாதன், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவரும் பெரம்பலூர் தொகுதி எம்.பி-யுமான பாரி வேந்தர், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், ஆகியோர் சென்னை விமான நிலையத்திற்கு வந்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.
அதே போல, பா.ஜ.க-வில் இருந்து, பா.ஜ.க தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன், முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.க முத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜா, ஆகியோர் சென்னை விமான நிலையத்திற்கு வந்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து அடையாறில் உள்ள ஐ.என்.எஸ் கடற்படை தளத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, கேலோ இந்தியா போட்டிகளைத் தொடங்கி வைப்பதற்காக அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு விளையாட்டு அரங்கத்திற்கு சென்றார்.
பா.ஜ.க சார்பில், சென்னையில் சிவானந்தா சாலை, பல்லவன் இல்லம், பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் பா.ஜ.க-வினர் கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, வழிநெடுக பிரதமர் நரேந்திர மோடியை மலர்தூவி வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் கேலோ இந்தியா போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“