கணவனின் தகாத உறவால் மனமுடைந்து தற்கொலை செய்துக் கொண்ட பட்டத்தாரி பெண், இறப்பதற்கு முன்பு பேசிய தொலைபேசி ஆடியோவைக் கொண்டு அவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை(3.3.18) அன்று, கிண்டியிலிருந்து சைதாப்பேட்டை சென்றுக்கொண்டிருந்த ரயிலில் இருந்து பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். அவரின் இறப்புக் குறித்து விசாரணை நடத்தப்பட்டப் பின்பு, அவரின் தற்கொலை குறித்து திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்தன.
சென்னை வானகரம் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் தான் தற்கொலை செய்துக் கொண்ட ஜீவிதா. இவருக்கு ஆவடியைச் சேர்ந்த ஐடி ஊழியர் ரோஸ் என்பவருடன் கடந்த 2016 ஆம் ஆண்டு பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த தம்பதினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக கணவர் ரோஸின் நடவடிக்கை ஜீவிதாவிற்கு சந்தேகத்தை வரவைத்துள்ளது. இந்நிலையில் ரோஸுக்கும் அவருடன் பணிப்புரியும் மற்றொரு பெண்ணுக்கும் தவறான உறவு ஏற்பட்டுள்ளது. ஜீவிதாவிற்கு இந்த விவரம் தெரிய வர இது பற்றி கணவரிடம் கேட்டு சண்டைப் போட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த ரோஸ் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஜீவிதாவை வரதட்சணைக் கேட்டு துன்புறுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல், வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது உண்மை என்றும், அவளின் தொடர்பை விட வேண்டும் என்றால், நீ உன் வீட்டிலிருந்து 20 லட்சம் ரூபாய் வாங்கி வரவேண்டும் என்றும் அடித்து துரத்தியுள்ளார்.
இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத ஜீவிதா தனது தோழியின் வீட்டிற்குச் செல்ல கடந்த சனிக்கிழமை தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்ல மின்சார ரயிலில் ஏறியுள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது தம்பிக்கு போன் செய்து அழுதுள்ளார்.
பின்னர் ரயில் கிண்டியிலிருந்து சைதாப்பேட்டை தாண்டும்போது அடையாறு ஆற்றுப்பாலத்தின் மீது சென்றுக்கொண்டிருந்தது. அப்போது திடீரென ரயிலில் இருந்து ஜீவிதா அடையாறு ஆற்றில் குதித்துள்ளார். இதைப் பார்த்த சக பயணிகள் அலறியுள்ளனர்.சிலர் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். ஆனால் அதற்குள் ஜீவிதா ஆற்றில் மூழ்கி இறந்து விட்டார்.
இதனையடுத்து, தனது மகளை அடித்து துன்புறுத்திய ரோஸ் மற்றும் அவரின் குடும்பத்தார் மீது ஜீவிதாவின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் ஜீவிதாவின் ஒரு வயதுக் குழந்தையையும் மீட்டுத் தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், ஜீவிதா இறப்பதிற்கு முன்பு அவரின் கணவருடன் உறவு வைத்திருந்த பெண்ணுடன் தொலைப்பேசியில் பேசியுள்ளார். அவரிடம் தனது கணவரை விட்டுவிடுப்படி கெஞ்சியுள்ளார். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது, பெண் குழந்தை ஒன்று உள்ளது இனிமேல் அவருடன் வெளியில் சுற்றாதீர்கள் என்று கேட்டுள்ளார். இந்த ஆடியோ பதிவை வைத்து போலீசார் ரோஸ் முரளியை கைது செய்துள்ளனர். அத்துடன், ஜீவிதா இறுதியாக அவருக்கு நேர்ந்த கொடுமையை அவரின் தம்பியிடம் பேசிய உரையாடல்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த ஆதரங்களைக் கொண்டு ரோஸ் மீது வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் என பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
https://www.youtube.com/watch?v=8UQSvetgErU
நன்றி: பாலிமர் டிவி
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook