நடிகரும், தயாரிப்பாளருமான சசிகுமாரின் அத்தை மகன் அசோக் குமார் தற்கொலை சம்பவத்துக்குப் பின்னர் மீண்டும் பரபரப்பாக உச்சரிக்கப்படுகிறது, அன்புச் செழியன் பெயர்.
பெயரில்தான் அன்பு இருக்கிறதே தவிர, அவரில் செயலில் ஈவு இரக்கமே இருக்காது என்று சொல்கிறார்கள், அவரைப் பற்றி நன்கறிந்த சினிமா தயாரிப்பாளர்கள்.
அன்புச் செழியன் பெயர் கோலிவுட் மட்டுமல்லாது தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்தது, பிரபல தயாரிப்பாளர் ஜி.வி தற்கொலையின் போதுதான். இவர் வேறு யாருமல்ல… இயக்குநர் மணிரத்னத்தின் சகோதரர்.
‘தளபதி’, ‘அக்னி நட்சத்திரம்’ போன்ற பிரமாண்டமான வெற்றிப் படங்களைத் தயாரித்த ஜிவி, அன்புச் செழியனிடம் வட்டிக்குப் பணம் வாங்கி, வட்டி கட்டி வந்தார். ஆனால், அந்த வட்டிக்கும் வட்டி என அவர் அதிகமாக பணம் கேட்க, அவரால் பணம் கொடுக்க முடியவில்லை. ஒருகட்டத்தில் அவர் வீட்டுக்குள்ளேயே புகுந்த அன்புச் செழியனின் ஆட்கள், அவர் வேட்டி வரை உருவி விட்டார்களாம். அவமானம் தாங்காமல் கூனி குறுகிப்போன ஜிவி அமைதியாகிவிட, அவர் மனைவி மன்றாடி அன்றைக்கு பிரச்னையை முடித்து வைத்துள்ளார். ஆனாலும், குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தைத் தரவேண்டும் என்று கெடு விதித்துள்ளார், அன்புச் செழியன்.
சொன்ன தேதியில் ஜிவியால் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. அன்புச் செழியன் ஆட்களின் கண்களில் படாமல் தவிர்த்து வந்துள்ளார், ஜிவி. நாலா பக்கமும் தேடித்திரிந்த அன்புச் செழியன் ஆட்கள், கொடைக்கானலில் ஜிவியின் மனைவி தங்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர். ஜிவியின் மனைவியை அங்கே சிறை வைத்தடியே, ஜிவியிடம் பஞ்சாயத்து பேசியிருக்கின்றனர். இன்னும் இரண்டு நாட்களுக்குள் பணம் வரவில்லை என்றால், உங்கள் மனைவியை ‘உட்கார வைத்துவிடுவோம்’ என்று மிரட்டியிருக்கிறார்.
எங்கெங்கோ அலைந்தும் அவரால் பணம் திரட்ட முடியாததால், தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அந்த மரணத்தின்போது அன்புச் செழியன் பெயர் அடிபட்டாலும், அவர் மீது வழக்கு ஏதும் போடப்படவில்லை.
அதன் பின்னர்தான் அன்புச் செழியனின் செல்வாக்கு அனைவருக்கும் தெரிய வந்தது. கோலிவுட்டே அவருக்கு சலாம் போட்டது.
இத்தனை செல்வாக்கு அன்புச் செழியனுக்கு எப்படி வந்தது? ராமநாதபுரம் மாவட்டத்தில் பொம்மனேந்தல் கிராமத்தில் ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தவர்தான் அன்புச் செழியன். அங்கிருந்து மதுரையில் குடியேறிய அவர், மதுரை, ராமநாதபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு சின்ன அளவில் பைனான்ஸ் செய்ய ஆரம்பித்தார். அதோடு, மதுரை பகுதியிலும் பெரிய அளவில் பைனான்ஸ் செய்து வந்தார். அப்போது, அவர் அதிமுக கட்சியிலும் இணைந்து செயல்பட்டு வந்தார்.
அந்த சமயத்தில், வளர்ப்பு மகனின் நட்பு கிடைத்துள்ளது. அவர் மூலம் பணத்தை வாங்கி வட்டிக்குக் கொடுத்து, தனது தொழிலை விரிவுபடுத்தியுள்ளார். அதன் பின்னர்தான் அவர் சென்னை வந்து சினிமா படங்களுக்கு பைனான்ஸ் செய்ய ஆரம்பித்துள்ளார்.
பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றும் தொழிலதிபர்களிடம் பணம் வசூலிக்கும் விதமே அலாதியானது. இதற்காகவே தனக்கு கீழே மதுரை பகுதியைச் சேர்ந்த அடியாட்களை வைத்திருந்தார். அவர்களில் மிக முக்கியமானவர் ஐய்யப்பன். புரோட்டோ மாஸ்டராக இருந்த அவர், பின்னாளில் தயாரிப்பாளராக உயர்ந்தார். பின்னர் போலீசில் சிக்கி அடி உதை வாங்கினார். இப்போது அவர் உயிரோடு இல்லை.
பணம் வசூலிக்க வேண்டிய தயாரிப்பாளரைப் பிடித்து சிறை வைக்கும் வேலையை ஐய்யப்பனிடம்தான் கொடுப்பாராம் அன்புச் செழியன். அவரிடம் சிக்கும் தயாரிப்பாளரைப் பிடித்து பொட்டுத் துணி கூட இல்லாமல் அந்த வீட்டிலேயே உட்கார வைத்துவிடுவாராம், ஐய்யப்பன். அப்படியும் அவரிடம் இருந்து பணம் வரவில்லை என்றால், தயாரிப்பாளர் வீட்டுப் பெண்களை உட்கார வைத்து பணத்தை வசூலித்துவிடுவாராம்.
சினிமா தயாரிப்பாளர்களைப் பொறுத்தவரையில், பைனான்ஸியருக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பது தெரியவந்தால், நடிகர்களிடம் அடுத்த படத்துக்கு கால்ஷீட் வாங்குவது கடினம். எனவே, வட்டிக்கு கடன் வாங்கியதை வெளியே சொல்லத் தயங்குவார்கள். குடும்பத்தினருக்குப் பிரச்னை என்பதை வெளியே சொல்ல முடியுமா? அதை தங்கள் கவுரவத்துக்கு இழுக்கு என்று நினைப்பார்கள். இதுதான் அன்புச் செழியனுக்கு பலம்.
நடிகை ரம்பா, சொந்தப் படம் எடுத்தபோது அன்புச் செழியனிடம் பைனான்ஸ் வாங்கியுள்ளார். படத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அவரால் வாங்கிய பணத்துக்கு வட்டி கூட கட்ட முடியவில்லை. அவரையும் ஒருநாள் முழுக்க உட்கார வைத்துவிட்டதாக சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு உண்டு. அதன் பின்னர்தான் அவர் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டாராம்.
நடிகர் அஜித்திடம் இவர் செய்த பஞ்சாயத்து, இவரை கோலிவுட்டில் பெரிய ஆளாக்க உதவியது. பாலாவின் ‘நான் கடவுள்’ படத்துக்கு முதலில் ஒப்பந்தமானது அஜித் தானாம். கதையைக் கேட்ட அவர், படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். அப்போது ஹோட்டல் ஒன்றில் வைத்து பஞ்சாயத்து நடந்துள்ளது. அப்போது நடிகர் அஜித்தை அன்புச் செழியன் அடித்ததாக சொல்கிறார்கள்.
ஜிவி மரணத்துக்குப் பின் திரையுலகம் தனக்குக் கொடுத்த பயம் கலந்த மரியாதையைப் பார்த்த அவர், பாலிவுட்டை தாவூத் இப்ராஹிம் தன்கைக்குள் வைத்துக் கொண்டது போல், கோலிவுட்டை தன் கைக்குள் வைத்துக் கொள்ள விரும்பி காய்களை நகர்த்தினார்.
ஒரு பக்கம் பைனான்ஸ் கொடுத்து வந்தாலும், படத் தயாரிப்பிலும் இறங்கினார். தனுஷ், விஷாலை வைத்து படம் தயாரித்தார். அதில், அவர் எதிர்பார்த்த அளவில் பணம் கிடைக்கவில்லை. பைனான்ஸில்தான் பணம் கொட்டியது. பின்னர், ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படம் எடுத்தார். அப்படி அவர் எடுத்த படம்தான் ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் உருவான ‘ஆண்டவன் கட்டளை’. இந்தப் படத்தை 5 கோடி ரூபாய்க்குள் எடுக்க வேண்டும், லாபத்தில் ஆளுக்குப் பாதி என ஒப்பந்தம் போட்டார், அன்புச் செழியன். படம் ரிலீஸாகி கிட்டத்தட்ட 14 கோடி வரையில் வசூல் செய்தது. ஆனால், படம் ஓடவில்லை என்று சொல்லி, இயக்குநரோடு பஞ்சாயத்து செய்து, சின்ன தொகையை கொடுத்து விரட்டி அடித்துள்ளார்.
தர்மயுத்தத்தைத் தொடங்கிய அமைச்சர் ஒருவரின் பெரும் தொகையை, இவர்தான் பைனான்ஸ் கொடுத்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. நள்ளிரவில் கேட்டால் கூட 5 கோடி ரூபாய் பணத்தை கோணிப்பையில் கொண்டுவந்து கொட்டும் வல்லமை கொண்டவராம், அன்புச் செழியன்.
‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தை எடுத்த தங்கராஜா என்பவருக்கு 20 லட்ச ரூபாய் பணம் கொடுத்துவிட்டு, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை மிரட்டி எழுதி வாங்க முயன்றபோது, அவர் போலீசில் புகார் கொடுத்தார். அப்போதுதான் முதன்முதலில் அன்புச் செழியன் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு, தனது தொழிலை சிறப்பாக செய்து வருகிறார். இப்போது அவரது அராஜகம் எல்லை மீற… அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார். இனிமேலாவது நடவடிக்கை பாயுமா?