வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு யார் தலைமை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக தலமையில்தான் கூட்டணி என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி வெள்ளிக்கிழமை திருவாரூர் மாவட்டத்தில் இன்று கொரோன வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், அரசு திட்டங்கள் செயல்படுத்துவது பற்றி ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்தும் தமிழக அரசு திருவாரூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எந்தளவுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட தொழிலதிபர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். அதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் இருக்கின்ற விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு பெற்று தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அதே போல, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவில் இடம் பெற்றிருக்கிற நிர்வாகிகள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளனர். அவர்களுடைய கோரிக்கைகளை எல்லம் அரசுடைய கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களுடைய கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை இந்த மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,062 பேர். கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2,563 பேர். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இறந்தவர்களுடைய எண்ணிக்கை 39 பேர். 27.8.2020 அன்று மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கை 95 பேர். சிகிச்சை பலனின்றி இறந்த வருடைய எண்ணிக்கை 2 பேர்.
தற்போது திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 460 பேர். திருவாரூர் மாவட்டத்தில் ஒரு கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் உள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 400 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
திருவாரூர் மாவட்டத்தில் காய்ச்சல் முகாம் 2231 முகம் நடத்தப்பட்டுள்ளன. இந்த காய்ச்சல் முகாம்களில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 866 பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இது போல காய்ச்சல் முகாம்கள் நடத்தியதால் தான் நோய் பரவுதல் தடுக்கப்பட்டிருக்கிறது.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய, முதல்வர் பழனிசாமி திருவாரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்தும் இனி செயல்படுத்தப்பட உள்ள அரசு திட்டங்கள் குறித்து பேசினார்.
மேலும் அவர், “டெல்டா மாவட்ட மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசு காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் இயற்றியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 10 கோடி ரூபாயில் உணவுப் பூங்கா ஒன்றை அமைக்க உள்ளோம்.” என்று கூறினார்.
காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்கப்பட்டது குறித்து விதிமுறைகள் வெளியிடப்படுமா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த முதலவர் பழனிசாமி, “காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் 8 தொழில்கள் தொடங்குவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கான சட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. மீத்தேன் மற்றும் நிலக்கரிப் படுகை இதர ஹைட்ரோகார்பன் எடுக்க கிணறுகள் தோண்ட தடை. துத்தநாக உருக்கு ஆலை தொடங்க தடை. செம்பு உருக்கு ஆலை தொடங்க தடை. அலுமினியம் உருக்கு ஆலை தொடங்க தடை. தோல் பதனிடும் தொழிற்சாலைகள் தொடங்க தடை. கப்பல் உடைக்கும் தொழிற்சாலை தொடங்க தடை. விலங்குகளின் உடல் பாகங்கள் பதப்படுத்துதல் தொழில் தொடங்க தடை. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இந்த எட்டு தொழில்கள் தொடங்க தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த 8 தொழில் தொடங்கினால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு இந்த 8 தொழில்களும் தொடங்குவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
நீட் ஜேஇஇ தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என்று 6 மாநில அமைச்சர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். தமிழக அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, “நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இன்றைக்கு தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் உள்ளது. இதனால், மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடுவார்கள். அதனால், மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 08.07.2020 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அந்த கடித நகலையும் உங்களுக்கு அளிக்கிறேன். அதனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வு எழுதப்படுகின்றபோது மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். கொரோனா வைரஸ் பரவல் இருக்கின்ற இந்த சூழலில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நான் கடிதம் எழுதியிருக்கிறேன். மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.”
இதையடுத்து, கூட்டணிக்கு தலைமை யார் என்பதை பாஜகதான் முடிவு செய்யும் என்று தெரிவித்திருக்கிறார்கள். அதனால், கூட்டணிக்கு தலைமை அதிமுகதான் தலைமையா? பாஜகதான் முடிவு செய்வார்களா? உங்களுடைய நிலைப்பாடு என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இன்னும் தேர்தலே வரவில்லை. நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். தேர்தல் வருகின்றபோது யார் தலைமை என்று தெரிவிக்கப்படும். ஆகவே, கூட்டணி யார் யார் என்று எந்தப் பக்கமும் நிர்ணயிக்கப்படவில்லை. எல்லாக் கட்சியிலும் அப்படித்தான் இருக்கிறது. அதிமுகவில் அப்படித்தான் இருக்கிறது. திமுகவிலும் அப்படித்தான் இருக்கிறது. ஆகையால், தேர்தல் வருகின்றபொழுதுதான் கூட்டணி பற்றி முடிவு செய்வார்கள். கிட்டத்தட்ட தேர்தல் வருவதற்கு இன்னும் 7 மாதமாக இருக்கிறது. அதனால், இப்பொது அந்த கருத்து தேவையில்லாதது.” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி, தஞ்சாவூர் சென்று அங்கே கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் முதல்வர் பழனிசாமி பேசுகையில், “கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தஞ்சையில் கோவிட் கேர் மையங்களில் 650 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. சுகாதாரம், உள்ளாட்சி துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தஞ்சையில் 2227 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 1 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தஞ்சையில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கும்பகோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறு, குழந்தைகள் நல மையம் கட்டப்படுகிறது. தஞ்சை பட்டுக்கோட்டையில் மீன் உலர்தளம் அமைக்கப்படும் என்று கூறினார்.
கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, “எங்களைப் பொறுத்தவரை எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுக தலைமையில்தான் தேர்தல். ஒவ்வொரு முறையும் அதிமுக தலைமையில்தான் தேர்தலை சந்தித்துள்ளோம். எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் முதலே தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார். மேலும், கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு குறித்து ஆந்திர, தெலங்கானா ஆகிய தென் மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.