Advertisment

CSIR-ன் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் விஞ்ஞானி: யார் இந்த கலைச்செல்வி?

நவீன கல்வியின் ஆய்வுமொழி ஆங்கிலம் அதை ஆரம்பக் கல்வியில் இருந்து படித்தால்தான் பெரிய பதவிகளுக்கு செல்ல முடியும் என்று ஆங்கில மோகம் நிலவும் சூழ்நிலையில், தமிழ்வழிக் கல்வியில் படித்த ந. கலைச்செல்வி சிஎஸ்ஐஆர்-ன் முதல் பெண் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
Aug 08, 2022 20:29 IST
New Update
CSIR-ன் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் விஞ்ஞானி: யார் இந்த கலைச்செல்வி?

நவீன கல்வியின் ஆய்வுமொழி ஆங்கிலம் அதை ஆரம்பக் கல்வியில் இருந்து படித்தால்தான் பெரிய பதவிகளுக்கு செல்ல முடியும் என்று ஆங்கில மோகம் நிலவும் சூழ்நிலையில், தமிழ்வழிக் கல்வியில் படித்த ந. கலைச்செல்வி அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) முதல் பெண் தலைமை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த ந. கலைச்செல்வி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார்.

Advertisment

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) தலைமை இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி ந.கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் 4,500 விஞ்ஞானிகள் பணியாற்றும் 38 ஆராய்ச்சி மையங்களுக்கு தலைமை தாங்கும் முதல் பெண் இயக்குநர் ஆவார்.

காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர் - மத்திய எலக்ட்ரோகெமிக்கல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக இருந்த ந.கலைச்செல்வி. லித்தியம் அயர்ன் பேட்டரி துறையில் பங்களிப்புகளை அளித்துள்ளார்.

சிஎஸ்ஐஆர் அமைப்பின் தலைமை இயக்குநராக இருந்த சேகர் மாண்டே, கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து, சிஎஸ்ஐஆர் தலைமைப் பொறுப்பை பயோடெக்னாலஜி துறையின் செயலாளர் ராஜேஷ் கோகலே கூடுதலாக கவனித்து வந்தார்.

இந்த நிலையில், சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநராக ந.கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். ந. கலைச்செல்வி 2 ஆண்டுகள் சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் பதவியில் இருப்பார் என மத்தியப் பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி துறையின் செயலாளர் பொறுப்பையும் ந.கலைச்செல்வி வகிப்பார்.

சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ந.கலைச்செல்வி திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர். இங்கே உள்ள செயின்ட் ஜோசப் நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரையும், திருநெல்வேலி காந்திமதி அம்பாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையும் தமிழ் வழியில் படித்தவர் ந. கலைச்செல்வி.

ந. கலைச்செல்வி சிஎஸ்ஐஆர் மையத்தில் விஞ்ஞானியாக தனது பணியை தொடங்கினார். எலக்ட்ரோகெமிக்கல் மின்சார சாதனங்களில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

ந. கலைச்செல்வி இதுவரை 125-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். 6 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமைகளையும் பெற்றுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த ந.கலைச்செல்வி சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டதற்கு அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “இந்தியாவின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமான சிஎஸ்ஐஆர்-ன் முதல் பெண் தலைமை இயக்குநர் என்ற சிறப்பை தமிழகத்தைச் சேர்ந்தகலைச்செல்வி அடைந்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள். தமிழ் வழிக்கல்வி, அறிவியலை கற்றுணரத் தடையாகாது என்பதற்கு கலைச்செல்வியின் இந்த சாதனையே சிறந்த சான்று’ என தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment