தமிழ் நாடு அரசு தலைமை ஜிஜிபியாக இருக்கும் ஜே.கே.திரிபாதி ஜூன் மாதம் ஓய்வுபெற உள்ளதால், அடுத்த டிஜிபி யார் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்ற ஜே.கே.திரிபாதி தற்போது தமிழ்நாடு அரசு காவல்துறையின் தலைமை டிஜிபியாக பதவி வகித்து வருகிறார். இவருடைய பணிக் காலம் வருகிற ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. அதனால், இவருக்கு அடுத்து ஒரு சீனியர் ஐபிஎஸ் அதிகாரியை டிஜிபியாக நியமனம் செய்ய வேண்டும். அடுத்த டிஜிபியாக நியமனம் செய்ய வாய்ப்பு உள்ளதாக 5 சீனியர் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் பேசப்படுகிறது. அதில், தற்போது, விஜிலன்ஸ் இயக்குனரகம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி, ரயில்வே போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு, மதுவிலக்கு அமலாக்கத்துறை சிறப்பு டிஜிபி கரண் சின்ஹா, சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங், சஞ்ஜய் அரோரா ஐபிஎஸ் ஆகிய 5 சீனியார் அதிகாரிகளில் யாராவது ஒருவர் தமிழக டிஜிபியாக நியமனம் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு மாநில அரசின் தலைமை டிஜிபியை நியமனம் செய்வது என்பது மாநகர காவல் ஆணையர் போல மாநில அரசே நியமனம் செய்துவிட முடியாது. தலைமை டிஜிபியை தேர்வு செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு படி, பதவியில் இருக்கிற டிஜிபி ஓய்வு பெறுகிறார் என்றால் அல்லது அந்த பதவிக்கான இடம் காலியாகிறது என்றால், மாநில அரசு அவருக்கு அடுத்து உள்ள தகுதியான அனைத்து சீனியர் ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கும். அந்த சீனியர் அதிகாரி பட்டியல் எப்படி இருக்க வேண்டும் என்றால், அந்த பட்டியலில் உள்ள அதிகாரி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டால், அவர் 6 மாதங்களுக்குள் ஓய்வு பெறுபவராக இருக்கக்கூடாது. அப்படி, டிஜிபியாக நியமனம் செய்தால் அவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு பணியில் இருக்க வேண்டும் என்பது முக்கியம். அப்படி தேர்வு செய்து அனுப்பப்படும் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகமும் யுனியன் சிவில் சர்வீஸ் குழுவும் அந்த பட்டியலை ஆய்வு செய்யும். பிறகு, அந்த குறிப்பிட்ட மாநில அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் ஏற்கெனவே பணியில் உள்ள டிஜிபியையும் அழைத்து கருத்து கேட்டபின், மத்திய உள்துறை அமைச்சகம் அந்த 5 பேர்களில் 3 பேரை தேர்வு செய்து தமிழக அரசுக்கு அனுப்பும். அந்த 3 பேரில் ஒருவரை தமிழக அரசு டிஜிபியாக நியமனம் செய்துகொள்ளலாம் இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.
இந்த நடைமுறையைத் தவிர்ப்பதற்காகத்தான் ஜெயலலிதா, முன்னாள் டிஜிபி ராமாநுஜத்துக்கு பணி நீட்டிப்பு வழங்கினார். அதே போல, கருணாநிதி டிஜிபியாக இருந்த லத்திகா சரணுக்கு பணி நீட்டிப்பு வழங்கினார். ஆனால், தற்போது டிஜிபியாக இருக்கும் ஜே.கே.திரிபாதி பணி ஓய்வுடன் சென்றுவிடுவார் பணி நீட்டிப்புக்கு வாய்ப்பு இல்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, கந்தசாமி, சைலேந்திர பாபு, கரன் சின்ஹா, சஞ்சய் அரோரா, சுனில்குமார் சிங், சஞ்ஜய் அரோரா இவர்களில் ஒருவர் டிஜிபியாக நியமனம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இதில், மிகவும் பாப்புலரான ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபு டிஜிபியாக நியமிக்கப்படலாம் என்று ஊடகங்கள் பலவற்றிலும் பேசப்பட்டது. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் அதில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
அதே போல, திமுக சீனியர் அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உறவினரான டிஜிபி அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவில் ஏடிஜிபியாக உள்ள எம்.ரவி நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் பேசப்பட்டது. ஆனால், முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக அமைச்சரின் நெருங்கிய உறவினர் ஒருவரை டிஜிபியாக நியமிப்பதில் உடன்பாடு இல்லையாம். ஆனால், தற்போது, விஜிலன்ஸ் இயக்குனரகம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி/இயக்குநராக உள்ள கந்தசாமிதான் முதல்வர் ஸ்டாலினுடைய குட் புக்கில் உள்ளாராம்.
ஜே.கே.திரிபாதி ஜூன் மாதம் தான் ஓய்வு பெறுகிறார் என்பதால், அதர்கு முன்னதாக, விஜிலண்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அதிகாரியான கந்தசாமி, இந்த ஒரு மாதங்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் மீது நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப் பிறகு, அவர் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்ட பிறகு, அந்த துறைக்கு ஒரு முக்கியமான அதிகாரி நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதுவரை, கந்தசாமி ஐபிஎஸ்தான் ஸ்டாலினுடை குட்புக்கில் உள்ளாராம். அவர்தான் அடுத்த டிஜிபியாக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.