தமிழ்நாட்டின் டிஜிபி ஜே.கே.திரிபாதியின் பணி காலம் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் புதிய டிஜிபியை முடிவு செய்வதற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மாநில தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர்.
தமிழ்நாடு தலைமை டிஜிபியாக உள்ள ஜே.கே.திரிபாதியின் பணி காலம் ஜூன் 30ம் தேதி முடிவடைகிறது. மாநில காவல்துறை தலைமையான டிஜிபியை நியமிக்க அதிகாரிகளின் குழுவை இறுதி செய்ய புதுடில்லியில் நடைபெறவுள்ள முக்கியமான கூட்டத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், யூ.பி.எஸ்.சி தமிழக அரசிடமிருந்து தகுதியான அதிகாரிகளின் திருத்தப்பட்ட பட்டியலை கேட்டது.
அதில் 1987 முதல் 1989 வரையிலான ஐ.பி.எஸ். பேட்ச்களைச் சேர்ந்த 7 அதிகாரிகளின் பெயர்களை அனுப்புவதாக ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் வட்டாரங்கள் 1990 மற்றும் 1991 பேட்ச்களைச் சேர்ந்த 9 ஏடிஜிபி ரேங்கில் உள்ள அதிகாரிகளின் பெயர்கள் உட்பட உள்ள திருத்தப்பட்ட பட்டியலை யு.பி.எஸ்.சி-க்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
இந்த பட்டியலில், தமிழ்நாடு டிஜிபிக்கான ரேஸில் 1987 ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த சி. சைலேந்திர பாபு ஐபிஎஸ் மிகவும் சீனியராக உள்ளார். அதே பேட்ச்சில் கரண் சிங்காவும் உள்ளார். மூன்றாவதாக 1988ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த சஞ்சய் அரோராவும் இருக்கிறார். இவர் மத்திய பிரதிநிதியாக உள்ளார். புதன்கிழமை மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் சிறப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
டிஜிபிக்கான பரிந்துரை பட்டியலில் மற்ற பேட்ச்களைச் சேர்ந்த சுனில் குமார் சிங் மற்றும் பி.கந்தசாமி ஐபிஎஸ் அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை பிரிவு தலைவராக இருக்கும் கந்தசாமி ஐபிஎஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய நம்பிக்கையைப் பெற்றவராக உள்ளார். அதனால், டிஜிபி ரேஸில் கந்தசாமி பெயரும் உள்ளது.
1989ம் ஆண்டு பேட்ச்சில் எம்.டி. ஷகீல் அக்தர், பிரஜ் கிஷோர் ரவி ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர். யு.பி.எஸ்.சிக்கு அனுப்பப்பட்ட புதிய பட்டியலில் ஷங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், அபாஷ்குமார், மத்தியப் பணியில் உள்ள டி.வி.ரவிச்சந்திரன், 1990 பேட்ச்சில் சீமா அகர்வால், 1991 பேட்ச்சில் அம்ரேஷ் பூஜாரி, எம்.ரவ், கே.ஜெயந்த் முரளி, கருணா சாகர் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஐ.பி.எஸ் காவல் பணியில் 30 ஆண்டுகள் பணி அனுபவத்துடன் டிஜிபி மற்றும் ஏடிஜிபி பதவிகளில் பணியாற்றுகிறார்கள்.
டிஜிபி நியமனம் தொடர்பான பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, ஒரு மாநிலத்தில் டிஜிபியாக நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரி குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பதவியில் இருப்பார்.
டிஜிபி பதவிக்கு தகுதியுள்ளவர்களின் பரிந்துரை பட்டியலில் யுபிஎஸ்சி 2017ல் 5 பெயர்களையும், 2019ல் 3 பெயர்களையும் வேண்டும் என தெளிவுபடுத்தியிருந்தாலும் மாநில அரசு 5 பெயர்களை பரிந்துரைத்து வலியுறுத்த முடியும். இது தமிழ்நாடு போலீஸ் ஸ்தாபன சட்டத்தின் கீழ் விதிகள் மூலம், யுபிஎஸ்சியால் காவல்துறைக்கு அனுப்பப்படும் பட்டியலில் இருந்து மாநில அரசு யாரை வேண்டுமானலும் தேர்வு செய்யலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் யுபிஎஸ்சி அலுவலகத்தில் இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பிரபாகர், தற்போதைய டிஜிபி ஜே.கே.திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இதற்காக இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளனர். விரைவில் தமிழ்நாட்டின் டிஜிபி யார் என்பது தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.