அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதணன் மறைவைத் தொடர்ந்து, பொன் விழாவில் அடியெடுத்து வைக்கும் அதிமுகவின் அடுத்த அவைத் தலைவர் மூத்த தலைவர்கள் செம்மலை மற்றும் ஜெயக்குமார், தமிழ்மகன் உசேன் ஆகியோரின் பெயர்கள் விவாதிக்கப்படுவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக நாளை நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மறைந்த முதல்வர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக, 49 வருடங்களை கடந்து வரும் 17ம் தேதி 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்து பொன்விழாவைக் கொண்டாடுகிறது. அதிமுகவினர் பொன்விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்து வருகின்றனர். அதிமுக பொன்விழாவில் அடியெடுத்து வைக்கும் நாளில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொண்டாடுமாறும் அதிமுகவின் இரட்டைத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தொண்டர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதனால், அதிமுக தொண்டர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் எல்லா இடங்களிலும் அதிமுக கொடி கம்பங்களை அமைத்தும், ஏற்கனவே உள்ள கொடிக் கம்பங்களுக்கு புது வர்ணம் பூசியும் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி பொன்விழா கொண்டாட ஏற்பாடு செய்து வருகின்றனர்.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் பொன் விழா கொண்டாட்ட ஏற்பாடுகள் குறித்து ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக தலைமை கட்சியின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் பொன்விழா ஆண்டு மலரை வெளியிட உள்ளதால் அவை தலைவரை அறிவிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுகவின் அவைத் தலைவராக இருந்த மதுசூதணன் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார். அதன் பிறகு, அதிமுகவின் அடுத்த அவைத் தலைவர் யார் என்ற விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போது அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டத்துக்கு முன்னர், அவைத் தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்தும் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனிடையே, 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை தொடங்குகிறது. அதனால், ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
ஆனால், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற இருந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொன்விழா கொண்டாட்டம் எப்படி கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் அதிமுகவின் அடுத்த அவைத் தலைவர் யார் என்று ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிகிறது.
பொன்விழாவில் அடியெடுத்து வைக்கும் அதிமுகவில் அவைத் தலைவர் பதவி என்பது முக்கியமான பதவி. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, தற்காலிக பொதுச் செயலாளரான சசிகலா வெளியேற்றப்பட்டார். அதற்கு பிறகு, அதிமுகவின் தலைமையாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கட்சியை வழி நடத்தி வருகிறார்கள். ஆனால், எல்லாவற்றிலும் ஈ.பி.எஸ்ஸின் செல்வாக்கு தொடர்ந்து அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். அதிமுகவுக்கு எப்போது பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில்தான், அதிமுகவின் அவைத் தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் ஜெயக்குமார் மற்றும் செம்மலை பொன்னையன் பெயர்களை ஈ.பி.எஸ் தரப்பு பரிந்துரைத்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஓ.பி.எஸ் தரப்பு, அதிமுக அவைத் தலைவராக சிறுபான்மையினர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் தமிழ்மகன் உசேன், அன்வர் ராஜா போன்றவர்களின் பெயர்களை பரிந்துரைத்ததாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக அவைத் தலைவர் பதவிக்கு செம்மலை, ஜெயக்குமார், தமிழ்மகன் உசேன், அன்வர் ராஜா, இவர்களில் யாராவது ஒருவருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து தீவிரமாக விவாதிக்கபடும் என்று தெரிகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.