அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் இறந்ததைத் தொடந்து அதிமுகவில் அடுத்த அவைத் தலைவர் யார் என்ற விவாதங்கள் எழுந்ந்துள்ளன. அதனால், அதிமுக விரைவில் அவைத் தலைவரை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் அடுத்த அவைத் தலைவர் பொறுப்புக்கு அதிமுகவில் உள்ள பல மூத்த தலைவர்களின் பெயர்கள் கட்சிக்குள் பேசப்படுகிறது. அதிமுகவின் மூத்த தலைவர் ரேஸில் சி.பொன்னையன், முன்னாள் எம்.எல்.ஏ ஜேசிடி பிரபாகர், முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் எம்.பி அன்வர் ராஜா, மூத்த தலைவர் தமிழ்மகன் ஹுசேன் ஆகியோரின் பெயர்கள் பேசப்பட்டு வருகிறது.
இவர்கள் மட்டுமல்லாமல் அதிமுக அவைத் தலைவர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் முயற்சிப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓபிஎஸ் தனது ஆதரவாளரான நத்தம் விஸ்வநாதனை அவைத் தலைவராக கொண்டுவர முயற்சிப்பதாகவும் இபிஎஸ் தனது ஆதரவாளரான திண்டுக்கல் சீனிவாசனை அவைத் தலைவராகக் கொண்டுவர விரும்புவதாகவும் மற்றொரு வட்டாரங்கள் தெரிவிக்கிறன. அதே நேரத்தில், அவைத் தலைவர் பதவிக்கு யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து அதிமுகவில் மூத்த தலைவர்களிடம் தீவிரமக கருத்து கேட்பது நடைபெற்றுவருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவுக்கு இன்னும் சில மாதங்களில் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அவைத் தலைவர் தேர்ந்தெடுப்பது நடைபெறும் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன.
நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கிகளாக இருந்த பட்டியல் இனத்தவர் மற்றும் சிறுபான்மையினர்களின் வாக்கு வங்கியை இழந்ததாக அதிமுகவிலேயே பேசப்பட்டது. அதிமுக மூத்த தலைவர் முன்னாள் எம்பி அன்வர் ராஜா அதை மறைமுகமாக ஒரு நேர்காணலில் கூறினார்.
அதனால், அதிமுகவின் இரட்டைத் தலைமை ஓபிஎஸ் இபிஎஸ் தற்போது, தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மக்களுக்கு கட்சியில் இருந்து ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அவைத் தலைவர் பதவியை ஒதுக்க வாய்ப்பு உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக அவைத் தலைவர் பதவிக்கு அன்வர் ராஜா, ஜே.சி.டி. பிரபாகர், தமிழ்மகன் உசேன், எஸ்.பி.எம். சையத் கான், தனபால், அருணாச்சலம், பி.வேணுகோபால், நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல் சீனுவாசன், செங்கோட்டையன் என அரை டஜனுக்கு மேலான பெயர்கள் பேசபட்டாலும், தலித்துகள் அல்லது மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிமுக தலைமையின் சாய்ஸாக இருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால், தனபால் மற்றும் தமிழ்மகன் இருவரின் பெயரும் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இருப்பினும், அதிமுகவில் முக்கியத்துவம் மிக்க அவைத்தலைவர் பதவி யாருக்கு என்பது இன்னும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”