தொகுப்பு : ச.கோசல்ராம்
ரஜினியின் இன்னொரு பரிணாமத்தை, அவரின் ஆழ்ந்த அறிவை அறியும் வாய்ப்பு 1995ம் ஆண்டு கிடைத்தது. ஆம்... 95ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரது பிறந்த நாளான 12,13 ஆகிய இரு நாட்கள் தூர்தர்ஷன் மூலம் தமிழர்களின் வீட்டுக்கே வந்தார், ரஜினி. இரு தினங்களும் அவர் அளித்த பேட்டியில் அரசியல் தொடர்பான சில கேள்விகளும், அதற்கான பதில்களும் ஐஇதமிழ் வாசகர்களுக்காக...
தற்கால அரசியல்வாதிகளிடம் உங்களுக்கு பிடிக்காதது எது?
பெரும்பான்மையான அரசியல்வாதிகள் வாய்ச் சண்டையில் ஈடுபடுகிறார்கள். ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கிறார்கள். என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் வேறு எதையோ செய்கிறார்கள்.
சில அரசியல்வாதிகள் நம் தமிழ் நாட்டை, தமிழர்கள்தான் ஆள வேண்டும் என்று கூறி வருகிறார்களே. அது பற்றி உங்கள் கருத்து?
வரவேற்கத் தக்கது. சரியாகத்தான் சொல்லியிருக்காங்க. ஒரு செட்டியார், கவுண்டர், தேவர், முதலியார், பிராமணர், பிராமணர் அல்லாதோர் ஆளணும்னு சொல்லலையே. என்னைப் பொறுத்தவரை தமிழ் பேசுறவங்க எல்லாம் தமிழர்கள்தான்.
ஜெயலலிதாவிடம் உங்களுக்குப் பிடித்த குணம் எது?
அவருடைய தன்னம்பிக்கை
உங்களைக் கவர்ந்த அரசியல் தலைவர் யார்?
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீக்வான்யூ.
இந்திய நாட்டை ஒழுங்குப்படுத்த ஏதாவது வழி இருக்கா?
இது ரொம்ப முக்கிய பிரச்னைங்க. இது ரொம்ப பெரிய கேள்வி. நம்ம நாட்ல ஜனத்தொகை ரொம்ப ஜாஸ்தி. இதனை ஒரிடத்தில் இருந்து கட்டுப்படுத்துவது என்பது ரொம்ப கஷ்டமான காரியம். இன்னொன்னு இங்கு ஒரு பொதுவான மொழி கிடையாது. வேறு எந்த நாட்டைப் பார்த்தாலும் பொது மொழி இருக்கும். ஒற்றுமைக்கு பங்காற்றுவதில் மொழியின் பங்குதான் மிக அதிகம். இங்கு குறிப்பிட்ட பொதுவான மொழி இல்லாத காரணத்தால் ஒற்றுமையை எதிர்பார்க்க முடியாது. யு.எஸ்.ஏ. மாதிரி யுணைடெட் ஸ்டெட்ஸ் ஆப் இந்தியா. இந்த மாதிரி கருத்தை நான் சொல்றேன். மத்திய அரசில் இருந்து நிறைய நிதி, நிறைய பவர் தரணும். நிதி, ராணுவம், பாதுகாப்பு, எண்ணெய் இவையெல்லாம் மத்திய அரசு வைத்துக் கொண்டு மீதி எல்லாத்தையும் மாநில அரசுக்கு கொடுக்கணும் கொடுத்துவிடு, தீவிரமாக கண்காணிக்கணும். மாநில அரசுகு கொடுக்கிற அதிகாரமும், மாநில அரசோடு நிறுத்திக் கொள்ளாமல் பஞ்சாயத்து வரைக்கும் போக்ணும். கிராமங்கள் ரொம்ப முக்கியம். ஒரு அரசை உருவாக்குவதும், தூக்கி எறியறதும் நகர மக்கள் கையிலோ, பண்ணக்காரர்கள் கையிலோ இல்லை. அது கிராம மக்கள் கையில்தான் இருக்கு. அந்த மறுமலர்ச்சி கிராமத்தில் இருந்து வரணும். வந்தா அந்த நாடே மறுமலர்ச்சி அடையும். இந்தியாவே நல்லா இருக்கும். இது அடியேனுடைய தாழ்ந்த அபிப்ராயம்.
பாரதியார், பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், இவர்களைப் பற்றி ஒவ்வொரு வரி சொல்லுங்கள்?
தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று முழங்கிய புரட்சிக் கவிஞன் பாரதி. தன்னைத்தானே நாத்திகன் என்று அழைத்துக் க்கொண்ட ஆன்மீகவாதி பெரியார். உண்மையான படிகாத மேதை காமராஜர். மாபெரும் தலைவர் அண்ணா. நடிகர் குலத்துக்கு மிகப் பெரிய மரியாதையைக் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.
அரசியல் ஆன்மீகம் ஒப்பிடுங்க?
ஒப்பிட முடியாது. ஒப்பிடவும் கூடாது. ஏன்னா அது பாம்பும் கீரியும் மாதிரி. எதிர்த் திசையில் உள்ளவை.