பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகில் வைத்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி சீசிங் ராஜா ஆந்திராவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரை சென்னை அழைத்து வந்த நிலையில், நீலாங்கரையில் வைத்து போலீசாரை தாக்கிவிட்டு சீசிங் ராஜா தப்ப முயன்றதாக சொல்லப்படுகிறது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் ரவுடி சீசிங் ராஜா சுட்டுக்கொல்லப்பட்டார்.
யார் இந்த சீசிங் ராஜா?
ராஜா சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியில் பிறந்தவர். இவர் தனது இளமைப் பருவத்தில் வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன்பிறகு, வட்டி கட்டாத வாகனங்களை தனியார் நிறுவனங்களுக்காக சீசிங் செய்து கொடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இந்த தொழிலில் அவர் கில்லாடியாக உருவெடுக்க சீசிங் என்கிற அடைமொழி ராஜாவுடன் ஒட்டிக் கொண்டுள்ளது.
பின் நாளில் சீசிங் ராஜாவாக வலம் வந்த அவருக்கு ஆள் பலம் அதிகரிக்கவே, அவரது தலைமையிலான கூட்டம் ஆள்கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட வேலைகளில் ஈடுப்பட்டள்ளது. இந்த சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக சீசிங் ராஜா பெயரில் சென்னை முழுதும் உள்ள பல காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படி மெல்ல மெல்ல வளர்ந்து வந்த சீசிங் ராஜாவுக்கு, சென்னையில் ரவுடியாக கொடி கட்டி பறந்து வந்த ஆற்காடு சுரேஷ் எனும் பிரபல ரவுடியின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவரது கூட்டத்தில் சேர்ந்த பிறகு கொலை செய்வதிலும் களமிறங்கியுள்ளார் சீசிங் ராஜா. ஜூனியராக இருந்த அவர் மீது 7 முறை குண்டாஸ் வழக்கு போடப்பட்டுள்ளது.
இப்படி ஆற்காடு சுரேஷ் கூட்டத்தில் ஜூனியர் ரவுடியாக இருந்த சீசிங் ராஜாவை ஏ+ ரவுடியாக மாற்றியது 2010 ஆம் ஆண்டு நடந்த சம்பவம். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் சின்னா. இவரும் ஆற்காடு சுரேஷும் நண்பர்கள். இருவரும் சென்னை புளியந்தோப்பு பகுதியில் பிரபல ரவுடிகளாக வலம் வந்துள்ளனர். இதில் சின்னா அஞ்சலை என்கிற கஞ்சா சப்ளை செய்யும் பெண் தாதாவை காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்தப் பெண்ணை ஆற்காடு சுரேஷ் திருமணம் செய்து விட்டார். இதனால், நண்பர்கள் எதிரிகளாக மாறினார். இருவரும் மாறி மாறி மோதிக் கொண்டனர்.
இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர சின்னாவை தூக்க முடிவு செய்துள்ளார் ஆற்காடு சுரேஷ். இதனையடுத்து, சீசிங் ராஜாவுடன் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டுள்ளார். ஸ்கெட்ச்சை சுரேஷ் போட சம்பவத்தை கச்சிதமாக முடித்துள்ளார் சீசிங். கொலை வழக்கு ஒன்றில் ஆஜராக ரவுடி சின்னா பூந்தமல்லி கோர்ட்டுக்கு தனது வக்கீல் பகத்சிங்குடன் வந்த நிலையில், வழக்கு பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வக்கீல் பகத்சிங் காரில் மதிய உணவு உண்ண சின்னா சென்றுள்ளார். அதற்காக கார் புறப்பட தயாராக இருந்தபோது, காரில் புகுந்து சீசிங் ராஜா மற்றும் ஆற்காடு சுரேஷ் கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலே இறந்துள்ளனர். கோர்ட் வாசலுக்கு முன்பாக நடந்த இரட்டை கொலை சம்பவம் தலைநகர் சென்னையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜா ஜாமீனில் வெளிவந்த நிலையில், தனது கிரைம் ரெக்கார்ட்டை விரிவுபடுத்த தொடங்கியுள்ளார். அவர் 2020ல் மீண்டும் வெளியுலகு அறியும் வகையில் சம்பவம் ஒன்றை செய்திருந்தார். சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை கடத்தி 10 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். அந்த தொழிலதிபர் தப்பித்து ஓடி வந்து போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால், முதலில் புகார் பதிவு செய்யப்படாமல் இருந்துள்ளது.
இதன்பிறகு தான் 2021ல் போலீசார் சீசிங் ராஜாவை கைது செய்துள்ளனர். அப்போது அவரிடம் இருந்து உரிமம் பெறாத ஒரு கை துப்பாக்கி, 14 தோட்டாக்கள், 7 செல்போன்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த சூழலில் தான், 2023ல் நில அபகரிப்பு வழக்கு ஒன்றில் சிக்கியுள்ளார் சீசிங் ராஜா.
சென்னை வேளச்சேரியில் இருந்த ஒருவரது நிலம் சேலத்தில் இருந்துள்ளது. இந்த நிலத்தின் மீது மலேசியாவில் இருந்த ஒருவர் உரிமை கோரியுள்ளார். அது தொடர்பாக வழக்கு கோர்ட்டில் இருந்துள்ளது. அப்போது மலேசியாவில் இருந்த நபருக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளார் சீசிங். நில உரிமையாளர் தியாகராஜன் மருமகளை நிலத்தை எழுதிக் கொடுக்கும் படி போனில் மிரட்டியுள்ளார். ஆனால், அந்தப் பெண் சீசிங் ராஜா மீது புகார் கொடுக்கவே, மீண்டும் போலீசார் ராஜாவை சுற்றி வளைத்தனர்.
சீசிங் ராஜா மீது 5 கொலை வழக்குகள், 5 கொலை முயற்சி வழக்குகள், கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, ஆள்கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 33 வழக்குகள் போடப்பட்டுள்ளன. தற்போது, பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஞ்சலை கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் சீசிங் ராஜா பெயர் மீண்டும் அடிபட்டது.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு வெளியூரில் இருந்து சம்போ செந்தில் ஸ்கெட்ச் போட்டு கொடுத்தாக கூறப்படும் நிலையில், பிளானை கச்சிதமாக முடிக்க ரவுடி கும்பலுக்கு வழிகாட்டியது சீசிங் ராஜா தான் என்று சொல்லப்படுகிறது. அவரை தேட போலீசார் 3 தனிப்படை அமைத்ததுள்ளனர். இந்நிலையில், சீசிங் ராஜா ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியில் உள்ள தனது 2வது மனைவி வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில், சீசிங் ராஜாவை பிடிக்க 3 தனிப்படை போலீசார் ஆந்திர விரைந்துள்ளனர். போலீசார் வருவதை அறிந்து கொண்ட சீசிங் ராஜா அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இருப்பினும், அவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். இந்த நிலையில், கால்வாயில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுக்க போலீசார் சென்னை நீலாங்கரை பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது, நாட்டு துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டதில் காவல்துறை வாகனத்தின்மீது குண்டு பாய்ந்துள்ளது. தற்காப்புக்காக வேளச்சேரி காவல் ஆய்வாளர் விமலன் சுட்டதில் ரவுடி சீசிங் ராஜா உயிரிழந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.