அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் மறைவுக்கு பிறகு, தமிழ்மகன் உசேன் தற்காலிக அவைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை கட்சியின் பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்று கூறுகிறது. அதன் அடிப்படையில், அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி 9-ம் தேதி நடைபெற்றது.
அதற்கு பிறகு, அதிமுக செயற்குழு கூட்டம் 2-வது முறையாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை (டிசம்பர் 1) காலை 10 மணிக்கு செயற்குழு கூட்டம் தொடங்கியது.
அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் இரட்டைத் தலைமை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஆகியோரின் அதிகாரம் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் மூலம் சசிகலாவுக்கு ஒரு தெளிவான செய்தி சொல்லப்படும் என்று பேசப்பட்டது.
அதே நேரத்தில், ஜெயலலிதாவால் அதிமுகவின் நிரந்தர அவைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டு தொடர்ந்து அந்த பதவியில் இருந்து வந்த மதுசூதனன் சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். அதனால், அதிமுக அவைத் தலைவர் யார் என்பது முடிவு செய்யப்பட்டு அவைத்தலைவர் நியமனம் அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிமுகவில் அவைத் தலைவர் பதவிக்கு முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், பொன்னையன், செம்மலை, தமிழ்மகன் உசேன் ஆகியோரின் பெயர்கள் அடிப்பட்டது.
அதிமுகவின் தற்காலிய அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்
இந்த நிலையில்தான், இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் அதிமுக மூத்த தலைவர் தமிழ்மகன் உசேன் அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக நியமனம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், செயற்குழு உறுப்பினர்கள் என 280-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செயற்குழு கூட்டம் தொடங்கியதும் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பிறகு, அதிமுகவில் மறைந்த தலைவர்கள், பிரமுகர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அஞ்சலி தீர்மானத்துக்கு பிறகு, முக்கிய நிர்வாகிகள் பேச அனுமதிக்கப்பட்டனர்.
அதிமுக செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் தலைமையில் நடத்தவ் வேண்டும் என்பது கட்சி விதி என்பதால், அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்துவிட்டார் என்பதால், தற்காலிக அவைத் தலைவரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, அதிமுகவின் மூத்த தலைவர் தமிழ்மகன் உசேன் தற்காலிக அவைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவர் பதவிக்கு தமிழ்மகன் உசேன் பெயரை முன்மொழிந்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் தமிழ் மகன் உசேனை வாழ்த்தி பேசினார்கள்.
யார் இந்த தமிழ்மகன் உசேன்?
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேன் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய காலத்திலிருந்தே பல்வேறு கட்சி பொறுப்புகளில் இருந்து வந்தார். அதிமுக ஆட்சியில் தமிழ்மகன் உசேன் வக்ஃபு வாரிய தலைவர் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது அதிமுகவின் எம்ஜிஆர் மன்றச் செயலாளராக தமிழ்மகன் இருந்து வருகிறார்.
முன்னதாக, அதிமுகவில் இருந்து சிறுபான்மையினர் மாநில செயலாளர் பதவியில் இருந்த முன்னாள் எம்பி அன்வர் ராஜா நேற்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தமிழ்மகன் உசேன் அதிமுக அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.