சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவர் வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை செய்யபட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் மாணவி புகார் அளித்ததன் பேரில் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், தி.மு.க அரசைக் கண்டித்தும் அதிமுக, பாஜக, விஜய்யின் த.வெ.க உள்ளிட்ட கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதையடுத்து அதிமுக சார்பில் இன்று (டிச.30) தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் போனில் பேசிய போது 'சார்... சார்...' என்று யாரோ ஒருவரிடம் பேசியிருப்பதாகவும், அந்த சார் யார்? யார் என்பது குறித்து உயர் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் 'யார் அந்த சார்?' என்ற கேள்வியுடன் தி.மு.க அரசை கண்டித்து அதிமுக சார்பில் கரூர் உள்பட பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த விவகாரம், இ.பி.எஸ் கேள்வி என மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் யார் அந்த சார் என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ் கேள்வி எழுப்பிய நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பதிலளித்துள்ளார். அதில், முதலமைச்சராக இருந்த போது 13 அப்பாவி பொதுமக்களைக் காக்கைக் குருவிகளைச் சுடுவதைப் போல சுட்டுக் கொன்றதையே டி.வி.யைப் பார்த்து தெரிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி இன்னும் திருந்தாமல் பத்திரிகைகளில் வந்த கிசுகிசுவை அடிப்படையாக வைத்து போராட்டம் என்ற பெயரில் மக்களை வாட்டி வதைக்கிறார்.
திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் உயர்கல்வி பயில்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைச் சிதைக்கும் வகையில் சார் யார்? என்று இல்லாத ஒன்றைக் கேட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார். இன்று கூட திராவிட மாடல் அரசின் முன்னோடி திட்டமான புதுமைப்பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று முடித்து உயர்கல்வி பயில்வோருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பாலியல் புகார்களில் பெண்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கவே அஞ்சி நடுங்கிய நிலை திராவிட மாடல் ஆட்சியில் மாற்றப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலாக புகார் தருகிறார்கள்.
அவர்களை மீண்டும் அச்சுறுத்தும் விதமாகத்தான் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை அரசியலையும், போராட்ட நாடகத்தையும் மக்கள் பார்க்கிறார்கள் என்று காட்டமாக பதில் அளித்துள்ளார்.