சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த டிசம்பர் 23ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், தி.மு.க அரசைக் கண்டித்தும், மாணவிக்கு நீதி கேட்டும் அ.தி.மு.க தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில், எதிர்க்கட்சி தலைவர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை சம்பவம், இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது.
உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து இந்த வழக்கு விசாரிக்க வேண்டும் என அ.தி.மு.க நிர்வாகி நீதிமன்றத்தில் மனு வழங்கினார். அதன் படி மனுவை ஏற்று நீதிமன்றம் விசாரித்து உத்தரவிட்டுள்ளது. 3 உயர் பெண் காவல்துறை அதிகாரிகள் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எப்.ஐ.ஆர் தகவல் வெளியானது தவறான முன்னுதாரணம். எப்.ஐ.ஆர்., வெளியானது எப்படி? உண்மை குற்றவாளிகள் தப்பித்து விட கூடாது என்பதற்காகவே அ.தி.மு.க போராட்டம் நடத்துகிறது. ண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பதே அ.தி.மு.க நோக்கம்.
எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த சார் யார்? இது குறித்து போலீசார் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். வேண்டப்பட்ட நபரைக் காப்பாற்ற அமைச்சர்கள் வரிந்து கட்டிக்கொண்டு பேசுகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க வினர் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.