யார் இந்த டிடிவி தினகரன்?

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக போயஸ்கார்டனில் தங்கியிருந்தார். 1999ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில், வெற்றி பெற்றார், தினகரன்.

தமிழக அரசியலில் கடந்த பத்து மாதகாலமாக அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று டிடிவி.தினகரன். யார் இந்த டிடிவி.தினகரன்? அவருடைய ஜாதகத்தை கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாம்.

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா. இவரது அண்ணன் அக்கா வனிதாமணி – விவேகானந்தன் தம்பதிகளின் மூத்த மகன் டிடிவி.தினகரன். 1963ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் பிறந்தவர். 54 வயதாகும் அவருக்கு அனுராதா (மாமன் மகள் – அதாவது சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள்) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். 1987ம் ஆண்டு மரணம் அடைந்தார். அப்போது கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொள்ள, சசிகலாவின் குடும்பத்து இளைஞர்களில் ஒருவராக போயஸ் தோட்டத்துக்கு வந்தவர்தான், டிடிவி தினகரன். 1991-96 ஆண்டு ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது, சூப்பர் டூப்பர் என்ற டிவி நிறுவனத்தை தொடங்கி நடத்தியவர்களில் இவரும் ஒருவர்.

1996ம் ஆண்டு அதிமுக தேர்தலில் தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர் டிடிவி தினகரன் மீது அந்நிய செலவானி மோசடி, பெரா வழக்குகள் போட்டப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தாலும் அந்த வழக்குகள் இன்னமும் நிலுவையிலேயே உள்ளன.

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக போயஸ்கார்டன் இல்லத்தில் தங்கியிருந்தார். 1999ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டார், டிடிவி.தினகரன். அந்த தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். அந்த காலகட்டத்தில் அ.இ.அ.தி.மு.க.வின் இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை மாநில செயலாளராக இருந்தார். பின்னர் கட்சியின் மாநில பொருளாளராகவும் பதவி வகித்து வந்தார்.

2004ம் ஆண்டு மீண்டும் அதே தேனி தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.ஆரூணிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆனாலும் அவர் மீது இருந்த அன்பின் காரணமாக ஜெயலலிதா அவரை, மாநிலங்களவை உறுப்பினராக்கினார். 2010ம் ஆண்டு வரையில் ராஜ்யசபா உறுப்பினராக இருந்த அவர், அதன் பின்னர் போயஸ் கார்டனில் இருந்து வெளியேறினார். கட்சி பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டது. அப்போதும் அவருடைய மனைவி அனுராதா ஜெயா டிவியின் எம்.டி.யாக தனது பணியை தொடர்ந்தார்.

அதன் பின்னர் அரசியலில் இருந்து விலகியே இருந்தார், டிடிவி தினகரன். புதுவையில் தங்கியிருந்து தொழில்களை கவனித்து வந்தார். ஜெயலலிதா உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அப்பலோ மருத்துவமனைக்கு வந்தார், டிடிவி தினகரன். அதன் பின்னர் சசிகலாவுக்கு அரசியல்ரீதியாக எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பித்தார்.

சசிகலாவை கட்சியின் பொது செயலாளர் ஆக்கியது. அதற்கு முன்னதாக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகளை சென்னைக்கு வர வைத்து, நீங்கள்தான் கட்சி பொது செயலாளராக இருக்க வேண்டும் என மன்றாட வைத்தது எல்லாம் இவரது வேலைகள்தான். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு, சசிகலாவை முதல் அமைச்சராக தேர்வு செய்ய வைத்ததும், இவர்தான்.

யாரும் எதிர்பாராதவிதமாக, சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. அவர் ஜெயிலுக்கு செல்வதற்கு ஒரு சில மணி நேரங்களுக்குள் டிடிவி தினகரன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். சசிகலா இல்லாத நிலையில் கட்சியின் அனைத்து முடிவுகளையும் டிடிவி.தினகரனே எடுத்தார்.

இந்நிலையில் டிடிவி.தினகரனால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக போர்கொடி தூக்கினார். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், பஸ்சில் ஏற்றி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைத்து உபசரித்து, ஆட்சியை காப்பாறியதில் டிடிவி.தினகரனுக்குப் பங்கு உண்டு.

எடப்பாடி பழனிச்சாமியை முதல் அமைச்சராக்குவதில் முக்கிய பங்கு வகித்தார், டிடிவி.தினகரன். மறைந்த ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கினார், டிடிவி.தினகரன். ஆனால் வாக்களர்களுக்கு பணம் கொடுக்க அதிமுகவினர் முயன்றதாக குற்றம்சாட்டி தேர்தலை நிறுத்தியது, தேர்தல் கமிஷன்.

அடுத்த சில நாட்களில், இரட்டை இலை சின்னத்தை வாங்க தேர்தல் கமிஷனருக்கு பணம் கொடுக்க முயன்றதாக, சுகாஷ் என்பவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், டிடிவி.தினகரன் கைது செய்து திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். சுமார் ஒரு மாதகாலம் சிறையில் இருந்த அவர், ஜாமீனில் வெளியே வந்தார்.

சென்னை வந்ததும் காட்சிகள் மாறியிருந்தது. எடப்பாடி பழனிச்சாமி தினகரனுக்கு எதிராக செயல்பட தொடங்கினார். எடப்பாடியும், ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் ஒன்றாக இணைந்தனர். டிடிவி.தினகரனுக்கு 18 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தது. அவர்களுடன் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல் அமைச்சர் எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை என்று மனு கொடுத்தார்.

இதையடுத்து, அதிமுக சட்டமன்ற கொறடா, 18 பேர் மீதும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தார். அதை ஏற்று 18 பேரும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். இப்போதும் 18 பேர் உள்பட 4 எம்.பிக்கள் ஆதரவு டிடிவி தினகரனுக்கு இருக்கிறது. அவர் அ.இ.அ.தி.மு.க. அணியின் துணை பொது செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

9.11.17 அன்று தினகரன் மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. அப்போது அவரும், அவருடைய மனைவி அனுராதாவும் கோமாதா பூஜை நடத்தினர்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close