சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் ஓட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டதில் வாக்குவாதம் ஏற்பட்டு பாதுகாவலர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் போலீசார் ஒருவர் தாக்கப்பட்டதாகவும் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் குறித்த தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.
திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி பிப்ரவரி 28 ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
பிப்ரவரி 27 வளசரவாக்கம் காவல் நிலையத்திற்குச் சென்ற சீமான் தரப்பு வழக்கறிஞர்கள், நாளை கிருஷ்ணகிரியில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதால் சீமான் நேரில் ஆஜராக 4 வார அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டனர். ஆனால் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த போலீசார், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் சம்மனை ஒட்டச் சென்றனர்.
நாளை சீமான் ஆஜராகத் தவறினால் அவரைக் கைது செய்ய நேரிடும் என்று குறிப்பிட்டு, சம்மனை சீமான் வீட்டு வாசல் கதவில் போலீசார் ஒட்டினர். உடனே அங்கிருந்த நாதக நிர்வாகி போலீசார் கண்முன்னே ஒட்டப்பட்ட சம்மனைக் கிழித்தார். இதனை கண்ட இன்ஸ்பெக்டர் வீட்டிற்குள் செல்ல முயன்றபோது சீமான் வீட்டுப் பாதுகாவலர் இன்ஸ்பெக்டரைத் தடுத்து அவரைத் தாக்கவும் முயன்றார்.
இதனால், போலீசார் சீமான் வீட்டு பாதுகாவலரையும் சம்மனைக் கிழித்த நாதக நிர்வாகியையும் கைது செய்தனர். சீமான் வீட்டு பாதுகாவலரான முன்னாள் இராணுவ வீரரும் இன்ஸ்பெக்டரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளார். துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சீமான் வீட்டில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. "1991ல் திருப்பெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலமாக ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது, கூடவே 16 பேரும் கொல்லப்பட்டார்கள்.
அதில் பாதுகாப்புக்கு சென்றிருந்த இன்ஸ்பெக்டர் ராஜகுருவும் ஒருவர். அந்த ராஜகுருவுக்கு அப்போது 16 வயதில் ஒரு மகன் இருந்தார். 34 ஆண்டுகள் கடந்த நிலையில் அந்த மகனும் இப்போது போலிஸ் இன்ஸ்பெக்டர். நீலாங்கரை காவல்நிலையத்தில் பணிபுரியும் பிரவீன் ராஜேஷ்தான் அவர். சீமான் வீட்டில் அதிரடி கைது செய்தவர் அவர்தான்" என்று பத்திரிகையாளர் யுவகிருஷ்ணா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.