வராத தேர்தலுக்கு பொறுப்பாளர்கள் நியமனமா? அதிமுக சர்ச்சை

AIADMK By-election incharges: ஆளும்கட்சி, உள்ளாட்சித் தேர்தலை முதலில் நடத்த வேண்டியதுதானே? என்கிற கேள்வியையும் எதிர்கட்சிகள் எழுப்புகின்றன.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில், சபாநாயகரின் நடவடிக்கை சரியே என நீதிமன்றம் தீர்ப்பளித்த சூடு ஆறுவதற்குள், காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கட்சி பொறுப்பாளர்களை நியமித்து அ.தி.மு.க. தலைமை அதிரடித்துள்ளது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். தலைமையில், அக்டோபர் 29 அன்று காலை தலைமைக் கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியல் தயாரானது. மிகக் குறைந்தபட்சமாக திருவாரூர் தொகுதிக்கு மூன்று பொறுப்பாளர்களும், அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதிக்கு பத்து பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறைந்தது ஒரு தொகுதிக்கு ஒரு அமைச்சர் வீதம் இருக்குமாறு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தவிர்த்து, 32 அமைச்சர்களோடு மொத்த அமைச்சரவையும் களமிறக்கப்பட்டுள்ளது. தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியலில், 18 எம்.பி.க்கள், 22 எம்.எல்.ஏ.க்களுக்கும் இடம்பெற்றுள்ளனர்.

ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய தொகுதிகளுக்கான பொறுப்பை துணை முதல்வர் ஓ.பி.எஸ். தலைமை ஏற்றுள்ளார். ஆண்டிப்பட்டி தொகுதிக்கான குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். கழக அமைப்புச் செயலாளர் முருகுமாறன் எம்.எல்.ஏ., தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் ஆகியோர் பெரியகுளம் தொகுதிக்கான பொறுப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

பெரம்பூர் தொகுதியில் அ.ம.மு.க.வைச் சேர்ந்த வெற்றிவேலை வீழ்த்த, மொத்த சென்னை அ.தி.மு.க.வும் களமிறங்குகிறது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அமைச்சர்கள் ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன், விஜிலா சத்தியானந்த் எம்.பி. மற்றும் ஐந்து மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பத்து பேருக்கு இத்தொகுதியில் மட்டும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆம்பூர் தொகுதிக்கான பொறுப்பை கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமை ஏற்றுள்ளார். அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் கே.பி.முனுசாமியுடன் இணைந்து பணியாற்றவுள்ளனர். வைத்திலிங்கத்திற்கு தஞ்சாவூர் தொகுதிக்கான பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இவரோடு அமைச்சர் இரா.துரைக்கண்ணுவும் களமிறக்கப்பட்டுள்ளார். ஆரூர் தொகுதி பொறுப்பை ஏற்றுள்ள கழக அமைப்புச் செயலாளர் பொன்னையனுடன், கே.பி.அன்பழகன், வி.சரோஜா, கே.சி.கருப்பணன் ஆகிய மூன்று அமைச்சர்களும் களமிறங்குகிறார்கள். மிக அதிக எண்ணிக்கையில் அமைச்சர்கள் களமாடப் போவது ஆரூர் தொகுதியில் தான்.

அ.ம.மு.க. அமைப்புச் செயலாளர் செந்தில்பாலாஜியின் தொகுதியான அரவக்குறிச்சியில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் தொகுதிப் பொறுப்பாளர்களை அ.தி.மு.க. நியமித்துள்ளது. அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் ஆகியோரும் தம்பிதுரைக்கு தோள் கொடுக்க களமிறக்கப்பட்டுள்ளனர். நிலக்கோட்டை தொகுதிக்கான பொறுப்பு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனிடம் மானாமதுரை தொகுதி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பாஸ்கரன், அமைப்புச் செயலாளர் ராஜகண்ணப்பன் ஆகியோரும் மானாமதுரையில் களமிறங்குகின்றனர்.

அமைச்சர்கள் பி.தங்கமணி, சேவூர் ராமச்சந்திரனுக்கு குடியாத்தம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு விளாத்திக்குளம் ஆகிய தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அமைச்சர் சி.வி.சண்முகம் பொறுப்பேற்றுள்ள திருப்போரூர் தொகுதியில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் நான்கு மாவட்டச் செயலாளர்களும் தொகுதி பொறுப்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட இத்தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. கோதண்டபாணிக்கு கஷ்டம் தான்.

சாத்தூர் தொகுதிக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் பொறுப்பேற்றுள்ளார். இவரோடு அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் இணைகிறார்கள். திருப்பரங்குன்றம் தொகுதிக்கான பொறுப்பு அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அ.ம.மு.க.வின் தலைமை நிலையச் செயலாளர் பழனியப்பனின் தொகுதியான பாப்பிரெட்டிப்பட்டிக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் பொறுப்பேற்றுள்ளார்.

சோளிங்கர் தொகுதிக்கான பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் எம்.சி.சம்பத், பாலகிருஷ்ண ரெட்டியோடு முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரமும் களமிறங்குகிறார். திருவாரூர் தொகுதியில் தி.மு.க. தான் ஜெயிக்கும் என்று தலைமை கருதிவிட்டது போல. அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் வெறும் மூன்று நபர்களை மட்டுமே கொண்டு பொறுப்பாளர்கள் குழு அமைத்துள்ளது.

பரமக்குடி தொகுதிக்கு அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், எம்.மணிகண்டன், ஒட்டபிடாரம் தொகுதிக்கு அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். அமைச்சர்கள் பென்ஜமின், மாஃபா பாண்டியராஜன் வசம் பூந்தமல்லி தொகுதி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

20 தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பை இன்னும் தேர்தல் ஆணையம் வெளியிடாத சூழலில், மற்ற கட்சிகளுக்கு முன்பாக தொகுதி பொறுப்பாளர்களை நியமித்துள்ளது அ.தி.மு.க. மக்களிடம் வரவேற்பை பெற்ற ஜெயலலிதாவின் சாதனைகளோடு, கடந்த ஒன்றரை ஆண்டு அ.தி.மு.க. அரசின் நடவடிக்கைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பிரச்சார வியூகங்களை வகுக்குமாறு அமைச்சர்களுக்கு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கிடையே இது தொடர்பாக இன்னொரு சர்ச்சையும் ஓடுகிறது. திருப்பரங்குன்றம் தொகுதியில் செயல் வீரர்கள் கூட்டத்தை இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து நடத்திவிட்டு, அடுத்த நாள் தலைமை செயலாளரை வைத்து தேர்தலை தள்ளி வைக்க டெல்லிக்கு கடிதம் எழுதினர். அதேபோல டிடிவி தினகரன் தரப்பு தொடுக்கவிருக்கும் மேல்முறையீடு காரணமாக தேர்தல் தள்ளிப் போகும் என தெரிந்துகொண்டே, தாங்கள் தயாராக இருப்பதுபோல இப்படியொரு டிராமாவை ஆளும் தரப்பு செய்கிறது என்கிற விமர்சனம் எழுந்திருக்கிறது.

வராத தேர்தலுக்கு செயல் வீரர்கள் கூட்டம், தேர்தல் பொறுப்பாளர் நியமனம் என ஷோ காட்டும் ஆளும்கட்சி, தங்கள் முயற்சியில் உள்ளாட்சித் தேர்தலை முதலில் நடத்த வேண்டியதுதானே? என்கிற கேள்வியையும் எதிர்கட்சிகள் எழுப்புகின்றன.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close