கண்ணன்
சில வாரங்களுக்குமுன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை கட்சியைவிட்டுவிலகச் சொன்னார்கள். கட்சியின் இரட்டை இலைச் சின்னத்தை மீட்க தினகரன் லஞ்சம் கொடுக்கம் முயன்றார் என்ற குற்றச்சாட்டுதான் அமைச்சர்களின் இந்த முடிவுக்குக் காரணம். அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக அடுத்த நாளே தினகரன் தான் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதன் பிறகு இரண்டு பிரிவுகளும் இணைந்து அதிமுக ஒரே கட்சியாகிவிடும் என்று கட்சித் தொண்டர்களும் மக்களும் எதிர்பார்த்தனர்.
கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆட்சியிலிருந்து கட்சியிலிருந்து நீக்கப்படுவதை பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான நிபந்தனையாக முன்வைத்தது. இரண்டு தரப்பிலிருந்தும் பேச்சுவார்த்தை நடத்த ஏழு பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் 10 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்றுவரை பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. தொடங்காததற்கு இரண்டு தரப்புகளும் மாறி மாறி குற்றம்சாட்டிவருகின்றன.
இந்நிலையில் மே தினத்தன்று ஆர்.கே.நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தினகரனுக்கும் சசிகலாவுக்கும் ஆதரவாக இருப்பதாகக் குற்றம்சாட்டினார். அதோடு, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கட்சியிலிருந்தும் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக நிரூபணமாகும் வரை கட்சியை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அறிவித்தார்.
இரட்டை இலைச் சின்னத்தை மீட்கும் முயற்சியில் இருக்கும் பழனிச்சாமி தரப்பு, தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்த மனுவில், கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவும் துணைப் பொதுச் செயலாளராக தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரித்துள்ளது. இதுவே பன்னீர்செல்வம் எழுப்பிய சந்தேகத்துக்கான காரணம். அதோடு இன்னும் சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் இயங்கும் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேட்டில் சசிகலாவின் கணவர் ம.நடராஜன், அவரது சகோதரர் திவாகரன் ஆகியோருடன் அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் நிற்கும் புகைப்படம் வெளியானது. சசிகலாவின் உறவினர் மகாதேவனின் மரணம் தொடர்பான நிகழ்வில் அந்தப் புடைப்படம் எடுக்கப்பட்டது. பன்னீர்செல்வத்தின் சந்தேகத்துக்கு இதுவும் வலுசேர்ப்பதாக உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அனால் பழனிச்சாமி தரப்போ, சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் விலக்கியாகிவிட்டது என்று சொல்கிறது. பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றும் பேச்சுவார்த்தையில்தான் சுமுகமான தீர்வு காண முடியும் என்றுஅவரது அணியைச் சேர்ந்தவர்கள் சொல்லிவருகின்றனர். கட்சியின் சின்னம். சசிகலாவை பொதுச் செயலாளராக அறிவித்தது., ஜெயலலிதாவின் மரணம் உள்ளிட்ட வழக்குகள் நடந்துவரும் வேளையில் பேச்சுவார்த்தை தொடங்க இதுபோன்ற முன் நிபந்தனைகளை விதிக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார் பழனிச்சாமி. அவரது அணியில் இருக்கும் அமைச்சர் ஜெயக்குமார் பன்னீர்செல்வம் தரப்பில் இருப்பவர்கள், இணைப்புப் பேச்சுவார்த்தையை விஷயத்தில் ஒவ்வொருவரும் முரணான கருத்துக்களைப் பேசிவருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.எனவே பேச்சுவார்த்தை தொடங்குவதில் இழுபறி நீடிக்கிறது.
பன்னீர்செல்வம் எழுப்பியுள்ள சந்தேகத்தில் நியாயமில்லாமல் இல்லை. சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தலையீடு இருக்கவே இருக்காது என்று உத்தரவாதமாகச் சொல்லும் நிலை உருவாகிவிடவில்லை. ஆனால் பன்னீர்செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் பாஜக பின்னாலிருந்து இயக்குவதாக ஒரு சந்தேகம் எழுப்பப்பட்டுவருகிறது. சில நாட்களுக்கு முன் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் இந்த சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்தார். தன்னைப் பற்றிய இந்த சந்தேகம் பற்றி இதுவரை பன்னீர்செல்வம் வாய் திறந்து பேசவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற நாளிலிருந்து இதுநாள் வரை ஒரே ஒரு வார்த்தைகூட அவர் மத்திய அரசை விமர்சிக்கவில்லை என்றும் குறிப்பிடத்தக்கது.
தினகரன் கைதுக்குப் பிறகு, மத்திய அரசு விவகாரத்தில் பழனிச்சாமி தரப்பும் பன்னீர்செல்வத்தின் நிலைப்பாட்டையே கடைபிடிக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன. “பொது இடங்களில் அமைச்சர்கள் யாரும் மத்திய அரசை விமர்சித்துப் பேசக் கூடாது என்று” முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார்.
இந்நிலையில் பன்னீர்செல்வம் மே 5-ம் தேதி முதல் மாநிலம் தழுவிய சுற்றுப் பயணம் செய்ய கிளம்புகிறார். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை ஒட்டியே சுற்றுப் பயணம் என்று சொல்லப்படுகிறது. பேச்சுவார்த்தையைத் தொடங்காமல் தேர்தலில் வென்று கட்சியின் இரட்டை இலைச் சின்னத்தையும் கட்சியையும் கைப்பற்ற பன்னீர்செல்வம் தரப்பினர் திட்டமிடுவதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
இரு தரப்புகளிலிருந்து எந்த எந்த ஒரு தெளிவான சமிஞைகளும் கிடைக்காத நிலையில் இணைப்புப் பேச்சுவார்த்தை இன்னும் சில வாரங்களுக்காவது தள்ளிப்போகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றுக்கிடையில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் தலைமையில் ஒரு குழு தனியாக பிரிந்து செல்லக்கூடும் என்றும் சசிகலா, தினகரன் சிறையில் இருக்கும் நிலையில் அக்குடும்பத்தைச் சேர்ந்த திவாகரன் உள்ளிட்டோர் தங்களுக்கு கட்சிக்குள் இருக்கும் செல்வாக்கைத் தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் வதந்திகள் வருகின்றன. இவற்றையெல்லாம் நம்பவும் முடியாமல் நிராகரிக்கவும் முடியாமல் குழும்புகிறான் கடைநிலை அதிமுக தொண்டன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.