குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் உத்தரவுகளை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் குறித்தான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றஞ்சாட்டப்பட்டவரை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கு பதிலாக மாற்று வழிகள் குறித்து ஆராய வேண்டுமென தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு நீதிபதிகள் அறுவுறுத்தினர். மேலும், பொது மக்கள் அச்சமின்றி காவல் நிலையத்தை அணுகும் சூழலை உருவாக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், "நீதிமன்றங்கள் அல்லது மருத்துவமனைகளுக்குச் செல்வதில் தயக்கம் காட்டாத மக்கள் காவல் நிலையங்களுக்கு செல்ல மட்டும் ஏன் பயப்படுகிறார்கள். காவல் துறை தங்களை மக்களின் நண்பன் என்று அழைப்பதை காட்டிலும் அங்கு மிகப் பெரிய சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது.
காவல் துறையினர் முறையாக நடந்து கொள்ள வேண்டும், புகார் கொடுப்பவர்களை மரியாதையுடன் நடத்தவும் வேண்டும். பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கு செல்ல எந்தத் தயக்கமும் இல்லாத நாளில்தான் காவல் துறையில் உண்மையான சீர்திருத்தங்கள் ஏற்படும்.
மூத்த காவல்துறை அதிகாரிகள் கூட நீதிமன்ற உத்தரவுக்கு இதுநாள் வரை கீழ்ப்படியவில்லை.
கார்களில் கருப்பு சன்கிளாஸ் ஸ்கீரின்களை ஒட்டக்கூடாத என்று உத்தரவுக்கு அவர்கள் கூட இன்னும் செய்யவில்லை. எந்தவொரு விசாரணையும் அல்லது தண்டனையும் இல்லாமல் தனிநபர்களை ஆறு முதல் ஏழு மாதங்கள் வரை சிறையில் வைத்திருக்க எளிதான வழியாக தடுப்புக் காவல் சட்டங்கள் பல வழக்குகளில் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு நபர் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டால், பொது ஒழுங்கை மீறும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பக்கூடிய சந்தர்ப்பங்களில் மட்டுமே தடுப்புக்காவல் சட்டத்தை மிக குறைவாகவே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் மாறாக, காவல்துறை எல்லா சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்துகிறது.
ஒரு கிரிமினல் வழக்கில் சிக்கினாலும் குண்டர் என்று முத்திரை குத்துவது களங்கத்தை ஏற்படுத்தும். மேலும், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் வைக்கப்பட்டுள்ள ஒரு நபர்,தனது வாழ்வாதாரத்தை சம்பாதிக்கும் வாய்ப்பை இழக்கிறார். அதன் விளைவாக, அவரது வருமானத்தை நம்பியிருக்கும் அவரது குடும்பமும் பாதிக்கப்படுகிறது" என்று நீதிபதி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“