கமல் கட்சியில் முதல் விக்கெட் விழுந்தது எப்படி? வக்கீல் ராஜசேகர் பேட்டி

எனக்கு அரசியல் ரீதியிலான அங்கிகாரம் கிடைக்கவில்லை. ஆனாலும் கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு நடந்தேன். எனக்கு வழக்கறிஞர் தொழிலைத் தவிர வேறு எதுவும் தெரியாது.

கட்சியில் இருந்து விலகினாலும், கமலுக்கும் எனக்குமான நட்பு தொடர்கிறது. அவர் எப்போது அழைத்தாலும், அவருக்காக வக்கீலாக பணியாற்ற தயாராக இருக்கிறேன் என்று மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய வக்கீல் ராஜசேகரன் கூறினார்.

நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சியின் உயர் மட்ட குழு உறுப்பினர்களாக 16 பேரை நியமனம் செய்திருந்தார். அதில் ஒருவர் வழக்கறிஞர் ராஜசேகர். ம.ந.ம. கட்சியில் அரசியல் அனுபவம் உள்ள ஓரே நபராக வக்கீல் ராஜசேகரன் இருந்தார்.

காங்கிரஸ் கட்சியில் 19 வயதில் மாநில மாணவர் காங்கிரஸ் தலைவராகவும், பின்னர் இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராகவும், 26 வயதில் இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய செயலாளராகவும், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் என பல பதவிகளை வகித்தவர். ஒரு கட்டத்தில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கும் போட்டியிட்டவர். பின்னர் சில காலம் பாஜகவிலும், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மூன்றாவது அணி அமையவும் தீவிரமாக பாடுபட்டவர்.

நடிகர் கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழக அரசை விமர்சித்து பேச ஆரம்பித்த நாட்களில் இருந்து அவருக்காக டி.வி. பேட்டிகளில் பேசி வந்தார். கமலஹாசன் கட்சி ஆரம்பித்த போது கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் இருந்து ராஜசேகர் ஏன் விலகினார் என்பதை அறிய அவரை தொடர்பு கொண்டோம்.

‘‘கமல்ஹாசனுடன் கடந்த 6,7 மாதங்களாக நான் டிராவல் செய்து வருகிறேன். என்னை மிகவும் மதிக்கத் தக்க இடத்தில் வைத்திருந்தார். என்னால் வழக்கறிஞர் தொழிலையும், அரசியலையும் சிறப்பாக செய்ய முடியவில்லை. இரட்டை குதிரையில் சவாரி செய்ய முடியவில்லை. வழக்கு இருக்கும் அதே நேரத்தில், கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. கட்சியில் கருத்து வேறுபாடும் இருந்தது. கருத்து சுதந்திரமும் உச்சத்தில் இருந்தது. ஆனால் தொழிலே முக்கியம் என முடிவெடுத்து, கமலஹாசனிடம் நேரில் விபரத்தை சொன்னேன். அவரும் நட்புடன் எனக்கு விடை கொடுத்தார்’’ என்றார்.

டிவி விவாதங்களில் கமலுக்காக அதிகமாக பேசியவர் நீங்கள்? ஆனால் சமீபத்தில் கட்சியின் சார்பில் டிவி விவாதங்களில் கலந்து கொள்பவர்களின் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையே… அதுதான் விலகலுக்குக் காரணமா?

‘‘என்னுடைய பலமே டிவி விவாதங்களில் பங்கேற்பதுதான். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது, கமல்ஹாசன் அமைச்சர்களைப் பற்றி கடுமையாக பேசிய போது, நான் தான் டிவிகளில் அவருக்காக பேசினேன். அதுவும் அவர் சொல்லித்தான் பேசினேன். ஆனால், டிவி விவாதஙக்ளில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்ற வருத்தம் இருந்தது உண்மைதான். கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். அவர் கட்சியில் அவர் முடிவெடுக்க முழு உரிமை உண்டு. கட்சியில் இருந்து விலக அதுவும் ஒரு காரணம். அதுமட்டுமே காரணம் அல்ல.’’

மக்கள் நீதி மய்யத்தில் அரசியல் பின்புலம் உள்ள ஒருவராக நீங்கள் இருந்தீர்கள். உங்களுக்கு அரசியல் அங்கிகாரம் கிடைத்ததா?

‘‘எனக்கு அரசியல் ரீதியிலான அங்கிகாரம் கிடைக்கவில்லை. ஆனாலும் கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு நடந்தேன். எனக்கு வழக்கறிஞர் தொழிலைத் தவிர வேறு எதுவும் தெரியாது. என் மீது குறை சொல்வதாக இருந்தால், மூன்று கட்சிக்கு சென்று வந்தவன் என்று மட்டுமே சொல்ல முடியும். நான் நேர்மையாக வக்கீல் தொழில் செய்து வருகிறேன். அது கமலுக்கும் தெரியும். அப்படியான ஆட்கள் தேவை என்றுதான் என்னை அவர் அழைத்தார். ஓரே நேரத்தில் அரசியல், தொழில் என பயணிக்க முடியவில்லை. இப்போது கூட கமல்ஹாசன் அழைத்தால், அவருக்காக வழக்கறிஞராக பணியாற்ற தயாராக இருக்கிறேன்.’’ என்றார்.

×Close
×Close