மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதி தலைமையிலான 1996 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சியில் ஊரகத் தொழில்கள் மற்றும் பதிவுத்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார்.
அப்போது அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆவணங்கள் சிக்கின. அதாவது கணக்கில் வராத பணம் ரூ.18.17 லட்சத்துக்கு ஆதாரங்கள் சிக்கின. இதேபோல் சொத்துக் குவிப்பு வழக்குகள் தற்போதைய அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் ரகுபதி மீதும் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளில் இருந்து தற்போதைய அமைச்சர்கள் 3 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், 2008ஆம் ஆண்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தபோது, முறைகேடாக வீடுகள் ஒதுக்கப்பட்டன என்ற புகார் எழுந்தது.
அதாவது கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எம்.பி. எம்.எல்.ஏ-க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஐ. பெரியசாமி மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இருந்து ஐ. பெரியசாமி விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை. இந்த நிலையில் வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்திவருகிறது.
அப்போது, வழக்கில், “தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ஏன் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை? லஞ்ச ஒழிப்புத் துறையின் செயல்பாட்டின் காரணமாகவே தாமாக வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
அமைச்சராக இருப்பர் மக்கள் மத்தியில் சுத்தமானவராக இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராகவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“