/indian-express-tamil/media/media_files/2025/09/25/milk-agent-petition-gst-2025-09-25-07-27-20.jpg)
ஆவின் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜி.எஸ்.டி கூடுதல் ஆணையர் லோகநாதனிடம் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி புகார் மனு அளித்தார்.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர், மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: “சில வாரங்களுக்கு முன்பு (செப்டம்பர் 3) நடைபெற்ற 56வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், மத்திய அரசு ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்து, யு.ஹெச்.டி பால் மற்றும் பனீர் வகைகளை ஜி.எஸ்.டி-யிலிருந்து விலக்கு (5%), நெய், வெண்ணெய், சீஸ் உள்ளிட்ட பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டியை 12% லிருந்து 5% ஆகவும், ஐஸ்கிரீம் வகைகளை 18% லிருந்து 5% ஆகவும் குறைத்துள்ளது.
இந்த சூழலில், ஜி.எஸ்.டி குறைப்பு செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்துள்ளதால், பால் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள புதுச்சேரி பாண்லே, கேரளா மில்மா, கர்நாடகா நந்தினி, குஜராத் அமுல் உள்ளிட்ட கூட்டுறவு பால் நிறுவனங்கள் மட்டுமின்றி மில்கி மிஸ்ட், ஜி.ஆர்.பி, உதயகிருஷ்ணா, டோட்லா, திருமலா, ஸ்ரீனிவாசா உள்ளிட்ட அனைத்து தனியார் பால் நிறுவனங்களும், ஜி.எஸ்.டி வரி குறைப்பின் பலனை பொதுமக்களுக்கு முழுமையாக வழங்கும் முயற்சியில் தங்கள் விற்பனை விலைகளைக் குறைத்துள்ளன.
செப்டம்பர் 22 முதல் நெய்யின் விற்பனை விலை லிட்டருக்கு ரூ. 50.00 வரை, வெண்ணெய் கிலோவுக்கு ரூ. 30.00 வரை, சீஸ் கிலோவுக்கு ரூ. 40.00 வரை, பனீர் கிலோவுக்கு ரூ. 25.00 வரை, கொழுப்பு நீக்கப்பட்ட பாலின் விற்பனை விலை ரூ. 3.00, மற்றும் ஐஸ்கிரீம் குறைந்தபட்சம் ரூ. 5.00 வரை விலை குறைக்கப்பட்டுள்ளன.
ஆனால், தமிழ்நாடு மாநில அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான "ஆவின்" ஜி.எஸ்.டி வரி குறைப்பை செயல்படுத்தும் வகையில் தற்போது வரை நெய், வெண்ணெய், பனீர், சீஸ், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை விலையை குறைக்கவும் இல்லை, ஜி.எஸ்.டி குறைப்பிற்கு முந்தைய விற்பனை விலை, ஜி.எஸ்.டி விலக்கு மற்றும் குறைப்பிற்கு பின்னர் உள்ள விற்பனை விலை குறித்த முழுமையான விலைப்பட்டியலை வெளிப்படைத்தன்மையோடு வெளியிடவில்லை. மாறாக 19.09.2025 தேதியிட்ட நிர்வாக இயக்குனர் ஏ.அண்ணாதுரை ஐ.ஏ.எஸ் அவர்களின் கடிதம் (Ref. No. 3331/N3/Mkg/2025) மூலம் நெய் மற்றும் யு.எச்.டி பாலுக்கு மட்டும் 70 நாட்களுக்கு பண்டிகைகால தள்ளுபடியை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ஜி.எஸ்.டி வரி குறைப்பின் பயனை முழுமையாக பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் ஜி.எஸ்.டி குறைக்கப்பட்ட பால் பொருட்கள் விற்பனை விலையை ஆவின் நிறுவனம் குறைக்காததால் பொதுமக்களும் மற்றவர்களும் செப்டம்பர் 22-ம் தேதி பெரும் ஆட்சேபனைகளை எழுப்பியதைத் தொடர்ந்து, ஆவின் நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை ஐஏஎஸ் அவர்கள் செப்டம்பர் 22 மாலை அவசர, அவசரமாக ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார்,
அதில், ஏற்கனவே ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் மற்ற கூட்டுறவு பால் நிறுவனங்களை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும், 2021 முதல் பால் விற்பனை விலை குறைப்பினால் தமிழக மக்கள் ரூ.1073 கோடி ரூபாய் மிச்சப்படுத்தியுள்ளதாகவும் கூறி மத்திய அரசின் ஜிஎஸ்டி குறைப்பு பொதுமக்களுக்கு எந்த கூடுதல் நன்மைகளையும் தராது என்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே ஆவின் பால் பொருட்களை வாங்கி பயன்படுத்தும் பொதுமக்கள் ஜிஎஸ்டி வரி குறைப்பின் பயனை முழுமையாகப் பெற்று பயனடையக்கூடிய வகையில் நெய்யின் விற்பனை விலையை தள்ளுபடியாக இல்லாமல் விற்பனை விலையை குறைத்து நிரந்தரமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், வெண்ணெய், பனீர், சீஸ், யு.எச்.டி பால் மற்றும் ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களின் விற்பனை விலையை முழுமையாகக் குறைக்க ஆவின் நிர்வாகம் முன்வர வேண்டும் என்றும் எங்களது தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் ஆவின் நிர்வாகத்தை வலியுறுத்தினோம்.
ஆனால் ஆவின் நிர்வாகமோ ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவிற்கு கட்டுப்பட்டு, ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு ஏற்ப பால் பொருட்களின் விற்பனை விலையை குறைக்க முன்வரவில்லை என்பதால் இது ஜி.எஸ்.டி கவுன்சிலை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்யும் முயற்சியாகவும், மத்திய அரசின் நல்லெண்ண நடவடிக்கைகள் மக்களுக்கு செல்வதை தடுக்கும் செயலாகவும் தெரிகிறது. அதனால், மத்திய அரசும், ஜி.எஸ்.டி கவுன்சிலும் ஆவின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
அதுமட்டுமின்றி ஜி.எஸ்.டி வரி குறைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினின் செயல்பாடுகளை முன்மாதிரியாக கொண்டு பல முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் தங்களது பால் பொருட்களுக்கான பழைய அடிப்படை விலையை உயர்த்தி மறைமுகமாக விற்பனை விலையை உயர்த்தி ஜி.எஸ்.டி கவுன்சிலையும் மத்திய அரசையும் ஏமாற்றும் செயலில் ஈடுபட்டுள்ளதால் அனைத்து தனியார் பால் நிறுவனங்களிலும் ஜி.எஸ்.டி கவுன்சில் சார்பில் அதிரடி ஆய்வுகள் மேற்கொண்டு மத்திய அரசின் உத்தரவிற்கு மாறாக செயல்பட்டுள்ள தனியார் பால் நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், ஜி.எஸ்.டி வரி குறைப்பு காரணமாக மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களின் பலவற்றின் விற்பனை விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதால் அது பொதுமக்களின் மாதாந்திர செலவுகளில் கணிசமான தொகையை சேமிக்க வாய்ப்பாகவும், மிகுந்த பயனளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. பொதுமக்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடிய சேமிப்பாக அமைந்துள்ள ஜி.எஸ்.டி வரி குறைப்புக்குக் காரணமான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.