சபநாயகர் தனபாலை முதல் அமைச்சராக்குவதாக சொல்வது ஏன்?

அதிமுகவில் டிடிவி தினகரன் தரப்பு அடுத்த முதல்வராக சபாநாயகர் தனபாலை முதல் அமைச்சராக்க வேண்டும் என்று சொல்வதன் பின்னணியை விவரிக்கிறது.

அதிமுகவில் இப்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில், சின்ன குழந்தைகள் தினம் ஒரு வீடு கட்டி விளையாடுவது, தினம்தினம் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சசிகலா குடும்பத்தினரால் முதல் அமைச்சர் பதவியை பெற்ற எடப்பாடி பழனிச்சாமி, இப்போது அவர்களுக்கு எதிராக இருக்கிறார்.

தஞ்சாவூரில் பேசிய திவாகரன், ‘‘நான் கூவத்தூரில் இருந்திருந்தால், சபாநாயகர் தனபாலைதான் முதல் அமைச்சராக்கியிருப்பேன். சசிகலா அவசரப்பட்டு எடப்பாடி பழனிச்சாமியை முதல் அமைச்சராக்கிவிட்டார்.’’ என்று  சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரை தனித்தனியாக கடிதம்  ஒன்றை கொடுத்துள்ளனர். அதில், ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆதரித்து வாக்களித்தோம். கட்சியையும் சின்னத்தையும் முடக்கியதோடு, முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு சொன்ன ஓபிஎஸ்சுடன் கூட்டணி அமைத்துள்ளனர். இதனால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம்’’ என்று சொல்லியுள்ளார்கள்.

டிடிவி தினகரன் தரப்பின் முதல்வர் வேட்பாளராக சபாநாயகர் தனபாலை முன் நிறுத்த முயல்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல் அமைச்சராக சசிகலாவை தேர்வு செய்யப்பட்டதும், அதுவரையில் அவருடைய ஆதரவாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் வெளியேறினார். இதையடுத்து அதிமுகவுக்கு அதிக ஆதரவு கொடுத்து வரும் கவுண்டர் சமூகத்துக்கு முதல்வர் பதவியை கொடுத்தனர். அவரும் எதிராக திரும்பியதும், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முன் நிறுத்த முயல்கிறது.

ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும், தற்போது சபாநாயகராகவும் உள்ள தனபாலை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்துவதில் பல அரசியல் ராஜதந்திரம் ஒழிந்திருக்கிறது.

அதிமுகவில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் 32 பேர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சமூதாய எண்ணிக்கை அடிப்படையில் இவர்கள்தான் அதிகம். இவர்கள் ஒட்டு மொத்தமாக ஒரு பக்கம் சாய்ந்தால், யாருக்கும் பெரும்பான்மை இல்லாமல் போய்விடும். ஆனால் அவர்களுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் ஜெயலலிதா இருந்த போதும் இப்போதும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதில்லை. இவர்களுக்கு அடுத்தப்படியாக கவுண்டர் சமூகத்தினரும், முக்குலத்தோர் சமூகத்தினரும் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். இந்த மூன்று சமூகத்தினர்தான் அதிக எண்ணிக்கையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.

கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த எடப்பாடி முதல்வராக இருக்கிறார். முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் துணை முதல்வராகிவிட்டார்.  எனவே அந்த இரு சமூகத்தில் இருந்து யாரை முன்னிருத்தினாலும் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. அதிக எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட தலித் சமூகத்தினரை ஒருங்கிணைக்க டிடிவி.தினகரன் தரப்பு முயற்சி எடுக்கிறது.

இது மட்டும்தான் காரணமா? சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானமோ அல்லது நம்பிக்கைகோரும் தீர்மானமோ கொண்டு வந்தால் அதை அனுமதிக்க வேண்டிய இடத்தில் சபாநாயகர் தனபால் இருக்கிறார். அவருக்கு முதல் அமைச்சர் பதவி என்ற கேரட்டைக் காட்டினால், தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார் என டிடிவி.தரப்பு நம்புகிறது.

2010 ஆண்டு கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக இருந்த போது, 11 பிஜேபி எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கு எதிராக நம்பிக்கை இல்லை என கடிதம் கொடுத்தனர். உடனடியாக அவர்களை கட்சி தாவல் தடை சட்டம் மூலம் பதவி நீக்கம் செய்ய உத்தரவிட்டார், சபாநாயகர். அடுத்து நடந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோற்றுப் போனது. எடியூரப்பா ஆட்சி தப்பியது. கோர்ட்டுக்குப் போய் எம்.எல்.ஏ.க்கள் பதவியைப் பெற்றது வேறு கதை.

எம்.ஜி.ஆர் மறைந்த போது, தமிழகத்திலும் இப்படியொரு அசாதாரண சூழல் ஏற்பட்டது. பேரவையில் சபாநாயகராக பி.ஹெச்.பாண்டியன் இருந்தார். ஜெயலலிதா தரப்பு எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்து, நம்பிக்கை வாக்கெட்டுப்பில் ஜானகி வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

இனி வரும் காலங்களில் சபாநாயகரின் ஒத்துழைப்பு யாருக்கு இருக்கிறதோ அவர்கள்தான் பேரவையில் வெற்றி பெற முடியும். சட்டசபையைப் பொறுத்தவரையில் சபாநாயகரின் முடிவே இறுதியானது. எனவே அவரை வளைக்க, முதல்வர் பதவி தருவதாக வெளிப்படையாக ஆசைக்காட்டுகிறார்கள்.

அதுமட்டுமல்ல… டிடிவி.தினகரன் தரப்புக்கு இது இறுதி போர். இதில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அதனால் எல்லா முயற்சிகளையும் எடுப்பார்கள். மேற்கு மாவட்டத்தில்தான் அதிக எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவில் உள்ளனர். அதில் ஒருவராக சபாநாயகர் தனபால் இருக்கிறார். அந்த கோட்டையில் ஓட்டைப் போட்டுவிட்டால், வெற்றி எளிது என்பதால், தனபாலை முன் நிறுத்துகின்றனர்.

நாளைக்கு வர இருக்கும் முதல்வர் பதவிக்காக இருக்கும் சபாநாயகர் பதவியை விட்டுவிட முன்வருவாரா, தனபால்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close