சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு அளித்த சிகிச்சையை ஜெயலலிதாவுக்கு செய்யாதது ஏன்? என அமைச்சர் ஜெயகுமார் கேள்வி விடுத்தார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் இன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘இந்த ஆட்சியை அமைத்தது சசிகலாதான்’ என அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்தது குறித்தும், செல்லூர் ராஜூவை ஸ்லீபர் செல் என பலரும் கூறுவது குறித்தும் நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ஜெயகுமார், ‘தனக்கு உடல்நிலை சரியில்லாத போதும், எங்களுக்காக பட்டிதொட்டி எங்கும் நேரில் சென்று வாக்கு சேகரித்தவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர். ஆட்சி அமைய பாடுபட்டவர் அவர்தான்’ என்றார். ‘அமைச்சர் செல்லூர் ராஜூ, ஸ்லீப்பர் செல் இல்லை என்பதை அவரே இன்று விளக்கியிருக்கிறார்’ என்றும் அமைச்சர் ஜெயகுமார் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய ஜெயகுமார், ‘சாத்தான் வேதம் ஓதுவதுபோல தினகரன் பேச்சு இருக்கிறது. நடராஜனுக்கு சிகிச்சை அளிக்க மேற்கொண்ட முயற்சியை, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க எடுக்காதது ஏன்? இன்று ஹெலிகாப்டரில் கொண்டு வருகிறார்கள். எல்லாம் செய்கிறார்கள்.
78 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார் ஜெயலலிதா. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்களே... அந்த சதை ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஆடவில்லையா? சசிகலா குடும்பம், ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்துவிட்டது’ என்று குற்றம்சாட்டிய ஜெயக்குமார், ‘ஜெயலலிதாவின் சொத்தைப் பிரிக்கவே தற்போது பரோலில் சசிகலா வந்துள்ளதாகவும்’ குறிப்பிட்டார்.