கோவையில் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
ஈஷா அறக்கட்டளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்த நோட்டீசுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், ஈஷா அறக்கட்டளை விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அளித்தது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கல்வி நோக்கத்திற்காகவும், மாணவர் விடுதிக்காகவும் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே, சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “சட்டத்தை உருவாக்கிவிட்டு, பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பது ஏன்?” என கேள்வி எழுப்பினர். பின்னர், ஈஷா அறக்கட்டளையின் கட்டடங்கள் எவ்வாறு விலக்கு அளிக்கும் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டன என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"