New Update
00:00
/ 00:00
ponmudi: சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ 50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. அதே சமயம் இந்த தண்டனையை 30 நாள் நிறுத்தி வைப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்தார். ஏன் இந்த 30 நாள்?
பொன்முடி தரப்புக்கு தண்டனையை நீதிபதி அறிவிக்கும் முன்பும் பின்பும் குறைந்தபட்ச தண்டனை வழங்க கோரி பொன்முடி தரப்பில் முறையிடப்பட்டது. அப்போது நீதிபதி, 'இது தொடர்பாக நீங்கள் மேல் கோர்ட்டில் (உச்ச நீதிமன்றத்தில்) முறையிடலாம்' என தெரிவித்தார்.
இயல்பாகவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பொன்முடி உச்ச நீதிமன்றம் செல்வார் என்பதால் அதற்கு அவகாசம் கொடுக்கும் வகையில் தண்டனையை 30 நாள் நிறுத்தி வைத்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்தார். இந்த 30 நாட்களுக்குள் பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் உச்ச நீதிமன்றத்தை அணுகி தங்களது முறையீடை தெரியப்படுத்தலாம். இவர்கள் கோரிக்கை அடிப்படையில் உச்ச நீதிமன்றம் ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் அந்த நடைமுறைகள் அதன் பிறகு பின்பற்றப்படும்.
குறிப்பாக தண்டனையை மேலும் அதிக நாட்கள் நிறுத்தி வைத்தோ ஜாமீன் வழங்கியோ உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அந்த காலகட்டம் வரை பொன்முடி சிறைக்கு செல்லாமல் தவிர்க்கலாம். ஒருவேளை சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையே நிறுத்தி வைக்க பொன்முடி தரப்பு கோரிக்கை வைத்து, அது உச்ச நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டால் பொன்முடியின் எம்.எல்.ஏ பதவியும் அமைச்சர் பதவியும் மீண்டும் கிடைக்க வாய்ப்பு உண்டு. கிரிமினல் அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் இந்த ரீதியில் நிவாரணம் பெற்றதால் தான் மீண்டும் அவர் எம்.பி பதவியை பெற முடிந்தது. ஆனால் ஊழல் தடுப்பு வழக்குகளில் அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதில் வழக்கறிஞர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
ஒருவேளை உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி தரப்புக்கு வேறு எந்த நிவாரணமும் கிடைக்காத பட்சத்தில் ஜனவரி 22-ம் தேதிக்குள் விழுப்புரம் நீதிமன்றத்தில் அவரும் அவரது மனைவியும் ஆஜராக வேண்டும். அப்போது ஐகோர்ட் உத்தரவுப்படி அவர்கள் இருவரும் சிறைக்கு செல்ல நேரிடும் என்பதுதான் சட்டபூர்வமான நிலை என வழக்கறிஞர்கள் கருத்து கூறுகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.