கமல்ஹாசன் தி.மு.க கூட்டணியில் இணைந்தது குறித்து வீடியோ வெளியிட்டு மக்கள் நீதி மய்யம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “தேசத்திற்காக நாம் அனைவரும் ஒரே மேடையில் அமர வேண்டும். அதுதான் எனது அரசியல்” என்று தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தி.மு.க கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துள்ளது. இதில், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தலுக்குப் பிறகு, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் ஒதுக்கப்படும் என்று கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால், மக்கள் நீதி மய்யம் குறைந்த பட்சம் 1 தொகுதியிலாவது போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று கமல்ஹாசன் அதிரடியாக அறிவித்தார். ஆனால், தி.மு.க கூட்டணிக்காக தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணிக்காக பிரசாரம் செய்வேன் என தெரிவித்தார்.
இந்நிலையில், தி.மு.க உடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்ததற்கான காரணம் குறித்து கமல்ஹாசன், தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், தேச நலனுக்காக தி.மு.க உடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், இந்த நிலை ஒரு அவசர நிலை. இது தமிழ்நாட்டிற்கும் தேசத்திற்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும். எதிர்வாத சக்திகளுக்கு இது கைகூடி விடக்கூடாது என்பதற்காக நாங்கள் எடுத்த முடிவு என்று கமல் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த அரசியலை மாற்றுவதற்கு ஒரு வாய்ப்பை உங்களுக்கு அளித்திருக்கிறது சரித்திரம் என்று கூறியுள்ள கமல்ஹாசன், இந்த நேரத்தில் அனைவரும் சகோதரர்கள் தான். எதிர்க்கட்சியில் இருப்பவர்களும் தனது சகோதர்ரகள் தான் என்று தெரிவித்துள்ளார்.
தேசத்திற்காக நாம் அனைவரும் ஒரு மேடையில் அமர வேண்டும். அது தான் தனது அரசியல் என்று, திமுக உடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்துள்ளது தொடர்பாக கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“