Advertisment

மசினகுடி வலசை பாதை : யானைகளுக்கு இருக்கும் அங்கீகாரமும் உரிமையும் மனிதர்களுக்கு இல்லையா?

. இங்கு வரும் பயணிகளுக்கும் சுற்றுலாவாசிகளுக்கும் இந்த இடத்தின் அவசியத்தையும் பல்லுயிர் பெருக்க மண்டலம் நம் வாழ்வில் எவ்வளவு முக்கியம் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் சிறந்த தீர்வாக அமையும்

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
Why Masinagudi elephant corridor of Tamil Nadu has so many disputes?

மசினகுடியில் சுற்றித் திரியும் யானைகள்... புகைப்படம் : நரேஷ் பாஸ்கரன்

மசினகுடி என்றவுடன் பலருக்கும் நினைவிற்கு வருவது யானைகளும் ரிசார்ட்களும் தான். அரசு உத்தரவை மீறி, வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகள், ரெசார்ட்கள், சொகுசு பங்களாக்கள் கட்டுகின்றனர் என்றும், அதனால் வலசை செல்லும் யானைகளுக்கும் அங்கு வாழும் மக்களுக்கும் இடையே வாழ்வா சாவா சூழ்நிலை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், கள நிலவரம் என்ன என்பதை விளக்குகிறது இந்தியன் எக்ஸ்ரஸ் தமிழின் இந்த கட்டுரை.

Advertisment

மசினகுடி - கேரளா, தமிழகம், மற்றும் கர்நாடகா என்று மூன்று மாநிலங்களையும் இணைக்கும் ஒரு மையப்புள்ளியாக விளங்கும் சிறிய அளவிலான சுற்றுலா தளம். முன்பு ஒரு காலத்தில் “மசினஹல்லா” என்று அழைக்கப்பட்ட அந்த பகுதி வயநாட்டின் தலைநகராக விளங்கியது.

சீகூர் பள்ளத்தாக்கு வழியாக யானைகள் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து (முதுமலை) கிழக்கு தொடர்ச்சி மலைகளை (சத்தியமங்கலம்) நோக்கி நகர்கின்றது. இந்த இரண்டு மலைப்பகுதிகளுக்கும் இடையே இருக்கும் மசினகுடி, மாயாறு, சிங்காரா, மாவின்ஹல்லா, செம்புதாநத்தம், பொக்காபுரம், தொட்டலாங்கி, குறும்பப்பள்ளம், மற்றும் வாழைத் தோட்டம் ஆகிய பகுதிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

அக்டோபர் 14ம் தேதி அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையில் நீதிபதிகள் அப்துல் நஜீர், சஞ்சீவ் கண்ணா  ஆகியோர் அடங்கிய அமர்வு, ஏற்கனவே 2011ம் ஆண்டு உயர்நீதிமன்றம் ”இந்த பகுதியில் அமையப்பட்டிருக்கும் 39 ரெசார்ட்களும் அதில் உள்ள 309 குடியிருப்பு பகுதிகளையும் காலி செய்துவிட்டு நிலத்தை ஒப்படைக்குமாறு” வழங்கிய தீர்ப்பினை உறுதி செய்தது. மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் அஜய் தேசாய், ப்ரவீன் பார்கவ் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து 4 மாதத்திற்குள் இப்பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுமாறு உத்தரவிட்டது. அக்டோபர் மாத இறுதியில் வெங்கட்ராமன் பொக்காபுரம், மசினகுடி போன்ற பகுதிகளை பார்வையிட்டார்.

கடந்த 2018ம் ஆண்டு நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த 27 கட்டிடங்களுக்கும் சீல் வைத்தார். சட்டத்திற்கு புறம்பாக அங்கே ரெசார்ட்கள் இயக்கப்படுகின்றன என்ற புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.

மேலும் படிக்க : முதுமலை காடுகளில் பணிபுரிந்த இந்தியாவின் மிக முக்கிய யானை ஆய்வாளர் மரணம்

வலசை பாதை என்றால் என்ன? 

யானைகள் தங்களின் இரண்டு வாழிடங்களுக்கு மத்தியில் சென்று திரும்பும் பாதையே வலசை என்று வழங்கப்படுகிறது. வலசை செல்லும் பாதைகள் யானையின் வசிப்பிடமாக மாறக்கூடாது என்பதையே ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். யானைகள் தங்குவதற்கான வசதிகளும், குட்டிகள் ஈனுவதற்கான வாழ்வாதரங்களும் கிடைக்கும் பட்சத்தில் வலசை பாதைகள் வசிப்பிடங்களாக மாறுவதற்கான வாய்ப்புகள் உருவாகிறது. மேலும் ஒரு வழித்தடத்தின் நீள அகலம் இவ்வளவு தான் இருக்க வேண்டும் என்பதற்கான அறிவியல் பூர்வ வரையறைகள் ஏதும் இதுவரை இல்லை.

2005ம் ஆண்டு நிபுணர் குழு அறிக்கையின் படி நீலகிரியில் மேற்கு தொடர்ச்சி மலைகளை கிழக்கு தொடர்ச்சி மலைகளுடன் இணைக்க மூன்று வலசை பாதைகள் உள்ளன. சிங்காரா வலசை பாதை மற்றும் மாயாறு - ஆவாரஹல்லா என இரண்டு சீகூர் பள்ளத்தாக்கு வழியாகவும், மூன்றாவது மாயாறு பள்ளத்தாக்கிற்கு மறுபுறம் கண்யன்புரா பந்திப்பூர் பகுதியிலும் அமைந்துள்ளது.  மொத்த இந்திய யானைகளின் எண்ணிக்கையில் (21,200) கிட்டத்தட்ட 21% யானைகள் (4,452) இந்த வழிப்பாதையை பயன்படுத்துகின்றன. 2,897 நபர்கள் 10 ஆண்டுகளில் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்த பகுதியில் இதன் எண்ணிக்கை வெறும் ஐந்து மட்டுமே.

Why Masinagudi elephant corridor of Tamil Nadu has so many disputes? மாயாறு பள்ளத்தாக்கு (Express Photo by Nithya Pandian)

கஜா ஆய்வறிக்கையில் எந்தவிதமான குடியிருப்பு பகுதிகளும் யானை வழித்தடங்களில் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் யானை வழித்தடங்களை வரையறை செய்து கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அரசாணை எண் 125-ன் கீழ் யானை வழித்தடத்தில் அமைந்திருக்கும் அனைத்து குடியிருப்புப் பகுதிகள், ரெசார்ட்கள், பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளை நீக்க முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க  : யானைகள் ஏன் கும்கிகள் ஆக்கப்படுகிறது? தமிழக பாகன்களின் கதை தெரியுமா உங்களுக்கு?

202.90 ஏக்கர் வழித்தடம் எப்படி 7000 ஏக்கர் வழித்தடமாக மாறியது?

முதுமலை சரணாலயம் 1958ம் ஆண்டு 318.7 சதுர கி.மீ பரப்பளவில் விரிவாக்கப்பட்டது. 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதுமலை புலிகள் காப்பகத்தின் 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கோர் ஸோனாகவும் 221 சதுர கிலோ மீட்டர் பஃப்பர் ஸோனாகவும் அறிவிக்கப்பட்டது. பின்பு அதே ஆண்டில் டிசம்பர் மாதம் 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் கோர் ஸோனாக அறிவிக்கப்பட்டது. இதனால் முதுமலையை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளும் அந்த சரணாலயத்தின்  ஒரு பகுதியாக இணைந்தது. இந்த பகுதியில் நீலகிரி பழங்குடிகளான இருளர்களும், குறும்பர்களும் இங்கே வசித்து வருகின்றனர்.  முன்பு விவசாய பணிகளை மேற்கொண்டு வந்த படுகர் இன மக்கள் தங்களின் நிலங்களை விற்க துவங்கினர். வணிகம் தொடர்பான தொழில்கள் கொஞ்சம் கொஞ்சமாக அங்கு வேரூன்ற துவங்கியது.  தங்களுக்கு இருக்கும் கூடுதல் நிலங்களில் சிறிய அளவில் வீடுகளை உருவாக்கியும், தேவைக்கு போக மீதம் இருக்கும் பகுதியையும் சுற்றுலாவாசிகள் தங்குவதற்கான இடமாக அதனை மாற்றினார்கள்.

யானைகளின் எண்ணிக்கை மற்றும் வாழும் சூழல் குறித்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் சுற்றுச்சூழல் அமைச்சகம் 2006ம் ஆண்டு “Rights of Passage - Elephant corridors of India" என்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்தியா முழுவதும் 88 இடங்கள் அறியப்பட்ட யானை வலசை பாதைகளாக அறிவிக்கப்பட்டது.

மாயாறு பள்ளத்தாக்கு யானை வழித்தடம் (125.95 ஏக்கர்) மற்றும் கல்லாறு ஜக்கனேரி வழித்தடம் (76.95 ஏக்கர்) என மொத்தமாக 2006ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி 202.90 ஏக்கர் நிலம் யானைகள் வழித்தடத்தை அதிகரிக்க தேவை என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. சில மாதங்களிலேயே அந்த எல்லைப் பகுதி அதிகரிக்கப்பட்டு 06/11/2006 அன்று 397.934 ஏக்கர் நிலம் தேவை என்று கூறப்பட்டது. அந்த நாள் வரையில் பொக்காபுரம் பகுதியில் எந்தவிதமான நிலமும் தேவைப்படவில்லை.

2008ம் ஆண்டில் (20/04/2008) பி.சி.சி.எஃப். நீதிமன்றத்தில் கொடுத்த பதிலில், முன்பு தரப்பட்ட வழித்தட விபரங்களில் இருந்து கூடுதலாக பொக்காபுரம் பகுதியில் இருந்து 150 ஏக்கர் நிலமும், வெஸ்ட்பர்ரி எஸ்டேட்டில் இருந்து 40 ஏக்கர் நிலமும் இணைக்கப்பட்டு 583.42 ஏக்கர் நிலம் யானை வழித்தடத்திற்கு தேவை என அறிவிக்கப்பட்டது.

Why Masinagudi elephant corridor of Tamil Nadu has so many disputes? மரங்களால் சூழப்பட்டிருக்கும் மசினகுடி சாலை (Express Photo by Nithya Pandian)

தமிழக அரசு அறிவித்த யானை வழித்தடத்திற்கு தேவையான பரப்பு 583.42 ஏக்கராக ஆக இருக்க, சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்த யானை வழித்தட தேவையானது 4,225 ஏக்கராக மாறியது. 20/04/2008ஆம் ஆண்டு வலசை பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை காலி செய்ய வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.  சென்னை உயர் நீதிமன்றம் அக்டோபர் 2009ம் ஆண்டு நிபுணர் குழு (Expert Committee) ஒன்றை அமைத்து வலசை பாதை குறித்து ஆய்வு மேற்கொண்டது. வருவாய்த்துறை, வனத்துறை, விவசாய நிலம், பழங்குடியினர் வசிப்பிடம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி சுமார் 7000 ஏக்கர் நிலப்பரப்பு வலசை பகுதிக்கு தேவை என்று கூறியது.

பல்வேறு இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அந்த நிலத்திற்கான இழப்பீடு தரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2011ம் ஆண்டு கணக்கின் படி, தனியார் நிலங்களுக்கு ரூ. 19.36 கோடி இழப்பீடு தேவை என மதிப்பீடு செய்யப்பட்டது.

மேலும் படிக்க : இன்று இடுக்கி; நாளை நீலகிரியாகவும் இருக்கலாம்: எச்சரிக்கும் காலநிலை மாற்றம்

மக்கள் கூறுவது என்ன?

பொக்காபுரம் பகுதியில் அமைந்திருக்கும் பெட்டக்குறும்பர் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் சிவன் இது குறித்து நம்மிடம் பேசிய போது, ட்ரெக்கிங் கைடாக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய மகன் ஊட்டி கல்லூரியில் படித்து வருகின்றான். எனக்கு வேலை போனதால், என்னுடைய மகனின் படிப்பிற்கான கட்டணத்தை செலுத்துவதும் கடினமாக இருக்கின்றது. யானைகள் மலை அடிவாரத்திலும், பொக்காபுரம் - மசினக்குடிக்கும் இடையில் இருக்கும் பகுதியில் தான் வலசை போகும். ஆனால் தற்போது மொத்த பொக்காபுரத்தையும் யானைகள் வழித்தடமாக அறிவித்துள்ளது வேதனையாக உள்ளது என்று குறிப்பிட்டார். 1500 சதுர அடி என்று குறிப்பிட்டு என்னுடைய வீட்டை “அன்அப்ரூவ்ட் கட்டிடம்” என்று குறிப்பிட்டு பட்டியலிட்டுள்ளனர். யானைகள் வழித்தடம் என்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் எக்கணமும் இங்கிருந்து நான் செல்ல வேண்டிய சூழல் வரும் என்று குறிப்பிட்டார் அவர்.

Why Masinagudi elephant corridor of Tamil Nadu has so many disputes? வலசை பாதையில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ள குறும்பர் பழங்குடியினர் ஒருவரின் வீடு (Express Photo by Nithya Pandian)

வழித்தடமாக குறிப்பிட்டிருக்கும் இடத்தில் பழங்குடி பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. யானைகள் வழித்தடத்தில் எவ்வாறு அரசு பள்ளியை அமைக்கும்? யானைகள் வழித்தடம் இல்லை என்பது உறுதி அடைந்தவுடன் தான் பள்ளிகளையே கட்டினார்கள். எங்களின் பூர்வீக நிலங்களில் இருந்து நாங்கள் வெளியேற்றப்படாமல் இருக்க எங்களுக்கு வன உரிமை பாதுகாப்புச் சட்டம் உதவிகரமாக இருக்கும். ஆனால் பள்ளிகள் நீக்கப்பட்டால் எங்களின் குழந்தைகள் எங்கே சென்று படிப்பார்கள் என்பது கேள்விக் குறியாகின்றது என்று கூறினார் முதுமலை பழங்குடியினர் நலச்சங்கம் செயலாளர் மாதன். இன்று இந்தியாவில் யானைகளை காரணம் காட்டி நாங்கள் வெளியேற்றப்பட்டால், நாளை இந்தியாவில் இது போன்ற சூழலை காரணம் பழங்குடிகளை  வெளியேற்றும் அபாயம் ஏற்படும் என்று தன்னுடைய அச்சத்தை தெரிவித்தார்.

மேலும் படிக்க : சாலைகளற்ற காடுகளில் இருந்து கனவை தேடி பறக்கும் முதல் பறவை ஸ்ரீதேவி…

“முதலில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ளோம் என்று கூறுவதே தவறான சொல்பிரயோகம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இங்கு ஆண்டாண்டு காலமாக மக்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர். யானைகள் பற்றி மக்களுக்கும், மக்களின் செயல்பாடுகள் குறித்து யானைகளுக்கும் நன்றாக தெரியும். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை வாழ்ந்து வந்த மக்கள் பசியாலும், நோயாலும், பஞ்சாத்தாலும் மடிந்து போனார்கள். மிகப்பெரிய மக்கள் வாழிடமாக இருந்த மசினகுடி இன்று சுருங்கிவிட்டது. வாழைத்தோட்டம், செம்புதாநத்தம் போன்ற பகுதிகளில் நடுக்கல்கள் இருப்பது, இங்கு பழநெடுங்காலமாகவே மக்கள் வாழ்ந்ததை உறுதி செய்கிறது. யானை தான் வழியை ஒரு போதும் மறக்காது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. இங்கு யானைகள் மக்களுக்கு தொந்தரவு தராத வகையில் ஓரிடம் விட்டு மற்றொரு இடம் நகர்ந்து செல்கிறது. நாங்கள் “கோ-எக்ஸிஸ்டிங்” என்ற பதத்தில் 100 ஆண்டு காலமாக வாழ்ந்து வருகின்றோம். அப்படி இருக்க மொத்த குடியிருப்பு பகுதியையும் காலி செய்ய சொல்வது ஏன் என்பது தான் புரியவில்லை. உள்ளூர் மக்களுக்கு தெரியாத யானைகள் வாழ்வு சார்ந்த விதம் எப்படி எங்கிருந்தோ வரும் நிபுணர் குழுவுக்கு தெரியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Why Masinagudi elephant corridor of Tamil Nadu has so many disputes? மசினகுடியில் சுற்றித் திரியும் யானைகள்... புகைப்படம் : நரேஷ் பாஸ்கரன்

ரெசார்ட் உரிமையாளர்கள் கூறுவது என்ன?

மசினகுடி லைவ்லிஹூட் அசோசியேசன் அமைப்பின் தலைவர் வர்கீஸிடம் பேசிய போது, ”இங்கு பலரும் அவர்களுக்கு இருக்கும் சொந்த நிலத்திலேயே ரெசார்ட் வைத்து நடத்தி வருகின்றனர். ” என்று அவர் கூறியுள்ளார்.

”யானைகள் வழித்தடத்தில் நாங்கள் ஆக்கிரமிப்பு செய்து ரெசார்ட்களை கட்டியிருப்பதாக குற்றம் சுமத்துகிறார்கள். அடிக்கடி யானைகள் வலசை செல்லும் இடங்களில் சுற்றுலாவுக்கு வரும் நபர்களின் உயிர்களை பணயம் வைப்பது ஆபத்து என்பதை நாங்கள் நன்றாகவே அறிவோம். மேலும், யாரும் வலசை பகுதிகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்யவில்லை. ஒரு முறை பயிர் தாக்குதலுக்கு ஆளானால் நஷ்டத்தை சமாளித்துக் கொள்வார்கள். அனைத்து முறையும் சொந்த உழைப்பு வீணாவதை ஏற்க எவரும் விரும்புவதில்லை” என்று கூறினார்.

”இன்றைய சூழலில் இவர்கள் தரும் நிலத்திற்கான இழப்பீட்டை வைத்து ஒன்றுமே செய்ய முடியாது. பல தலைமுறையாக இங்கே வசித்து வரும் நாங்கள் யானைகள் என்ற பெயரில் பணம் கொடுத்து வெளியேற்றப்படுகிறோம் என்றால், அந்த பணத்தை வைத்துக் கொண்டு எங்களால் ஊட்டி போன்ற இடங்களில் வீடு வாங்குவதோ அல்லது தொழில் துவங்குவதோ கனவிலும் நடவாத காரியம்” என்கிறார் அவர்.

மேலும் படிக்க : கழிவுநீர் ஓடையில் அமையும் அணை; நீலகரியின் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடாக அமையுமா?

யானை வழித்தடங்களாக மாற இருக்கிறது என்பது குறித்த எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. வழித்தடங்கள் குறித்து அறிவித்த பிறகும் கூட பொதுமக்களிடம் கருத்து கேட்கவும் ஒருவரும் வரவில்லை. ஒரு நிபுணர் குழு அமைத்தால் அந்த பகுதியில் வாழும் பழங்குடி இனத்தவர்கள் மற்றும் சொகுசு விடுதி வைத்திருக்கும் உரிமையாளர்களையும் அதில் உறுப்பினர்களாக இணைக்கவும் இல்லை. இப்படி இருந்தால், அவர்களின் கருத்துகள் கேட்கப்படாமலே போகும் என்று பெயர் கூற விரும்பாத மசினக்குடியை சேர்ந்த நபர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

செயற்பாட்டாளர்கள் கருத்து

”2006ம் ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கோலாகலமாக தயாராகியிருந்தது மசினகுடி. அந்த பகுதியில் பெரிய பெரிய ஒலிபெருக்கிகளை வைத்து கூட்டமும், கொண்டாட்டமுமாய் இளைஞர்கள் அந்த பகுதியை பெரும் ஒலி மாசுபாட்டிற்கான இடமாக மாற்றி இருந்தார்கள். இங்கு இருக்கும் பல ரெசார்ட்கள் தங்களின் இணையங்களில், இரவு நேர வனச் சுற்றுலாவுக்கு அழைத்து செல்வோம் என்றே கூறியிருந்த நிலையும் அங்கு இருந்தது. மிகவும் சென்சிட்டிவாக இருக்கும் இடங்களுக்கு சுற்றுலா வரும் வாடிக்கையாளர்கள் பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும். அது தான் அனைத்திலும் மிகவும் முக்கியமானது. ஒரு பழங்குடியினரை அங்கிருந்து எடுத்துவிட்டு யானைகளை பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. மாறாக பழங்குடியினருக்கு தேவையான வசதிகளையும் மேம்பாட்டுகளையும் உருவாக்கி  தருவதற்கான மாற்றமாக நாங்கள்  இதனை காண்கின்றோம். மேலும் இந்த பகுதியில் இருக்கும் ரெசார்ட்கள் உரிமையாளர்களில் ஒருவர் கூட பழங்குடியினர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. யானைகளா, மக்களா என்ற சூழல் வரும் போது மக்களுக்கு தான் துணை நிற்போம். சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு, அவர்களின் வாழ்வதாரம் பாதிப்படையாமல், இங்கு சுற்றுச்சூழல் சுற்றுலா அமையும் பட்சத்தில் இதனை வரவேற்கும் நபர்களில் நான் ஒரு முக்கியமானவராக இருப்பேன்” என்று கூறினார் கோவையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஓசை அமைப்பின் தலைவர் காளிதாஸ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பகிர்ந்து கொண்டார்.

யானை - மனிதர்கள் வாழ்வா சாவா போராட்டம்?

வலசை செல்லும் பாதையில் இருந்து உணவிற்காக யானைகள் கிராமங்களுக்குள் நுழைவது அவ்வபோது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. காப்புக் காடுகள் என்று தான் கூறுகின்றோம். ஆனால் உள்ளே வளர்ப்பதும் வளர்வதும் லாண்டானாவும், பார்த்தீனியமும், தேக்குகளும் தான். யானைகளுக்கான உணவு காடுகளில் இல்லாமல் போவதால் தானே அவை பழ மரங்களையும், தேவையான உணவு செடிகளையும் கொண்டிருக்கும் கிராமப் புறங்களை நோக்கி வருகிறது. யானைகளுக்கு தேவையானதை காட்டில் கிடைக்க வழி செய்யுங்கள். வழித்தடங்கள் அமைதியாக இருக்கும்.

முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது அங்கு பசுமை போர்வைகள் போர்த்தியபடி விரிந்துள்ளது காடு. ஆனாலும் கூட மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத நடவடிக்கை என்கிறார் நீலகிரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் வசந்த் காட்வின். அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டால் அவர்களின் நிலைமை என்னவாகும் என்பதையும் யோசிக்க வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற வகையில் அவர்களை சுற்றியிருக்கும் நிலப்பகுதிகளை மாற்றினால் சிறப்பாக இருக்கும். அரசு அந்த பகுதிகளில் பழத்தோட்டங்கள், மூலிகை தோட்டங்கள் போன்றவற்றை உருவாக்க பொதுமக்களை ஊக்குவிக்கலாம். அதே போன்று மிகவும் அளவான, அதே நேரத்தில் தேவையான கட்டுப்பாடுகளை விதித்து,  சுற்றுச்சூழல் சுற்றுலாவை (Eco tourism) மேம்படுத்தலாம். இங்கு வரும் பயணிகளுக்கும் சுற்றுலாவாசிகளுக்கும் இந்த இடத்தின் அவசியத்தையும் பல்லுயிர் பெருக்க மண்டலம் நம் வாழ்வில் எவ்வளவு முக்கியம் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் சிறந்த தீர்வாக அமையும் என்று கூறியுள்ளார்.

சுற்றுச்சூழல் சுற்றுலா என்று வரும் போது சத்தம், இரைச்சல், சத்தமான பாடல்கள், கொண்டாட்டம் என்ற ஏதும் இருக்க கூடாது. மின்சார வேலி, தடைகள், திறந்த நிலையில் இருக்கும் போர்வெல்கள், சரியான முறையில் கையாளப்படாத கழிவு மேலாண்மை எல்லாமே யானைகளுக்கு ஆபத்தை தான் உருவாக்கும். குறிப்பாக யானைகளுக்கு உணவு வழங்கும் பழக்கத்தையும் சுற்றுலா வருபவர்கள் கைவிட வேண்டும் என்று கூறுகிறார் அவர்.

பார்த்தீனியம் போன்ற வெளிநாட்டு செடிகளை முற்றிலுமாக ஒழித்து, யானைகளுக்கு தேவையான உணவுகள் காட்டிலேயே கிடைப்பதை வனத்துறை உறுதி செய்ய வேண்டும். மேலும் ராட்சத மூங்கில்கள், வெள்ளைநாகை (Anogeisses lattifolia), கரு மருதம் (Terminalia crenulata) போன்ற மரங்களை வளர்க்க மக்களை ஊக்குவிக்க வேண்டும். காட்டில் தாவர உண்ணிகளுக்கு உணவு கிடைத்தால் தான், ஊன் உண்ணிகளுக்கும் உணவு கிடைக்கும். பற்றாக்குறை ஏதும் இன்றி சுற்றுச்சூழல் சமநிலையில் இருக்கும் என்பதையும் அவர் விளக்கினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Nilgiris Wildlife Environment Ecology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment