திமுக தலைவராக பொறுப்பேற்ற கூட்டத்திலேயே மு.க.ஸ்டாலின் அப்படி பேசுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி பெயரைக் குறிப்பிட்டு, அவரது அரசை அகற்றுவோம் என சூளுரைத்தார். பாஜக - திமுக கூட்டணி கனியப் போகிறதா? என பலரும் விவாதித்து வந்த நிலையில் இந்த அதிரடியை மு.க.ஸ்டாலின் நிகழ்த்தியதுதான் குறிப்பிடத்தக்க அம்சம்!
இந்தியாவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான கருணாநிதி மறைவுக்கு, அரசியல் மாச்சர்யங்களை கடந்து மத்திய பாஜக அரசு முக்கியத்துவம் கொடுத்தது. திமுக.வின் அரசியல் ரீதியான ஆதரவை பெறுவதற்கான தந்திரம் அது என்கிற பேச்சும் இருக்கிறது.
கருணாநிதிக்கு புகழ் வணக்கம்: சென்னையில் இன்று தேசியத் தலைவர்கள் சங்கமம் To Read, Click Here
கருணாநிதி மறைவைத் தொடர்ந்து முன்னாள் பிரதமரான வாஜ்பாயின் மரணமும் தேச அளவில் முக்கியத்துவம் பெற்றது. இந்த இரு நிகழ்ச்சிகளிலும் பாஜக, திமுக தலைவர்கள் பரஸ்பரம் அதீத முக்கியத்துவம் கொடுத்து கலந்துகொண்டனர். இது அரசியல் நாகரீகமாக பார்க்கப்பட்டதைத் தாண்டி, திமுக-பாஜக கூட்டணியா? என்கிற கேள்வியைத்தான் அதிகமாக எழுப்பியது.
குறிப்பாக ஆகஸ்ட் 30-ம் தேதி சென்னையில் கருணாநிதி புகழ் வணக்க நிகழ்ச்சிக்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கலந்து கொள்ள இருப்பதாக திமுக தரப்பில் இருந்து அழைப்பிதழ் வெளியானது. இதுதான் கூட்டணி வதந்தியை அதிகமாக ஊதிப் பெருக்கியது. இப்போது, ‘அமித் ஷாவுக்கு பதிலாக நிதின் கட்கரி, முரளிதரராவ் ஆகியோர் பங்கேற்பார்கள்’ என தமிழிசை தெரிவித்திருக்கிறார். திமுக-பாஜக கூட்டணி வதந்தியை சற்று அமுங்கச் செய்திருக்கிறது இந்த அறிவிப்பு!
இதற்கிடையே திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தனது கன்னிப் பேச்சில் பிரதமர் நரேந்திர மோடி பெயரைக் குறிப்பிட்டே தாக்கினார். இந்தியா முழுவதையும் காவி மயமாக்கத் துடிக்கும் மோடி அரசை அகற்ற வேண்டும் என்றார்.
திமுக-பாஜக கூட்டணி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பி, மு.க.ஸ்டாலின் உதிர்த்த வார்த்தைகள் இவை! அதுவும், தலைவர் ஆன உடனேயே பொதுக்குழுவில் இதை பேசினால் அடிமட்டக் கட்சியினருக்கும், அகில இந்தியத் தலைவர்களுக்கும் ஒரே நேரத்தில் இந்தத் தகவல் சென்று சேரும் என கச்சிதமாக கணக்கிட்டே பேசினார் ஸ்டாலின்.
எதற்காக மு.க.ஸ்டாலின் இப்படி காய் நகர்த்துகிறார்? திமுக.வின் வாக்கு வங்கியில் பிரதானமானது, மைனாரிட்டி சமூக வாக்கு வங்கி! அமித் ஷா சென்னைக்கு வருவதாக அழைப்பிதழ் வெளியானதுமே திமுக அனுதாபிகளான சிறுபான்மை பிரமுகர்களே சமூக வலைதளங்களில் திமுக.வின் அணுகுமுறைகளை குறை கூறினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களான வன்னியரசு, ஷா நவாஸ் போன்றோர், ‘திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அந்தக் கட்சி அப்படி நினைக்கிறதா என்று தெரியவில்லை’ என விமர்சித்தார்கள்.
பாஜக-திமுக கூட்டணி அமைந்தால், தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து இன்னொரு வலுவான அணியை கட்டமைப்பது தவிர்க்க இயலாதது. அது திமுக.வின் வெற்றியை வெகுவாக பாதிக்கும் என்பதுதான் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகளும், இன்னபிற சிறுபான்மை அமைப்பு நிர்வாகிகளும் சுட்டிக்காட்டிய அம்சம்!
மு.க.ஸ்டாலின் அதை சரியாக புரிந்து கொண்டே மோடி பெயரை நேரடியாக குறிப்பிட்டு பேசினார். ஆனால் பாஜக.வினரோ, ‘அமித் ஷா வருவதாக கூறிவிட்டு, நிதின் கட்கரியை அனுப்புவதால் ஸ்டாலினுக்கு கோபம்’ என்கிறார்கள்.
திமுக.வின் தலைவராக பொறுப்பேற்ற இடத்தில், தனது முதல் பேச்சில் பிரதமர் பெயரைக் குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் தாக்கியிருக்க வேண்டாம் என்கிற விமர்சனப் பார்வைகளும் இருக்கின்றன. ‘நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை நிதிஷ் குமார், மம்தா, சந்திரபாபு நாயுடு ஆகியோர் இரண்டு ஆப்ஷன்களை கையில் வைத்திருப்பார்கள். அப்போதுதான் தொகுதி பேரத்தில் தேசியக் கட்சிகளை கட்டுக்குள் வைக்க முடியும். மு.க.ஸ்டாலின் தனது கன்னிப் பேச்சின் மூலமாக காங்கிரஸின் பேர வலிமையை அதிகப்படுத்தியிருக்கிறார்.
ராகுல் காந்தி வாழ்த்துச் செய்தி வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின், ‘மதச் சார்பின்மையை பாதுகாக்க ஒன்றுபட்டு நிற்போம்’ என்கிற வாக்கியத்தையும் அதில் இணைத்திருக்கிறார். மம்தா உள்ளிட்ட வேறு யாருக்கு நன்றி சொன்னபோதும், இப்படி கூடுதலாக எதையும் ஸ்டாலின் இணைக்கவில்லை.
பாஜக.வுடன் செல்லும் திட்டமில்லை என்பதை ராகுல் காந்திக்கு அந்த வாக்கியத்தின் மூலமாக மு.க.ஸ்டாலின் புரிய வைத்திருப்பதாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால் அரசியலைப் பொறுத்தவரை, ஒரு சிறு நிகழ்வுகூட பெரும் மாற்றங்களை உருவாக்க வல்லது!
திருநெல்வேலியில் நடைபெற்ற கருணாநிதி புகழ் வணக்கக் கூட்டத்தில் பேசிய தமிழிசை செளந்தரராஜன், ‘பாரத ரத்னாவாக ஜொலிக்கப் போகிறவர்’ என கருணாநிதியை புகழ்ந்தார். கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க மத்திய அரசு தயாராக இருப்பது போன்ற தொனி அவரது பேச்சில் இருந்தது.
மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கேட்டு எடப்பாடி பழனிசாமியின் கைகளைப் பிடித்துக் கேட்டேன் என மு.க.ஸ்டாலின் கூறியது இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது. பாரத ரத்னா கொடுக்க மத்திய அரசு தயாரானால், அது அரசியல் ரீதியாக மாற்றங்களை உருவாக்காது என கூற முடியுமா?
ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்பதை ஒரு சம்பிரதாய கோரிக்கையாக ஆரம்பத்தில் அதிமுக வைத்தது. நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அது கிடைக்காது என்பது அதிமுக.வினருக்கே தெரியும்.
ஆனாலும் கருணாநிதிக்கு பாரத ரத்னா பேச்சு எழுந்ததும், பெரியார்-அண்ணா-எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆகியோருக்கு வழங்க வேண்டும் என தங்கள் கோரிக்கையை புதுப்பித்தது அதிமுக. மத்திய அரசு கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்கத் தயாராகிவிட்டதாக அதிமுக நம்புவதையே இது உணர்த்துகிறது.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, ஆகஸ்ட் 28-ம் தேதி சென்னையில் பாஜக சார்பில் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடப்பட்டிருந்தது. பழைய நிலைமை இருக்குமானால் அதிமுக தரப்பில் முதல்வரோ, துணை முதல்வரோ கலந்து கொண்டிருப்பார்கள். இந்த முறை அமைச்சர் ஜெயகுமார் வந்தார். திமுக சார்பில் கனிமொழியும், விடுதலை சிறுத்தைகள் சார்பில் கட்சித் தலைவர் திருமாவும் வந்தார்கள்.
த.மா.கா, கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ் இரண்டாம்கட்ட நிர்வாகிகளை அனுப்பினர். ஒரு சம்பிரதாய அணுகுமுறையாக இதை கடந்தன, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள்! தமிழகத்தில் பாஜக.வுடன் நெருக்கம் காட்டவே கட்சிகள் மத்தியில் நிலவும் தயக்கத்தை இந்த நிகழ்ச்சிகள் புரிய வைக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.