கருணாநிதி பெயரில் மீண்டும் ஒருமுறை தேசியத் தலைவர்கள் சென்னையில் ஒன்று கூடுகிறார்கள். கருணாநிதியின் புகழ் வணக்கக் கூட்டம் இன்று மாலை நடக்கிறது.
கருணாநிதி என்கிற ஆளுமை தமிழக அரசியல் தளத்தில் உருவாக்கி வைத்திருக்கும் தடங்கள், அசாத்தியமானவை! தேசியத் தலைவர்களை தமிழகத்தில் அதிகம் திரட்டி நிகழ்ச்சிகளை நடத்தியவர் அவர்தான்!
1980-களின் இறுதியில் என்.டி.ராமராவ், வி.பி.சிங் என பலரை சென்னையில் கூட வைத்து, தேசிய முன்னணியை உருவாக்கினார். அதற்கு முன்பாகவே டெசோ என்ற பெயரில் ஈழத் தமிழர்களுக்காக சென்னையில் வாஜ்பாய், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் உள்ளிட்ட தலைவர்களை திரட்டியதும் அவரே!
தேசிய அரசியலில் கருணாநிதியின் பங்களிப்பு! To Read, Click Here
கருணாநிதி மறைவுக்கு பிறகு மு.க.ஸ்டாலினால் அத்தகைய முன்னெடுப்புகளை நடத்த முடியுமா? என்கிற கேள்வி இருந்தது. ஆனால் கருணாநிதி மறைவுக்கு முன்பு, அவர் ஆக்டிவாக இல்லாத காலகட்டத்திலேயே மு.க.ஸ்டாலின் அதற்கான முயற்சிகளை எடுத்துவிட்டார் என்பது நிஜம்!
2017 ஜூன் மாதம் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா கொண்டாட்டத்திற்காக ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்களை சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் திரட்டினார் அவர். இப்போது கருணாநிதியின் புகழ் பாடும் கூட்டமாக இன்று (ஆகஸ்ட் 30) மாலை 4 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் அகில இந்தியத் தலைவர்களை திரட்டியிருக்கிறார்.
2017 ஜூனில் நடந்த கூட்டத்திற்கும், இப்போதைய கூட்டத்திற்கும் உள்ள வித்தியாசம், அப்போது முழுக்க பாஜக.வுக்கு எதிரான கட்சிகளே கலந்து கொண்டன. கூட்டத்தில் அனைவரின் தாளிப்பும் பாஜக மீதுதான் இருந்தது.
பாஜக உறவை புறம் தள்ளினாரா மு.க.ஸ்டாலின்? திமுக ‘மூவ்’ பின்னணி To Read, Click Here
இன்று நடைபெறும் கூட்டத்தில் பாஜக.வுக்கு எதிரான அதே கட்சிகளுடன் பாஜக பிரதிநிதியும் கூடுதலாக கலந்து கொள்கிறார். ஆரம்பத்தில் பாஜக சார்பில் அமித் ஷா கலந்து கொள்வதாக இருந்தது. திமுக தரப்பிலிருந்து வெளியான முதல் அழைப்பிதழில் கலந்து கொள்வோர் பட்டியலில் அமித் ஷா பெயரே முதலிடத்தில் இருந்தது.
ஆனால் அமித் ஷா-வுக்கு பதில் மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை அனுப்ப பாஜக முடிவெடுத்திருக்கிறது. ஏனோ இந்த மாற்றம் நடைபெற்ற சூழலில்தான் பொதுக்குழுவில் பிரதமர் நரேந்திர மோடி பெயரைக் குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின், மத்திய ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்றார்.
அதேபோல இந்த விழா நடைபெறுவதற்கு முன் தினமான ஆகஸ்ட் 29 மாலையில் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் மத்திய பாஜக அரசையும், மாநில அதிமுக அரசையும் வீழ்த்துவதே திமுக.வின் இலக்கு என குறிப்பிட்டார். அமித் ஷா-வுக்கு பதில் பாஜக சார்பில் வேறு பிரதிநிதி பங்கேற்பதை மு.க.ஸ்டாலின் விரும்பாததை இப்படி வெளிப்படுத்துகிறாரா? என்கிற விவாதமும் அரசியல் வட்டாரத்தில் ஓடுகிறது.
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தலைமையில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதிய பொருளாளர் துரைமுருகன் இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றுகிறார். புதிய அழைப்பிதழில் முன்னாள் பிரதமரான தேவகவுடா பெயர் முதலிடத்திற்கு மாறியிருக்கிறது. அடுத்து காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா குழுத் தலைவரான குலாம்நபி ஆஸாத், நிதின் கட்கரி என பெயர்கள் வரிசை கட்டுகின்றன.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், புதுவை முதல்வர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, திரிணாமுல் காங்கிரஸ் ராஜ்யசபைக் குழுத் தலைவர் டெரிக் ஓ பிரையன் ஆகியோர் பேசுகிறார்கள். திமுக சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் நன்றி கூறுகிறார்.
மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் கூட்டம் இது என்பதால், கருணாநிதியின் புகழ் பாடுவதுடன் ஸ்டாலினுக்கு தேசியத் தலைவர்கள் நேரில் வாழ்த்து சொல்லும் கூட்டமாகவும் இது அமைகிறது.