சப்ரீசனை மையமாக வைத்து திமுக.வில் சர்ச்சைகள் முளைப்பது புதிதல்ல. லேட்டஸ்ட் சர்ச்சை, இவ்வளவு நாட்களும் ஸ்டாலினுக்கு பின்புலமாக இருந்த சபரீசன், வெளிப்படையாக அரசியலுக்கு வந்துவிட்டாரா? என்பதுதான்! காரணம், டெல்லியில் சோனியாவை ஸ்டாலின் சந்தித்தபோது, அருகில் சபரீசனும் இருப்பதாக புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சபரீசன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரையின் கணவர்! ஏற்கனவே 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே பயணத்தை ஒருங்கிணைத்ததில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு. அதன் பிறகும் ஸ்டாலின் தொடர்பான நிகழ்ச்சிகள், கட்சிப் பணிகள் ஆகியவற்றில் தன்னை வெளிப்படுத்தாமல் அவர் இயங்கி வருவதாக தகவல்கள் இருந்தன.
இந்தச் சூழலில் ஸ்டாலின் திமுக தலைவர் ஆனபிறகு முதல் முறையாக நேற்று (9-ம் தேதி) டெல்லி சென்றார். முரசொலி மாறனின் மறைவுக்கு பிறகு திமுக.வின் டெல்லிப் பணிகளை டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில் கவனித்து வந்திருக்கிறார்கள். இந்தப் பயணத்தில் தன்னுடன் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஆலந்தூர் பாரதி ஆகியோரை அழைத்துச் சென்றார் ஸ்டாலின்.
டெல்லியில் நேற்று சோனியா, ராகுல் காந்தி ஆகியோரை ஜன்பத் சாலையில் உள்ள சோனியாவின் இல்லத்தில் ஸ்டாலின் சந்தித்தார். சோனியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியதுடன், வருகிற 16-ம் தேதி சென்னையில் அறிவாலயம் வளாகத்தில் நடைபெற இருக்கும் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு சோனியாவை அழைத்தார் ஸ்டாலின்.
அப்போது எடுக்கப்பட்டதாக திமுக சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ புகைப்படங்களில் ஸ்டாலினுடன் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஆலந்தூர் பாரதி ஆகியோர் இருந்தனர். ஆனால் நேற்று இரவு மீடியாக்களில் இன்னொரு புகைப்படம் பளிச்சிட்டது. சோனியா - ராகுல் ஆகியோரிடம் ஸ்டாலின் தனது மருமகன் சபரீசனை அறிமுகம் செய்து வைப்பதாக உள்ள புகைப்படம் அது! கனிமொழியும் அப்போது உடன் இருக்கிறார்.
டெல்லி சென்ற முக ஸ்டாலின் மருமகன் சபரீசன் குறித்த ட்வீட்கள்
சபரீசனை திமுக.வின் டெல்லி முகமாக்க ஸ்டாலின் எடுக்கும் முயற்சியாக இது கருதப்படுகிறது. இதற்கு ரெஸ்பான்ஸாக சமூக வலைதளங்களில் நிறைய கிண்டல்களும் மீம்ஸ்களும் பறக்கின்றன. அவற்றில் சில இங்கே: